தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களுக்கு ஏன் ஓரவஞ்சனை | தினகரன் வாரமஞ்சரி

தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களுக்கு ஏன் ஓரவஞ்சனை

இலங்கை போராட்ட வரலாற்றில் ஜே.வி.பி தொடக்கம்  அனைத்து ஆயுதக்குழுக்கள்  மற்றும் புலிகள் வரை பெண்கள் பங்களித்துள்ளனர். அரசியல் துறை தொடக்கம் நேரட்டித்தாக்குதல் வரை பெண்கள் வீரியமாக பங்களிப்பு செய்து ஆணுக்கு பெண் சமன் என்பதை நிரூபித்துள்ளனர்.  'பெண்கள் அணி தாக்குதலுக்கு வந்தால் அரச படைகள் பயந்து பின் வாங்குமாம்'.

அதுமட்டுமல்ல மறைமுகமாகவும் பல பெண்கள் ஆயுத போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். தனது குடும்பத்தினரை ஆயுத குழுவுக்கு தாரை வார்த்தது தொடக்கம் சமையல் செய்து கொடுத்தது வரை அவர்களுடைய பங்களிப்பு இருந்தது.

அது மட்டுமா யுத்தம் முடிந்து பத்துவருடம் கடந்த நிலையில் இன்று வரை நடந்த அநியாயங்களுக்காக உள்ளூர் வீதி தொடக்கம் இலங்கையிலிருந்து  ஜெனிவா வரை சென்று நீதி கேட்பதும் அநீதிகளை உரக்க சொல்வதும்  பெண்களே. பெண்கள் இல்லாவிட்டால் போரட்டத்தின் எச்சங்களும் போராட்டம் தந்த வலியும் நடந்த அநீதிகளும் என்றோ மறைந்திருக்கும், மறக்கபட்டிருக்கும்.

இன்றுவரை எவர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசை பொறுப்பு கூறும்படியாக அழுத்தம் கொடுப்பதும் இப்பெண்களே. போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் பெண்களே. இப்பெண்களின் பிரச்சினைகள் இல்லாவிட்டால் உள்நாட்டிலோ  புலம்பெயர் தேசத்திலோ தமிழருக்கு நடந்த அநியாயம் பற்றி கூக்குரல் இட யாருக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் நாதி இருக்காது சாட்சியும் இருக்காது.

இன்று எல்லா கட்சிகளும் போரினால் பாதிக்கபட்ட பெண்களை அவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே அரசியல் செய்கின்றனர். அரசியல் அதிகாரத்தை பெற அரும்பாடு படுகின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல ஊடகங்கள் வெளிநாட்டு தொலைகாட்சிகள் தங்கள் வியாபாரங்களை திறம்பட செய்ய இப்பெண்களின் கண்ணீரே தேவைப்படுகின்றது. புலம்பெயர் அமைப்புக்களும் இப்பெண்களை வழிநடத்துவதன் மூலம் தங்களுடைய அமைப்பை தொடர்கின்றனர். கூடிய அளவில் பாதிக்கப்பட்ட பெண்களை அரசியல் ரீதியாக பிழையாக வழி நடத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் சவால்களும் பல தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளூர் வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு அவள் சார்ந்த சமூகம் இலாபம் தரும் முதலீடாக இருப்பது கவலையே.

நேரடியாகவும் மறைமுகமாகவும் போரட்டத்தின் போதும் அதன் பின் நீதியை வேண்டி நிற்கும் பொறிமுறையில் தொடர்ந்து பெண்கள் பங்களிப்பு செய்தாலும் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களின் குரல்கள் கேட்காதவண்ணம் குரல்வளை நசுக்கபட்டுகொண்டே வருவது அன்றாடம் வரும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இன்றுவரை தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கோ, அமைப்புக்களுக்கோ,  ஊடங்களுக்கோ, சமூகத்துக்கோ, இளைய சமூகத்துக்கோ  தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் விளங்கியதாக தெரியவில்லை.

