![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/09/05/a22.jpg?itok=LJ6G7gdV)
உலகமே வனிந்து ஹசரங்காவுடன் பிஸியாகிவிட்டது, அங்கே இன்னொருவன் அணியை தொடர்ச்சியாக ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவரை யாருமே பெரிதளவில் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
முதன்மை துடுப்பாட்ட வீரர்களை வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்து “ஆமாம் சமிந்த வாஸ் தான் எங்களுக்கு பந்துவீச்சு வாத்தியாரு” என்று சொல்லிக் கொள்கிறார் இலங்கையின் வேகப்பந்து புயல் துஷ்மந்த சமீர.
நுவான் குலசேகர – லசித் மலிங்கவிற்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டிற்கு நிரந்தர வேகப்பந்து வீச்சாளர் கிடையாது,
மெத்யூஸ், சண்டிமல், திரிமான்னே போன்றவர்கள் துடுப்பாட்டம் ஃபார்ம் அவுட்டில்தான் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இலங்கையின் பந்துவீச்சை பொறுத்தவரை அங்கு பொருத்தமான ஒரு வேகப்பந்து வீச்சாளரை நிரந்தரமாக இணைத்துக்கொள்ள முடியாதிருந்தது.
இந்த பலவீனம் ஒன்றே போதும் ஒரு அணியை ஆழ்ந்த பாதளத்தில் வீழ்த்தி விட.
“மெக்ராத், ஸ்டெயின், அண்டர்சன்,அக்ரம் போன்ற கோல்டன் ஆம்களை வைத்துக் கொண்டு தென்னாபிரிக்கா, இங்கிலாந்து,பாகிஸ்தான் ஆகிய அணிகள் செய்த சம்பவங்கள் தான் இதற்கு மிகச்சிறந்த ஆதாரம்.”
ஏனென்றால் ஒவ்வொரு அணியினதும் முதுகெலும்பே அவர்களது பிரதான வேகப்பந்து வீச்சாளர் தான். தம்பிக்க பிரசாத் என்ற துல்லியமான ஒரு பந்துவீச்சாளர் வந்தும், அவரது ஆரம்ப பயணமே உபாதைகளுடன் உறவு கொள்ள தன்னை மீட்டுக் கொள்ள தகுதியின்றி அணியிலிருந்து மெதுவாக விலகிக் கொண்டார்.
நுவான் பிரதீப், சுரங்க லக்மல் போன்ற பந்து வீச்சாளர்கள் அனுபவங்களுடன் நீண்ட காலமாக அணியோடு இருந்தும், தம்மை வளப்படுத்தி திடகாத்திரமாக மேலே செல்லவும் முடியவில்லை, அணியின் வளர்ச்சிக்காக பங்கெடுத்துக்கொள்ளவுமில்லை.
அந்த வலிமையற்ற தொடரிலேதான் 2015 ஆம் ஆண்டளவில் இந்த சமீரவும் அணிக்குள்ளே சங்கமமாகியிருந்தான். ஆன போதிலும் அந்தக் காலப்பகுதியில் தன் பந்துவீச்சைக் கொண்டு பெறுமதியான எதனையும் நிகழ்த்திக் காட்டாமலும், பேட்ஸ்மென்களுக்கு ஓட்டங்களை வாரி வழங்கியவனுமாக திடீரென காணாமலாக்கப்பட்டிருந்தான்.
துஷ்மந்த திரும்பவும் அணிக்குள் திரும்புவான் என்றோ, அவன் இன்னமும் கிரிக்கெட் தான் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றோ யாருமே நினைத்திருக்கவில்லை.
“வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு ஆப்பர்ட்யுனிட்டிய நிச்சயமாக வழங்கும்” இங்கே துஷ்மந்த சமீரவுக்கு வழங்கப்பட்ட ஆப்பர்ட்யுனிட்டி தான் ‘எல்பிஎல்’.
அங்கே அவனது நிரூபிப்புக்கள் கச்சிதமாக இருந்தது.
வழக்கமான சமீரவுக்கும் ‘கொழும்பு கிங்ஸ் ஜேர்சியில்’ ஆடிய சமீரவுக்கும் நிறையவே வித்தியாங்கள் தென்பட்டது. அணிக்குள்ளே இடம் கிடைக்காத நாட்களில் எவ்வளவுக்கு தன்னைத் தானே தீட்டிக்கொண்டார் என்பதனை காட்டிக் கொள்வது போல அங்கு பந்துகளை எறிந்தான் கூடவே சராசரியாக விக்கெட்டுகளையும் சரித்துக் கொண்டிருந்தான்.
அங்கே அவன் திறமை நிரூபிக்கப் பட்டிருந்தும் ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் என்ன தெரியுமா?
“இங்க உள்ளூர் வீரர்களுக்கு எதிரா வேணும்னா சூப்பரா பந்து போடலாம் ஆனா சர்வதெச அளவில் அவ்வளவுக்கு நிலைக்காது”
தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக அழைக்கப்பட்டு சர்வதேச பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டார்.
தொடர்ந்து இங்கிலாந்து, பங்களாதேஷ் தொடர்களில் பந்து வீச்சு அணியை குறை கூற முடியாத அந்தளவுக்கு ஒரு பிரதான பந்து வீச்சாளராக கொண்டு நடத்தியிருந்தார்.
அந்த தொடர்களில் ஜேசன் ரோய் விக்கெட்டை வந்த வேகத்தில் தகர்த்தது, லிட்டன் டாஷை டக் செய்தது, பங்களாதேஷ் இறுதி ஒருநாள் போட்டியில் இக்பால், மொஹமட் நைம், சகிப் அல் -ஹசன் என்று முன்னணி வீரர்களை மொத்தமாக அட்டாக் செய்தது என்பதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல்.
இறுதியாக இந்திய அணியுடனான தொடரில் கூட அற்புதமான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
அதிலும் குறிப்பாக 20க்கு20 ஆட்டங்களில் பிரித்வி ஷாவை கோல்டன் டக் செய்தது, தாவானை டக் செய்தது மூலம் ‘சமிந்த வாஸின் மாணவன்’ என்று சமூக வலைதளங்களில் மீம் போட வைத்தது எல்லாமே ரொம்பப் பிரமாதம்.
ஒரு பக்கம் ஹசரங்க – அகில தனஞ்ய கூட்டனி சாகசம் நடத்த மறு முனையில் எக்கானமி ரேட் 6 இனைத் தாண்டாமல் முதல் வரிசையை நிலைகுலைத்துப் போட்ட சமீர.
அவன் வேகத்தை உன்னிப்பாக கவனித்த ஆர்.சி.பி ஐபிஎல் ஆடுவதற்கு அழைத்து விட்டது.
கொஞ்சம் எழுந்தாகத் தெரிகின்ற இலங்கை கிரிக்கெட்டில் அவிஷ்க, கருணாரட்ண, ஹசரங்க, டி சில்வா,சானக போன்ற போராட்டக்காரர் வரிசையில் இந்த துஷ்மந்த சமீர அடித்தளம் போட்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாதது.
இவரோடு இணைப்பாட்டம் போட பினுர ஃபெர்னான்டோ , லகிரு குமார போன்றவர்களை வளப்படுத்தி எடுத்தால் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வெகப்பந்து வீச்சு வண்டி எந்தத் தளர்வுமின்றி வேகமாக ஓட முடியும்.
சமிந்த வாஸ் தானே உள்ளே இருக்கிறார் எல்லாமே நல்லதாக நடக்கும் என்று நம்புவோம்.