மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி இன் 19வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் அணி 238ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
இதன்மூலம் 16அணிகள் பங்குகொண்ட இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் 19வயதின்கீழ் அணி 5ஆவது இடத்தையும், இலங்கை 19வயதின்கீழ் அணி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
அண்டிகுவாவில் உள்ள சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் கடந்த (03) நடைபெற்ற இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும், பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய முஹம்மத் ஷெஸாத் – ஹஸீபுல்லாஹ் கான் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டம் புரிந்து 134ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் முஹம்மத் ஷெஸாத் ரவீன் டி சில்வாவின் பந்துவீச்சில் 73ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹஸீபுல்லாஹ் கான் – காசிம் அக்ரம் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்து சதமடித்து அசத்தினர்.
இதில் ஹஸீபுல்லாஹ் கான் 136ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த அணித்தலைவர் காசிம் அக்ரம் ஆட்டமிழக்காமல் 135ஓட்டங்களை எடுத்தார்.
பாகிஸ்தான் அணித்தலைவர் காசிம் அக்ரம் 65பந்துகளில் சதம் அடித்து இளையோர் உலகக் கிண்ண போட்டிகளில் அதிகவேக சதம் எனும் உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதேபோல ஹஸீபுல்லாஹ் கான், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 2ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன்மூலம் பாகிஸ்தான் 19வயதின்கீழ் அணி, 50ஓவர்கள் நிறைவில் 3விக்கெட்டுகளை மட்டும் இழந்து 365ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2விக்கெட்டுகளையும், ரவீன் டி சில்வா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். எனினும், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 17விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகேவினால் இந்தப் போட்டியில் எந்தவொரு விக்கெட்டினையும் கைப்பற்ற முடியாமல் போனது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19வயதின்கீழ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 34.2ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 127ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இலங்கை 19வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் 9ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வினுஜ ரன்புல் அரைச்சதம் அடித்து 58பந்துகளில் 53ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, அணித்தலைவர் துனித் வெலால்கே தனது பங்கிற்கு 40ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.
மறுபுறத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரை சதீஷ ராஜபக்ஷ மாத்திரம் 16ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் 19வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் சதமடித்து அசத்தியிருந்த அணித்தலைவர் காசிம் அக்ரம் 37ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் இளையோர் உலகக் கிண்ண வரலாற்றில் சதமடித்து, 5விக்கெட் குவியலைப் பதிவுசெய்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.
இதுதவிர பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு தமது பந்துவீச்சு மூலம் அவைஷ் அலி, ஸீசான் சமீர், அப்பாஸ் அலி மற்றும் மெஹ்ரான் மும்டாஸ் ஆகிய வீரர்களும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கினர்.
இறுதியில் 238ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் 19வயதின்கீழ் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 5ஆவது இடத்தையும், தோல்வியைத் தழுவிய இலங்கை 19வயதின்கீழ் அணி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணி சார்பில் சகலதுறையிலும் பிரகாசித்திருந்த அந்த அணியின் தலைவர் காசிம் அக்ரம் தெரிவாகினார்.