இந்த பத்துவருட காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து அரசியலுக்கு வந்த பெண்கள் மிகக் குறைவு. எல்லா இடத்திலும் ஆண்களின் பிரசன்னமே உள்ளது. 4 அல்லது 5 வருடங்களுக்கு முன் யாழில் தொடக்கி வைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையை தொடங்கும் போது ஒரு பெண்கூட இருக்கவில்லை. அரசியல் கட்சிகள் யாவிலும் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் இருப்பது  ஆண்களே. மாகாண சபையில்போட்டி இட்டதும் வெற்றி ஈட்டியதும் பெருவாரியான ஆண்கள். அமளி துமளி செய்வதும் செங்கோலை தூக்கி கொண்டு ஓடுவதும் ஆண்களே.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அரசாங்கம் 25% ஒதுக்கீடு கொண்டு வந்தும் பெண்கள் பல குளறுபடிகளின் மூலமே கொண்டு வரப்பட்டனர். வேட்பாளராக தேர்தலில் நின்ற பெண்கள் மிகக்குறைவு. அதிலும் ஆயுத போரட்டத்தில் பங்கேற்ற   முன்னாள் போராளி ஒருவர்கூட களமிறக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. ஆயுதம் தூக்கி போராட, உயிரை மாய்க்க தேவைப்பட்ட பெண்கள் அரசியல் அதிகாரத்தை பெற்று மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படவில்லை. இதை தமிழர்கள் இன்னும் உணரவில்லை.

இன்று வடக்கு, கிழக்கில் பல குழுக்கள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் மாவட்ட அபிவிருத்திகுழு. இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புக்களில் உள்ளவர்கள்  யாவரும் ஆண்களே. இதே போலத்தான் மற்றைய குழுக்களும், புதிய அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அறிக்கைகள் விடுகின்றன. புத்திஜீவிகள் குழுவாம். இங்கே யாருமே பெண்கள் இல்லை. பெண்கள் புத்திஜீவிகள் இல்லையோ என்னவோ?

ஒரு பிரச்சினை நடந்தால் கூடி முடிவு எடுப்பதெல்லாம் ஆண்களாகத்தான் இருகின்றனர். ஊடக மாநாடு நடக்கும் இடத்தில் எந்த பெண்ணையுமே மேடையில் காண முடிவதில்லை. வடக்கு கிழக்கில் நடக்கும் அனைத்து அத்துமீறல்கள், அடக்கு முறைகள், அநீதிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடக்கும் ஊர்வலங்கள் நடக்கும் எல்லாவற்றிலும் பெண்கள் திரண்டுவந்து பங்களிப்பு செய்வர். பாதிக்கப்பட்ட பெண் இருக்க ஊடங்கங்கள் பெருவாரியாக பேட்டி காண்பதெல்லாம் ஆண்களைத்தான். இதை தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்  செய்திகளை கவனித்தால் நன்கு புரியும்.  கொட்டை எழுத்தில் தலையங்கமாக வரும் செய்திகளில் இருப்பதெல்லாம் ஆண்களே. பெண்ணை பற்றி செய்தி வந்தால் அது எதிர்மறையான செய்தியாக மட்டுமே இருக்கும்.

போருக்கு தேவைப்பட்ட பெண்களின் பங்களிப்பு போருக்கு பின்னரான சூழலில், அபிவிருத்தி திட்டங்களை திறம்பட செய்ய தேவைப்படவில்லை. பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் தலைவர்களை எங்காவது கண்டுள்ளீர்களா? துணிச்சலான  பெண்களை தீர்மானம் எடுக்கும் மட்டங்களுக்கு வரசொல்லி ஊக்கப்படுத்தும் ஆண்கள் எம்மத்தியில் உள்ளனரா?

பெண் போருக்கு செல்ல, வன்முறையில் பங்கெடுக்க, உயிர்களை கொல்ல அனுமதித்த எமது சமூகம்  மீண்டும் அவளை பெண் என்ற வட்டத்துக்குள் அடைத்து  அடுபங்கரையை தஞ்சம் என நினைக்க வைத்தது ஏனோ?

பெண்களின் நுண் அறிவையும், திறமைகளையும் தேவைகளையும் மையப்படுத்திய முழுப்பங்களிப்பும் தீர்மானம் எடுக்கும் சகல மட்டங்களிலும் இல்லாதவரை தமிழருக்குள் ஜனநாயகம் இருக்காது, நல்லாட்சி மிளிராது. தமிழர் உரிமை பிரச்சினை இலங்கையில் தீராது. தமிழருக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கிடைப்பதென்பது ஆயிரம் வருடம் கடந்தாலும் கனவாக மட்டுமே இருக்கும்.

நளினி ரட்ணராஜா

Comments