மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டி; மார்ச் மாதம் நியூசிலாந்தில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டி; மார்ச் மாதம் நியூசிலாந்தில் ஆரம்பம்

எட்டு நாடுகள் பங்குபற்றும் மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி மார்ச் 4ஆம் திகதி நியூசிலாந்தில் ஆரம்பமாவுள்ளது. கடந்த வருடம் நடைபெற இருந்த இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொவிட்–19 தொற்று காரணமாக இந்த வருடத்துக்கு பிற்போடப்பட்டது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (09) வெளியிட்டது. இதற்கு அமைய டவ்ரங்கா, பே ஓவல் விளையாட்டரங்கில் மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் போட்டியை நடத்தும் நாடானா நியூஸிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன.

பரம எதிரிகள் மோதும் மிக முக்கிய 2 போட்டிகள் அடுத்த இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளன.

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி ஹெமில்டன் செடன் பார்க் அரங்கில் மார்ச் 5ஆம் திகதியும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி டவ்ரங்கா, பே ஓவல் மைதானத்தில் மார்ச் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

மார்ச் 4ஆம் திகதி முதல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள ஏப்ரல் 3ஆம் திகதி வரை 31 தினங்கள் நீடிக்கும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 31 போட்டிகள் ஒக்லண்ட், கிறைஸ்ட்சேர்ச், டனேடின், ஹெமில்டன், டவ்ரங்கா, வெலிங்டன் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் 2017-2020 போட்டி முடிவுகளின் பிரகாரம் தரவரிசையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் நேரடியாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன. போட்டியை நடத்தும் நாடானான நியூஸிலாந்தும் நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்டது.

இலங்கையிலிருந்து இடம் மாற்றப்பட்டு சிம்பாப்வேயில் நடைபெறவிருந்த 2021 மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கொவிட் காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டது. இதன் காரணமாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6, 7, 8ஆம் இடங்களிலிருந்த பங்களாதேஷ், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன.

இந்த எட்டு நாடுகளும் லீக் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பெறும் நாடுகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி வெலிங்டன், பேசின் ரிசேர்வ் மைதானத்தில் மார்ச் 30ஆம் திகதியும் 2ஆவது அரை இறுதிப் போட்டி மார்ச் 31ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் திகதியும் நடைபெறும். இந்த 2 போட்டிகளும் கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும். 2017இல் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இங்கிலாந்து சம்பியனாகியிருந்தது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியானது கொவிட் – 19 நடைபெறும் இரண்டாவது மகளிர் உலக கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியாகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் 2020 மார்ச் மாதம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவை இலகுவாக வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா இருபது 20 உலக சம்பியனாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments