லங்கா பிரீமியர் லீக் 2021ஆம் ஆண்டு தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 23ஓட்டங்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை வீழ்த்தியிருப்பதோடு, தொடரின் சம்பியனாகவும் இரண்டாவது முறையாக நாமம் சூடியிருக்கின்றது. இதேநேரம் இப்போட்டியில் தோல்வியடைந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இரண்டாவது முறையாக எல்பிஎல் சம்பியன் பட்டத்தினை நழுவவிட்டிருக்கின்றது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வியாழக்கிழமை (23) நடந்த இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காகப் பெற்றார்.
இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதல் குவாலிபையர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியினை வீழ்த்தி பெற்றிருக்க, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த ஜப்னா கிங்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி வீரர்களை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பினை தக்கவைத்திருந்தது.
தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியிருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்திருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் 18பந்துகளில் 3சிக்ஸர்கள் மற்றும் 3பௌண்டரிகள் அடங்கலாக 35ஓட்டங்கள் குவித்து ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறியிருந்தார்.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வீரர்கள் சில களத்தடுப்பு தவறுகளை மேற்கொள்ள, வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ அதிரடி அரைச்சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.
அவிஷ்க பெர்னாண்டோ தவிர கொஹ்லர்-கெட்மோரும் ஜப்னா கிங்ஸ் அணிக்கு அரைச்சதம் ஒன்றுடன் உதவ, சொஹைப் மலிக் மற்றும் அணித்தலைவர் திசர பெரேரா ஆகியோரின் இறுதிநேர அதிரடியோடு ஜப்னா கிங்ஸ் அணி 20ஓவர்கள் நிறைவில் 3விக்கெட்டுக்களை இழந்து 201ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கொஹ்லர்-கெட்மோர் 41பந்துகளுக்கு 3சிக்ஸர்கள் மற்றும் 2பௌண்டரிகள் அடங்கலாக 57ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேவேளை சொஹைப் மலிக் 2சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 11பந்துகளில் 23ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, திசர பெரேராவும் 2சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 9பந்துகளில் 17ஓட்டங்களை எடுத்திருந்தார்.
மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்து வீச்சு சார்பில் மொஹமட் ஆமிர், நுவான் துஷார மற்றும் சமிட் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202ஓட்டங்களை 20ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு, தனுஷ்க குணத்திலக்க ஆரம்பவீரராக அட்டகாசமான ஆரம்பத்தினை வழங்கினார்.
இதனையடுத்து தனது தரப்பின் ஓட்டங்களை மிக விரைவாக அதிகரிக்க உதவியிருந்த தனுஷ்க குணத்திலக்க வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறும் போது அரைச்சதத்துடன் வெறும் 21பந்துகளில் 3சிக்ஸர்கள் மற்றும் 7பௌண்டரிகள் அடங்கலாக 54ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனுஷ்க குணத்திலக்க ஆட்டமிழந்த பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சற்று தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும், மற்றைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் சிறந்த முறையில் ஓட்டங்கள் பெற்று கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை வெற்றியின் பக்கம் கொண்டு செல்ல முயற்சித்தார்.
இந்தநிலையில் போட்டியின் 11ஆவது ஓவரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி அதன் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷவின் விக்கெட்டினை, அவர் 14ஓட்டங்களை பெற்ற நிலையில் பறிகொடுத்தது. அவரின் விக்கெட்டின் பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு நம்பிக்கையாக இருந்த குசல் மெண்டிஸும் தனது விக்கெட்டினை தேவையின்றிய ரன் அவுட் ஒன்றில் பறிகொடுத்தார்.
மெண்டிஸின் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இறுதியில் 20ஓவர்களுக்கு 9விக்கெட்டுக்களை பறிகொடுத்து 178ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வயினைத் தழுவியது.
கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் 28பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3பௌண்டரிகள் அடங்கலாக 39ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 2விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, மகீஷ் திக்ஷன, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் ஒரு விக்கெட் வீதம் எடுத்திருந்தனர்.
இரண்டாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி வென்றதுடன், இரண்டு இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியால் கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை. இதே நேரம், இந்த போட்டித்தொடரில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இறுதிப்போட்டிக்கான சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.