சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்: வட, சப்ரகமுவ மாகாணங்கள் முன்னிலையில்! | தினகரன் வாரமஞ்சரி

சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்: வட, சப்ரகமுவ மாகாணங்கள் முன்னிலையில்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் விளையாட்டுக் கொள்கைகளுக்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான நடைபெறும் சுதந்திரக்கிண்ண உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டித் தொடர் கடந்த மாதம் குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் ஆரம்பமானது. எல்லாக் கிராமங்களிலுள்ள உதைபந்தாட்ட சிரேஷ்ட வீரர்களையும் இளம் வீரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமங்களிமுள்ள 19 வயதின் கீழ், 21 வயதின் கீழ் பாடசாலை விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் எட்டு அணிகள் ஏழு கட்டங்களாக முக்கிய நகரங்களை மையப்படுத்தி போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த வாரம் பதுளை நகரில் 4ம் கட்ட ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. எனவே ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாடிள்ள நிலையில் வடக்கு, சப்ரகமுவ, கிழக்கு அணிகள் தோல்விகளைச் சந்திக்காமல் முன்னிலையிலுள்ளது. வட மாகாண அணி தான் சந்தித்த 4 போட்டிகளில் மூன்று வெற்றிகள் ஒரு சம நிலை முடிவுடன் முதலிடத்திலும், 2 வெற்றிகள், 2 சமநிலை முடிவுடன் சப்ரகமுவ அணி இரண்டாவது இடத்திலும், ஒரு வெற்றி, மூன்று சமநிலை முடிவுகளுடன் கிழக்கு மாகாண அணி மூன்றாவது இடத்திலுமுள்ளன. அதிகமாக தேசிய அணி வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேல் மாகாண அணி தொடரில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதுடன் இரு போட்டிகளில் தோல்வியுற்றது. இன்னும் 3 கட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் இன்னும் 3 போட்டிகளில் மோதவுள்ளதால் இறுதி நேரத்தில் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்படவாய்புள்ளது.

இத்தொடரில் வட மாகாண அணி வீரர் எஸ். நிதர்ஷன் ஒரு ஹெட்ரிக் கோல்களுடன் 4 கோல்களைப் பெற்று முதலிடத்திலுள்ளார். சப்ரகமுவ மாகாண அணி வீரர் மொஹம்மட் முஸ்பீக், மேல் மாகாண வீரர் மொஹம்மட் ஹஸ்மீர், தென்மாகாண அணி வீரர் சுபுன் தனஞ்சய ஆகியோர் தலா மூனறு கோல்களைப் பெற்றள்ளனர். மேல் மாகாண அணி வீரர் நவீட் ஜூட் மற்றும் ஊவா மாகாண அணியின் இளம் வீரர் பிராஸ் சஹீர் ஆகியோர் தலா இரு கோல்கள் வீதம் பெற்றுள்னர்.

கடந்த மாதம் 25ம் திகதி மாலையில் தொடரின் அங்குரார்ப்பண போட்டியில் கிழக்கு- மத்திய மாகாண அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் விறுவிறுப்பாக மோதிக்கொண்டன. இரு அணி வீரர்களும் எதிரணியின் கோல் எல்லையை பல முறை ஆக்கிரமிப்புச் செய்தும் கோல் பெற முடியவில்லை. மத்திய மாகாண அணி கோல் காப்பாளர் கிஹான் குருகுலசூரிய எதிரணியின் கோல் பெறும் பல வாய்ப்புக்களை லாவகமாகத் தடுத்தார். கிழக்கு மாகாணத்துக்காக விளையாடிய தேசிய அணி வீரர்களான மொஹம்மட் ரிப்கான், முஸ்டாக்கும் சிறப்பாக விளையாடினர். இறுதியில் இரு அணிகளாலும் கோல் பெறமுடியாமல் சமநிலையில் முடிவுற்றது.

அன்று இரவு நடைபெற்ற ரஜரட்ட அணிக்கும் ஊவா அணிக்குமிடையில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் ஊவா மாகாணம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்ததது. ஊவா அணியின் இளம் வீரரான பதுளை ஊவா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 18 வயது பிராஸ் ஷஹிர் போட்டியின் 10வது நிமிடத்தில் தனது அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக்கொடுத்தார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒவ்வொரு அணியிலும் 19 வயதுக்குட்ட வீரர் ஒருவர் கட்டாயமாக விளையாட வேண்டும் என்ற விளையாட்டு அமைச்சின் நிபந்தனையின் கீழ் இளம் வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படடுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் முடிவுற்ற சுப்பர் லீக் உதைபந்தாட்ட லீக் தொடரில் மலையக அணிக்காக விளையாடினார். சிறந்த வீரரான இவர் இளவயது முதல் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தொடரின் மூன்றாவது போட்டி வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளாகும் கோல் பெற முடியாது போக சமநிலையில் முடிவுற்றது.

