மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று பல்லேகலவில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று பல்லேகலவில் ஆரம்பம்

சுற்றுலா சிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இன்று கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இலங்கை அணியில் அண்மையில் முடிவுற்ற எல்.பி.எல். தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட ஜெனித் லியனகே, வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார, கலன துஷார, காமில் மிஷார, சாமிக குணசேகரவும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் ஆரம்ப அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேராவும், சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹஸரங்கவும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். 18வீரர்கள் உள்ளடக்கிய சிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கை குழாமில் துடுப்பாட்ட வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ் சுழற்பந்து வீச்சாளர்களான அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன் உள்வாங்கப்படவில்லை. கடைசியாக இலங்கை அணிக்கு விளையாடிய கமிது மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ, நுவன் பிரதீப், லஹிரு மதுஷங்க, புலின தரங்க ஆகியோரும் உள்வாங்கப்படவில்லை. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தசுன் சானகவும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவும் வைத்திய ஆலோசனையின் பின் அணியில் இடம்பெறவுள்ளனர். நீண்டகால இடைவெளிக்குப் பின் சுழற்பந்துவீச்சாளர் ஜெப்ரி வெண்டர்ஸே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மேற்படி குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அறிமுக வீரர் ஜனித் லியனகே ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் அவர்களுக்குப் பதிலாக கடந்த வருடம் போட்டித் தடைக்குட்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாடும் 11அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த திங்களன்று இலங்கை வந்த சிம்பாப்வே அணியின் தலைவராக கிரேக் எர்வின் செயற்படுகிறார். இவர்கள் கடந்த 14ம் திகதி கண்டியில் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர். உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் சுற்றுக்காக நடைபெறும் இத்தொடரில் பங்குகொள்ளும் சிம்பாப்வே அணி 4வருடங்களுககுப் பின் இலங்கை மண்ணில் விளையாடவுள்ளது. அவ்வணி கடைசியாக 2017ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து 5போட்டிகள் கொண்ட அத்தொடரை 3-2என்ற வகையில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

சுமார் 40வருட கால வரலாற்றைக்கொண்ட இலங்கை-சிம்பாப்வே ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை 57போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 44போட்டிகளில் இலங்கை அணியும், 11போட்டிகளில் சிம்பாப்வே அணியும் வெற்றிபெற்றுள்ளன. 2போட்டிகள் கைவடப்பட்டுள்ளன. ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக 2011ம் ஆண்டு பல்லேகல மைதானத்தில் இலங்கை அணி பெற்ற 372ஓட்டங்களே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 2004ம் ஆண்டு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் சிம்பாப்வே அணி பெற்ற 35ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு வீரர் பெற்ற கூடிய மொத்த ஓட்டங்களாக சிம்பாப்வே அணி வீரர் அன்றூ பிளவர் 28போட்டிகளில் பெற்ற 919ஓட்டங்ளே பதிவாகியுள்ளது. கூடிய மொத்த விக்கெட்கள் சாய்த்தோரில் இலங்கை அணியின் சுழற்பந்துவிச்சாளர் முத்தையா முரளிதரன் 31போட்டிகளில் 59விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலுள்ளார்.

தனிநபர் கூடிய ஓட்டங்களாக 2011ம் ஆண்டு பல்லேகல மைதானத்தில் திலக்கரத்ன டில்ஷான் பெற்ற 144ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சாக 2001ம் ஆண்டு சிம்பாப்வே ஹராரே மைதானத்தில் சமிந்த வாஸ் 19ஓட்டங்களுக்கு 8விக்கெட்கள் கைப்பற்றியதே பதிவாகியுள்ளது. ஒரு தொடரில் அதிக ஓட்டங்களாக தனுஷ்க குணதிலக்க 2017ம் ஆண்டு 5போட்டிகளில் 323ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தங்களை செய்யும் வகையில் பல அணிகளும் ரி/20தொடர்களும், சர்வதேச டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடர் போட்டிகளும் நடைபெற்றுவருவதுடன் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் அணிகள் எவை? தகுதிச் சுற்றுத் தொடரில் பங்கு பற்றி சுப்பர் சுற்றுக்குத் தெரிவாகும் அணிகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர்களும் நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற நெதர்லாந்து-தென்னாபிரிக்காவு க்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடருக்குப் பின் இம்மாதம் முதல் பல நாடுகள் பங்குகொள்ளும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படுவதற்கான போட்டிக ளாகவே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இன்று ஆரம்பமாகும் இல ங்கை--சிம்பாப்வே அணிகளுக்குடையிலான தொடரும் உலகக்கிண்ணத்துக்கான தெரிவு போட்டியில் முன்னிலை பெறுவதற்கான முக்கியமான ஒரு தொடராக அமைந்துள்ளது.

