விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதே எனது கனவு | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதே எனது கனவு

படிப்பை விட அதிக நாட்டம் விளையாட்டில் தான் எனது குறிக்கோளாக இருந்தது. அதன் பயனாக இன்று நான் படிப்பு, விளையாட்டில் பிரகாசித்து வருகிறேன் என குத்துச்சண்டை வீராங்கனையான செல்வராசா தனுஷா தெரிவித்தார். வட மாகாணத்தின் குத்துச்சண்டை வீராங்கனையான செல்வராசா தனுஷா தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

கே: உங்களைப் பற்றிக் கூறுங்கள்.....

நான் செல்வராசா தனுஷா வவுனியா மறவன் குளத்தில் வசிக்கின்றேன். வவு னியா புதுக்குளம் மகாவித்தியலாயத்தில் எனது உயர்தரக் கல்வியை நிறைவு செய்தேன்.

மேலும் எனக்கு படிப்பை விட அதிக நாட்டம் விளையாட்டில்தான். எந்த நேரமும்  விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற நினைப்பு  மாறாது நான் வகுப்பறையில் இருந்ததை விட மைதானத்தில் இருந்த நேரமே அதிகம் விளையாட்டில் அதித நாட்டம் இருந்தபோதும் நான் கல்வியை கைவிடவில்லை அதுவும் ஓரு புறத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது. ஆனாலும் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதே எனது கனவாகவிருந்தது எனவேதான் விளையாட்டுப் பயிற்சிகளுக்குத் தவறாமல் கலந்துகொள்வது வழமை.

கே:  இவ்விளையாட்டில் நீங்கள் ஈடுபடுவதற்கு உங்களின் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?

எனது முழு நம்பிக்கை, என் பக்கபலம் எல்லாமே எனது குடும்பந்தான். வீட்டில் எவ்வளவுதான் கஷ்டங்கள்  இருந்தாலும் அவற்றை என்னிடம் வெளிக்காட்டாமல் எனக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவர்களே. பெண்களுக்கென வரையறைகள் விதிக்கும் சமூகத்தின் மத்தியில் நான் இக்குத்துச்சண்டை விளையாட்டைத் தேர்ந்தெடுத்தபோதும் என்னை உற்சாகத்துடன் வரவேற்று ஊக்கம் தந்து எனது வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் கொண்டாடியவர்கள்., என்னைத்தட்டிக் கொடுத்தார்கள்,  என் வெற்றிகளை என்னை விட அதிகம் கொண்டாடுபவர்கள் எனது வெற்றிக்குப் பங்குதார்கள் அவர்களே. என் குடும்பத்தினர் என்மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமல்ல எனது ஆசிரியர் மீதுள்ள நம்பிக்கையிலும் என்னை விளையாட்டிற்கு அனுப்பிப் பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

கே:  குத்துச்சண்டையில் பொதுவாகப் பெண்களின் பங்களிப்பு பெருமளவிற்கு இருத்ததில்லை அவ்வாறிருக்கும் போது நீங்கள் இதனைத் தெரிவு செய்ததற்கான காரணம் என்ன?

நான் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது எமது பயிற்றுனர் எமது பாடசாலைக்கு வந்து உடற்கல்வி ஆசிரியரிடம் கலந்துரையாடி விருப்பமானவர்கள் குத்துச்சண்டை விளையாட்டில் பங்குகொள்ளலாம் எனக் கூறியதற்கமைவாக எனது ஆசிரியர் என்னிடம் வந்து நீ கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும், இது உன்னால் முடியும், என்னுடைய விருப்பமும் கூட எனக்கூறினார். அப்போதே நானும் குத்துச்சண்டை விளையாட்டிற்கான பயிற்சியில் இணைந்துகொண்டேன். எமது பாடசாலையில் தினமும் மாலைநேரப் பயிற்சிகள் நடைபெறுவது வழமை சில நாட்கள் பயிற்சிக்குச் சென்றேன். உயர்தர மாணவி என்பதால் பாடசாலை ஆசிரியர்களின் அதிருப்தியின் காரணமாகச் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதன் விளைவாகப் பயிற்சியை இடைநிறுத்திக்கொண்டேன். நான் பயிற்சியை இடைநிறுத்தியது தொடர்பாக என்னுடைய உடற்கல்வி ஆசிரியர் என்னிடம் பல அறிவுரைகள் கூறி என்னைப் பயிற்சிக்கு மீளவும் அழைத்தார். பின்னர் நானும் எனது பிரச்சினையை அவரிடம் கூறியதும் இருவரும் கலந்துரையாடியதில் அதற்கான தீர்வும் கிட்டியது மீளவும் பயிற்சியில் இணைந்துகொண்டேன் அன்று தொடங்கிய என் பயிற்சி இன்னும் முற்றுப் பெறவில்லை.

கே:  நீங்கள் முதன்முதலில் பதக்கம் வென்ற அனுபவத்தினையும் அதைத்தொடர்ந்து நீங்கள் பங்குபற்றிய போட்டிகளைப் பற்றியும் கூறுங்கள்...

நான் முதன்முதலில் பங்குபற்றியது கொழும்பு இங்கிரிய தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில். இது என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம். என் முதல் குத்துச்சண்டை மேடையேற்றமும் அதுவேதான்.