மேல் மற்றும் தென் மாகாண அணிகளுக்கிடையிலான தொடரின் 4வது போட்டி குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் முதல் பாதி முடிவில் மேல்மாகாண அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. போட்டியின் 16 நிமிடத்தில் மேல்மாகாண அணி வீரர் முஹம்மட் ஹஸ்மீர் முதல் கோலை பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாவது பாதியில் மேல் மாகாண அணி வெற்றி பெறும் என்ற நிலையில் இறுதி நேரத்தில் தென் மாகாண அணியில் மாற்றுவீரராக மைதானம் நுழைந்த எச். எஸ். ஷசித் 89வது நிமிடத்தில் தமது அணிக்காக ஒரு கோலைப் பெற்றதன் மூலம் அப்போட்டியும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

மொத்தம் எழு கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தொடரில் குருநாகலில் நடைபெற்ற முதலாவது கட்டத்தில் ஊவா மாகாண அணி மாத்திரமே வெற்றிபெற்றது.

2ம் கட்டப் போட்டிகள் கடந்த 29ம் 30 திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்திலும், அரியாலை மைதானத்திலும் நடைபெற்றன. மேல்மாகாண-மத்திய மாகாணங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 5வது போட்டியில் மேல்மாகாண அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பாணந்துறை லைசியம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் 18வயது ஸஜுட் ஜாசூக் போட்டியின் 43 நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியில் 1--0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற மேல் மாகாண அணி இரண்டாவது பாதியிலும் 49 நிமிடத்தில் மொஹம்மட் ஹஸ்மீர், (இது இவர் இத்தொடரில் பெறும் 2வது கோல்) 90வது நிமிடத்தில் நவின் ஜூட் ஆகியோர் தமது அணிக்கான கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

யாழ்ப்பாணம் அரியாலை மைதானத்தில் நடைபெற்ற தென்-சப்ரகமுவ மாகாண அணிகளுக்கிடையிலான போட்டியில் சப்ரகமுவ மாகாண அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியைப் பதிவு செய்தது. முதல் பாதியில் சரி சமமாக மோதிக்கொண்ட இரு அணியினரும் கோலுக்கான வாய்ப்பினைப் பெறவில்லை. 2ம் பாதியில் 58ம் நிமிடத்தில் மொஹம்மட் முஸ்பீக் தமது அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

போட்டித் தொடரின் 7வது போட்டியாக யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் ஊவா- வடக்கு மாகாண அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் வடக்கு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்தர உதைபந்தாட்டப் போட்டியொன்றில் மண்ணின் மைந்தர்கள் விளையாடும் போட்டியாக இது அமைந்தது. தமது சொந்த மண்ணில் தமது இரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் போட்டியின் 35வது நிமிடத்தில் அவ்வணி இளம் வீரர் கே. தெனுஷான் தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து முதல் பாதியில் தமது அணி முன்னிலை பெற உதவினார். சுறுசுறுப்பாக நடைபெற்ற இரண்டாம் பாதியில் 71வது நிமிடத்தில் வி. கீதான் தனது அணிக்காக இன்னொரு கோலைப் பெற வடமாகாண அணி 2--0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. அன்று அரியாலை மைதானத்தில் நடைபெற்ற ரஜரட்ட மற்றும் கிழக்கு மாகாண அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி 1--1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. போட்டியின் 15 நிமிடத்தில் மொஹம்மட் பியாஸ் கிழக்கு மாகாண அணிக்கான கோலைப் பெற்றுக்கொடுத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் 73வது நிமிடத்தில் ரஜரட்ட வீரர் என். என். மொஹம்மட் அவ்வணிக்கான கோலைப் பெற்றுக்கொடுக்க இறுதியில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாம் கட்ட போட்டிகள் முடிவுற்ற நிலையில் ஒரு வெற்றி ஒரு சமநிலையுடன் மேல்மாகாண அணி முதலிடத்திலும், ஒரு வெற்றி ஒரு சமநிலையுடன் வடமாகாண அணி இரண்டாமிடத்திலும், ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் ஊவா மாகாண அணி மூன்றாவது இடத்திலிருந்தன.