அடுத்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு 8அணிகள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதற்காக 13அணிகள் போட்டி போடுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் 8இடங்களில் வரும் அணிகள் நேரடியாகத் தெரிவாவதுடன் ஏனைய நான்கு அணிகளைத் தெரிவு செய்வதற்காக 2023ம் ஆண்டு நடுப்பகுதியில் சிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிச் சுற்றில் பங்குகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். போட்டியை நடாத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணி ஏற்கனவே தெரிவாகியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 42புள்ளிகளுடன் 6வது இடத்திலிருக்கும் இலங்கை அணிக்கு இவ்வருடத்தில் இன்னும் மூன்று போட்டித் தொடர்களில் ஒன்பது போட்டிகள் உள்ளன.

இப்புள்ளிப்பட்டியலின் பிரகாரம் இதுவரை அதிக போட்டிகளில் விளையாட்டியுள்ள அணிகளில் இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை அணிகள் முன்னிலை பெறுகின்றன. இவ்வணிகள் 15போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இதில் இங்கிலாந்து அணி 09வெற்றிகளைப் பெற்று முதலிடத்துள்ளது. அத்துடன் பங்களாதேஷ் அணியும் இதுவரை 12போட்டிகளில் விளையாடி 8வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளது. எனவே இவ்விரண்டு அணிகளும் இறுதி 8அணிகளுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.

6வது இடத்திலுள்ள இலங்கை அணிக்குப் பின்னாலுள்ள பாகிஸ்தான், மேற்கிந்தித்தீவுகள், நியூலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் இலங்கையை முந்திச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே இலங்கை மீத முள்ள 9போட்டிகளின் முடிவுகளிலேயே அவ் அணியின் உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்புத் தங்கியுள்ளது.

கடந்த வருடத்தில நடைபெற்ற போட்டித் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 0-3, பங்களாதேஷுக்கு எதிராக 1-2, இங்கிலாந்துக்கு எதிராக 0-2, இந்தியாவுக்கு எதிராக 1-2என்ற கணக்கில் தோல்வியுற்றதுடன் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் மாத்திரமே 2-1என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 15போட்டிகளில் 04வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது.

இலங்கை அணி இவ்வருடத்தில் மூன்று தொடர்களில் மோதவுள்ளன. அதில் முதலாவது தொடர் இன்று சிம்பாப்வேயுடனான மூன்று போட்டிகள் கொண்ட தொடரும், அடுத்து ஆப்கானிஸ்தானுடனான 3போட்டிகள் கொண்ட தொடரும் இலங்கையில் நடைபெறவுள்ளதால் அத்தொடர்கள் இலங்கை அணிக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடனான 3போட்டிகள் கொண்ட தொடர் இலங்கைக்கு மிகவும் கடினமான தொடராகும். அத்தொடர் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளமை மேலும் சிக்கலானது என்றே கருதப்படுகிறது.

ஒருநாள் தொடர் விதிகளுக்கு அமைய ஒரு போட்டியை வென்றால் 10புள்ளிகளும், முடிவுகள் கிடைக்காத போட்டிக்கு 5புள்ளகளும் வழங்கப்படும். எனவே இலங்கை அணிக்கு மூன்று தொடர்களிலும் 9போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் 90புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள 42புள்ளிகளுடன் மொத்தமாக 132புள்ளிகள் கிடைக்கும்.

இதேபோல் இவ்வருட ஆரம்பம் முதல் ஏனைய நாட்டு அணிகளும் பல தொடர்கள் நடைபெறவுள்ளதால் இப்புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை தலா மூன்று போட்டிகளிலேயே விளையாடி அம்மூன்றையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே அவ்வனிகளுக்கு இன்னும் ஐந்தாறு தொடர்கள் மீதமுள்ளதால் சுப்பர் சுற்றிக்குத் தெரிவாகும் அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments