42ஆவது ஒப்சேவர்-ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல்; சிறந்த பாடசாலை வீரருக்கான விருது விழா வெற்றிகரமாக நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

42ஆவது ஒப்சேவர்-ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல்; சிறந்த பாடசாலை வீரருக்கான விருது விழா வெற்றிகரமாக நிறைவு

பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறமையை வளர்க்கும் நோக்கில் வருடாவருடம் நடைபெற்று வரும் ஒப்சேவர்- ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் விருது வழங்கும் விழா இவ்வருடமும் 42வது தடவையாக கடந்த வாரம் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறப்பு அதிதியாகவும், பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை அணித் தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரிய ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வருடத்தின் சிறந்த வீராக காலி மஹிந்த கல்லூரியின் நவோத் பரணவிதானவும், சிறந்த வீராங்கனையாக ரத்கம தேவபத்திராஜ வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிஷா தில்ஹாரியும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

1979ம் ஆண்டு ஆரம்பமான இந்த விருது வழங்கும் விழா இம்முறை 42வது தடவையாக நடைபெற்றது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடம் நடைபெற முடியாமற் போன இந்த விருது விழா இம்முறை 2019-2020 ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் தொடர்களின் போது மாணவ, மாணவிகளின் திறமைகளின் அடிப்படையிலேயே இம்முறை விருதுக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டனர்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகி சுமார் 4 தசாப்தங்களாகின்றன. ஆனால் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு திறமை காட்டும் மகளிருக்கான விருது வழங்கும் கைகரியத்தையும் ஒப்சேவர்- ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனங்கள் 2019ம் ஆண்டு ஆரம்பித்தது. முதன் முதலாக மகளிருக்கான ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை ரத்கம தேவபதிராஜ வித்தியாலய மாணவி உமேஷா திமேஷனி பெற்றுக் கொண்டார்.

சுமார் நாற்பது வருடகால வரலாற்றைக் கொண்ட மேற்படி விருது வழங்கும் விழாவில் இதுவரை இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் விருது பெற்றுள்ளனர். 1979ம் ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஒப்சேவர்- ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது பெற்ற ரோயல் கல்லூரியின் ரஞ்சன் மடுகல்ல பின்னாளில் இலங்கை டெஸ்ட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராகத் திகழந்த இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி தீர்ப்பாரளராக கடமையாற்றி வருகிறார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் 1996ம் ஆண்டு இலங்கை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வேளையில் அணிக்கு தலைமை தாங்கிய அர்ஜுன ரணதுங்க இவ்விருதை இரு முறை பெற்றுள்ளார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 1980 மற்றும் 1982ம் ஆண்டுகளில் இவ்விருதுகளைப் பெற்றவராவார்.

இருமுறை இவ்விருதுகளைப் பெற்றோர் வரிசையில் கொழும்பு நாளந்தாக் கல்லூரியிலிருந்து இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சிறந்த களத்தடுப்பு வீரரான ரொஷான் மஹாநாம 1983, 84 களில் இவ்விருதுகளைப் பெற்றார். இவர் பின்னாளில் ஐ. சி. சி.யின் போட்டித் தீர்ப்பாளராகக் கடமையாற்றினார். திலான் சமரவீர ஆனந்தாக் கல்லூரி 1994-,95ம் ஆண்டுகள், லஹிரு பீரிஸ் சென். பீட்டர்ஸ் கல்லூரி, 2004-05ம் ஆண்டுகள், பானுக ராஜபக்ஷ ரோயல் கல்லூரி 2010-/11ம் ஆண்டுகள், சரித் அசலங்க ரிச்மன்ட் கல்லூரி 2015-/16ம் ஆண்டுகளில் இவ்விருதை இரு முறைபெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலகுவில் எட்ட முடியாத சாதனையைப் படைத்துள்ள இலங்கை மாயஜால சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனும் கண்டி சென், அந்தனீஸ் கல்லூரி சார்பாக 1991ம் ஆண்டு ஒப்சேவர்- ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது பெற்றவராவார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பல முறை சிறந்த நடுவராகத் தெரிவு செய்யப்பட்ட குமார் தர்மசேனவும் 1989ம் ஆண்டு நாளந்தாக் கல்லூரி சார்பாக இவ்விருதைப் பெற்றுள்ளார்.

பின்னாளில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அசங்க குருசிங்க, மார்வன் அத்தபத்து, கௌசல்ய வீரரத்தன, கௌசல் லொக்குஆராச்சி. பர்வீஸ் மஹ்ரூப், தினேஸ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல குசல் மெண்டிஸ் போன்ற பிரபல வீரர்கள் ஒப்சேவர்- ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதுகளைப் பெற்று வீரர்களாவர்.

Comments