அதில் கிடைத்தது வெண்கலப்பதக்கமே. என்னைவிட என் பயிற்றுவிப்பாளரும் உடற்கல்வி ஆசிரியரும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். என் வித்தியாசமான அனுபவம் அது. முதன்முதலில் குத்துச்சண்டை பற்றி அறிந்து கொண்டேன்
ஆனால் என்னுடைய உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் ஒரு மனக்குறையிருந்தது அதனை அவர் நேரடியாகவே என்னிடம் வெளிப்படுத்தினார். அது நான் தங்கப்பதக்கம் எதிர்பார்த்தேன் இனிமேல் தங்கப்பதக்கம்தான் பெறவேண்டுமெனவும் கூறினார். அப்போது என்னுடைய பயிற்றுனர் எதுவும் கஷ்டபடாமல் சுலபமாகக் கிடைத்தால் அதன் மதிப்புத் தெரியாது என்று கூறினார். அவர் கூறிய வார்த்தை என்மனதில் உறுதியாக நின்றது. அதையடுத்து நான் வெற்றிபெற என்னை அர்ப்பணிக்க வேண்டும் என நினைத்தேன் என்னுடைய முதல் பதக்கம் வெண்கலம் என்றாலும் பின்னர் படிப்படியாக முன்னேறி எனது ஆசிரியர் கோரிய தங்கப்பதக்கத்தையும் வென்றெடுத்துக் காட்டினேன்.

என் ஆசிரியர் என்னை மேலும் ஊக்குவித்துக்கொண்டேயிருந்தார். அடுத்து என்னுடைய இரண்டாவது போட்டி அதுவும் தேசியமட்டப்போட்டியே மாத்தறையில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக உடல்எடையைக் குறைக்கவேண்டுமெனக் கூறியிருந்தார்கள். அதன்படி நான் எனது உடல் எடையைக் குறைத்திருந்தேன். ஆயினும் உடல் எடைப் பரிசோதனை நாளில் பரிசீலிக்கப்பட்டு உடல்எடை போதாது எனக் கூறப்பட்டது ஆகவே குறுகியகால இடைவேளைக்குள்  அதிகரிக்கவேண்டியதாக இருந்தது. எனது பயிற்றுனர் தந்த அறிவுரைகள் மற்றும் யுக்திகளைக் கையாண்டு எடையை அதிகரித்துப் போட்டியில் கலந்து வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றேன்.

எனது மூன்றாவது போட்டி முல்லைத்தீவில் நடைபெற்ற மாகாணமட்டப்போட்டியாகும். இதில் தங்கப்பதக்கம் மட்டுமே வேண்டும் உன்னில் எனக்கு நம்பிக்கை உண்டு எனக் கூறியதுடன் அதில் உறுதியாகவும் இருந்தார். எனது பயிற்றுனர். நானும் உறுதியாக இருந்தேன் அங்கு எமது ஆசை நிறைவேறியது இம்மூன்றாவது போட்டியில் எனக்குத் தங்கப்பதக்கமே கிடைத்தது.

கே:  உங்களின் பயிற்றுனர் பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுங்கள்...

எங்களது பயிற்றுனர் உண்மையில் யாருக்கும் கிடைக்காத ஒரு வரம். அவரது பெயர் எம். நிக்ஷன் ரூபராஜ். இவர் ஒரு சிறந்த பயிற்றுனர் மட்டுமல்லாது சமய சந்தர்ப்பத்தில் சிறந்த தந்தையாகவும் ஒரு நல்ல தோழனாகவும் எம்மை வழிநடத்தியவர். எமது வெற்றியில்  எம்மைவிட எமது பயிற்றுனரே எங்கள்மீது அதிகம் நம்பிக்கை கொண்டவராகவிருந்தார். யாரிடமும் எம்மை விட்டுக்கொடுக்கமாட்டார். எந்நேரமும் எங்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி  எம்மை ஊக்குவித்துக் கொண்டேயிருப்பவர். எமது வெற்றியையும் தோல்வியையும் சமமாகப்பார்ப்பவர். எமது தேவைகளை முன்னறிந்து பூர்த்தி செய்கின்றவர். எங்களை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். எங்களை விளையாட்டிற்கோ அல்லது ஒரு நிகழ்விற்கோ அழைத்துச் சென்றால் நாங்கள் மீளவும் திரும்பும் வரைக்கும் ஒரு தந்தையாக எம்மைப் பாதுகாத்து அழைத்து வருவார். அவரைப்பற்றிக் கூறுவதானால் கூறிக்கொண்டே போகலாம். அந்தளவிற்கு நன்மையான குணாதிசயங்களைக் கொண்டவர். உண்மையில் எங்களது பயிற்றுனர் இல்லையேல் நாங்களும் இல்லை. சரியான தருணத்தில் ஏற்ற, முறையான பயிற்சிகளை வழங்கி எம்மை வழப்படுத்தி வழிப்படுத்தியுள்ளார். எங்கள் பயிற்றுனர் இறைவன் எமக்குத்தந்த வரம்.

கே:  எதிர்காலத்தில் குத்துச் சண்டையில் ஈடுபடவிருக்கும் இளம் சமூகத்தினருக்கு நீங்கள் ஏதாவது கூற விரும்பினால்...

குத்துச்சண்டையில் ஈடுபடவிருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களின் அர்ப்பணிப்பு ஒன்று மட்டுமே எங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். இப்பயிற்சியானது எங்கள் உடற்கட்டமைப்பை விருத்தியடையச் செய்வதுடன் எமது பாதுகாப்பிற்கு  உறுதுணையாகவும் என்றென்றும் சமூகமட்டத்தில் ஒரு மதிப்பையும் உருவாக்கும். குத்துச்சண்டைக்கு வர விரும்பும் வீரர்கள் திடமான மனவுறுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு எங்களின் திறமை மூலம் எங்களை நாம் வெளியுலகிற்கு அறியப்படுத்தலாம்.

தமிழினியன்
யாழ். விளையாட்டு நிருபர்

Comments