இத்தொடரின் மூன்றாவது கட்டம் திருகோமலை, கந்தளாய் லீலாரத்தன நகரசபை மைதானத்திலும், மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் நடைபெற்றது. இத்தொடரின் 9வது ஆட்டடாக ஊவா-மத்திய மாகாண அணிகளுக்கிடையிலான போட்டி கந்தளாயில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறவில்லை. இரண்டாவது பாதியில் 63வது நிமிடத்தில் ஊவமாகாண அணியின் இளம் வீரர் பிராஸ் ஷாஹிர் கோல் அடித்து தனது அணி முன்னிலை பெற உதவினார். இக்கோல் பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் போது எதரணியுடன் ஏற்பட்ட உரசலில் பிராஸ் சிவப்பட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவர பூமியாக மாறியது மைதானம். பின்னர் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் 4 ஊவா வீரர்களுக்கும், 2 மத்திய மாகாண வரர்களுக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

போட்டியின் நேர முடிவின் பின் 27 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதன் போது ஊவா மாகாணம் 7 பேருடன் மத்திய மாகாணம் 9 பேருடனும் விளையாடிது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மத்திய மாகாண அணி மேலதிக நேரத்தின் 10வது நிமிடத்தில் மொஹம்மட் சிமாக், இறுதி நேரத்தில் மொஹம்மட் மிஹ்ரான் ஆகியோர் கோல்கள் பெற்றனர். இறுதியில் மத்திய மாகாண அணி 2--1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஊவா மாகாண அணியின் பிராஸ் ஷாஹிர், மொஹம்மட் அப்ரான், கவிந்து ரவிஹங்ச, ஹெரந்த நந்தனவுக்கும், மத்திய மாகாண அணியின் எஸ். கே. உமைர், எச். எச். மொஹம்மட் ஆகியோருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 10வது அட்டமாக வடக்கு மற்றும் தெற்கு அணிகள் மோதின. இப்போட்டியில் வடக்கு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தொடரின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. முதல் பாதியில் 7வது நிமிடத்தில் தென்மாகாண அணியின் சுபுன் தனன்ஜய முதல் கோலைப் பெற்றார். 32 வது நிமிடத்தில் வட அணியின் எஸ். நிதர்சன் பதில் கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்ற ரீதியில் முதல் பாதி முடிவடைந்தது. விறுவிறுப்பாக ஆரம்பமான இரண்டாம் பாதியில் 52, 69ஆவது நிமிடங்களில் மீண்டும் இரு கோல்களை எஸ். நிதர்சன் பெற்றுக்கொடுத்து வடக்கு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது இத் தொடரின் பெற்ற முதல் ஹெட்ரிக் கோலாகும்.

தொடரின் 11வது போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மேல்மாகாணம்- வடமேல் ரஜரட்ட அணிகள் மோதின. இதில் ரஜரட்ட அணி 3--2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இத் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது அவ்வணி. ரஜரட்ட அணியின் அஷிக்குர் ரஹ்மான் போட்டியின் 14வது நிமிடத்தில் கோல் அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார். அவ்வணி 17வது நிமிடத்தில் நெத்ம மல்ஷானும் 33வது நிமிடத்தில் மொஹம்மட் இன்பாஸ் கோல்களைப் பெற்றதுடன் மேல் மாகாண அணியின் சுபுன் நாலக போட்டியின் 39 வது நிமிடத்திலும், மொஹம்மட் அஸ்மின் 79வது நிமிடத்திலும் தமது அணிக்கான கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர். இது இத் தொடரில் அஸ்மின் பெறும் மூன்றாவது கோலாகும். மேல் மாகாண அணியில் அநேக வீரர்கள் தேசிய அணி வீரர்கள் என்றாலும் ரஜரட்ட அணியிடம் தோல்வியடைந்துள்ளது விளையாட்டு விற்பன்னர்களின் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

தொடரின் 12வது போட்டி கந்தளை லீலாரத்ன நகர சபை மைதானத்தில் சப்ரகமுவ -கிழக்கு மாகாண அணிகளுக்கிடையில் நடைபெற்றது. கடுமையாக மோதிக்கொண்ட இப்போட்டியில் இறுதிவரை எந்த அணியும் கோல் பெறாததால் அப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி நடைபெற்ற இத்தொடரின் 3ம் கட்ட சுற்றுப் போட்டிகளின் முடிவில் வடக்கு மாகாண அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள், 1 சம நிலை முடிவுடன் முன்னிலை பெற்றது. அவ்வணியின் எஸ். நிதர்சன், மேல் மாகாண அணி வீரர் மொஹம்மட் அஸ்மின் தலா மூன்று கோல்கள் வீதம் அடித்து முன்னிலையில் உள்ளனர்.

சுதந்திரக் கிண்ண மாகாணங்களுக்கிடையிலான தொடரின் 4ம் கட்ட சுற்றுப்போட்டிகள் ஊவா மாகாண பதுளை வின்சன்ட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற தொடரின் 13வது ஆட்டத்தில் வடக்கு- மத்திய மாகாண அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மாகாண அணி வெற்றிபெற்றது.

இவ்வாட்டத்தில் முதல் பாதி சமநிலையில் முடிவுற விறுவிறுப்பாக நடைபெற்ற 2வது பாதியில் 68வது நிமிடத்தில் வட மாகாண அணியின் எஸ். நிதர்சன் கோல் கம்பத்துக்கருகில் உயரே வந்த பந்தை தலையால் மோதி தனது அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக்கொடுத்தார். இது இத் தொடரில் இவர் பெற்ற 4வது கோலாகும். நிதர்சன் இத் தொடரில் இதுவரை அதிக கோல் பெற்ற வீரராகவும் திகழ்கிறார். வட மாகாண அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் 3 வெற்றிகள், ஒரு சமநிலையுடன் 9 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.

இதே மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 14வது போட்டியில் மேல் மாகாண அணி சப்ரகமுவ மாகாண அணியிடம் 2--1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. முதல் பாதி ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சப்ரகமுவ அணி வீரர் மொஹம்மட் முஷ்பீக் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். 2வது பாதியில் 69வது நிமிடத்தில் மீண்டும் முஷ்பீக் தனது அணிக்கான 2வது கோலையும் பெற்றுக்கொடுக்க, போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் மேல் மாகாண அணி வீரர் நவீட் ஜூட் தனது அணிக்கான கோலைப் பெற்றுக்கொடுக்க இறுதியில் சப்ரகமுவ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

தொடரின் 15வது போட்டியில் கிழக்கு மாகாண- ஊவா மாகாண அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கிழக்கு மாகாண அணி 1--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 19வது நிமிடத்தில் கிழக்கு அணி வீரர் லினூஸ் கான் தனது அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக்கொடுத்தார். இத்தொடரின் 4ம் கட்டத்தின் இறுதிப் போட்டியான தென்மாகாண- ரஜரட்ட அணிகளுக்கிடையில் பதுளை வின்சன்ட் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 16வது போட்டியில் தென்மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை தென் மாகாண அணி பெற்றுக்கொண்டது. தென் மாகாண அணிசார்பாக சுபுன் தனஞ்சய போட்டியின் 5வது நிமிடத்திலும், 2வது பாதியின் 4வது நிமிடத்தில் தமது அணிக்கான இரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தார். போட்டியின் இறுதி நேரத்தில் ரஜரட்ட அணியின் சரித்த ரத்நாயக்க தனது அணிக்கான கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

இத் தொடரின் 4வது கட்ட போட்டிகள் முடிவில் அணிகளின் புள்ளிப்பட்டியல் வருமாறு:

வட மாகாணம் 4 3 1 0 6 1 5 10

சப்ரகமுவ மாகாணம் 4 2 2 0 3 1 2 08

கிழக்கு மாகாணம் 4 1 3 0 2 1 1 06

மேல் மாகாணம் 4 1 1 2 7 5 2 04

தென் மாகாணம் 4 1 1 2 4 4 0 04

ரஜரட்ட மாகாணம் 4 1 1 2 5 6 1 04

மத்திய மாகாணம் 4 1 1 2 2 5 3 04

ஊவா மாகாணம் 4 1 0 3 2 5 3 03

 அணி போட்டி வெற்றி சமநிலை தோல்வி பெற்ற வழங்கிய மேலதிக புள்ளிகள் கோல் கோல் கோல்

- .எஸ்.எம்.ஹில்மி...

Comments