வாழ்க்கைச் சவால்களை வெற்றிகொள்ள முடியாமல் திணறும், மிகப்பெரிய நெருக்கடிகளுக்குள்ளும் இலங்கையருக்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றக் கிடைத்திருப்பது, அல்லாஹ்வின் அருளிலுள்ளதென சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜு ப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இறைதூதர் இப்றாஹிமின் தியாகத்தை உயிரூட்டுவதுடன், வாழ்வின் இலட்சியங்களை தியாகத்தினடிப்படையில் வெல்வதற்கான படிப்பினை ஹஜ்ஜுக் கடமையில் பொதிந்துள்ளது. சவால்களை வெல்வதற்கு, துணிச்சல் மற்றும் தியாகம் அவசியம்.
இறை தூதர் இப்றாஹிம் எதிர்கொண்ட அனைத்து இன்னல்களும் இவைகளால்தான் வெற்றி கொள்ளப்பட்டன. மட்டுமல்ல அவரது தியாகமே, நமக்கு மார்க்கமாக்கப்பட்டிருக்கிறது.
எனவே, நமது நாட்டு நெருக்கடிகள் நீங்கும் வரை, சில துணிச்சல்களுக்கு தயாராகவே வேண்டும். யதார்த்தத்துக்கு முரணாகச் சிந்திக்கவோ அல்லது செயற்படவோ முனைவது கள நிலவரங்களை வெல்வதற்கு உதவப்போவதில்லை.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றக் கிடைத்த சகல இலங்கையரும் புனித மண்ணில் நமது நாட்டுக்காக பிரார்த்திப்பதுதான், நாட்டுப்பற்றுக்கான அடையாளம். இறைதூதர் இப்றாஹிமின் துணிச்சல் மற்றும் தியாகத்தை நினைவுகூரும் சகலரும், எல்லோரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள இந்நெருக்கடியைப் போக்க இந்த நன்னாளில் ஒன்றுபட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.