![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/10/a17.jpg?itok=MTGuMl-B)
இந்த வார இறுதி இலங்கையின் அரசியல் பொருளாதாரவரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அளவிலானஅரசாங்க எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் தொழில் வாண்மையாளர்கள் மற்றும் இந்த நாட்டின் மிக மேன்மையான இடத்தில் வைத்து நோக்கப்படும் மூன்று பெளத்த மகாபீடங்களின் மகாநாயக்கர்களின் தலைமையிலான சகல மதத் தலைவர்களின் கையெழுத்துடனான செங்கடகல மகாபிரகடனம் என்ற மிக வலுவான மக்களின் பிரதிநிதித்துவத்துடனும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியினால் சிறு குழுவினால் முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டம் என்று இதனை எவராலும் கூறமுடியாது. ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்சில் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளும் நிறுவனங்களும் இலங்கையை மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அதே பழைய பொலிஸ் ஊரடங்கு உத்தரவை வெள்ளி இரவு ஒன்பது மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தியிருந்தது. எனினும் இது சட்டவிரோதமானதென்றும் அதனை உடனடியாக நீக்குமாறும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உரிய தரப்பினரைக் கேட்டிருந்தது.
சனிக்கிழமை காலை எட்டு மணியுடன் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். அதேவேளை இன்னும் பத்து நாட்களில் இப்போது உள்ள பற்றாக்குறைகள் படிப்படியாக நீங்கி நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பும் எனவும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவசரப்பட்டு எதிர்க்கட்சிகளின் வலையில் சிக்கிவிடவேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுள்ளது. இதனை எந்தளவுக்கு மக்கள் நம்புவார்கள் என்பது தெரியவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டு மக்களின் பொருளாதார செயற்பாடுகள் ஏறத்தாழ முற்றாக முடங்கிப்போயுள்ள புறச்சூழலில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உள்ள வீதிகளில் பல கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகளில் காத்து நிற்கின்றன.
கடந்த காலங்களில் லெபனான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் இதே போன்ற பொருளாதார நெருக்கடிகளின்போது இவ்வாறான நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டமையை சர்வதேச ஊடகங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. உணவுப்பொருள் பற்றாக்குறையுடன் குறுகிய காலத்தில் ஏற்படும் திடீர் விலையதிகரிப்புகள் மற்றும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகள் என்பன மருத்துவ நடவடிக்கைகளை மிக மோசமாகப் பாதித்துள்ளன. இவை அத்தனையும் ஏற்பட மூலாதாரக் காரணமாய் இருந்துள்ளது டொலர் பற்றாக்குறை தான் என்பதை புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு நாட்டின் பொதுமக்கள் தமது நாளாந்தக் கடமைகளை செய்வதற்குத் தேவையான எரிபொருள் கிடைப்பனவு குறைந்தபட்சத் தேவையான உணவைப்பெற்றுக் கொள்வதற்கான இயலுமை இறுதியாக நோய்வாய்ப்பட்டால் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய உறுதிப்பாடு இந்த மூன்று விடயங்களையும் உறுதிப்படுத்த வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற ஏதோ ஒரு நெருக்கடி காரணமாக நிரம்பல் சங்கிலியில் பாதிப்பு எற்பட்டு ஒருசில நாட்கள் அல்லது வாரங்கள் தட்டுப்பாடுகள் ஏற்படுவது எல்லா நாடுகளிலும் நடைபெறக்கூடிய சம்பவம் தான். ஆனால் அரசாங்கத்தின் கொள்கைப் புறழ்வுகள் அல்லது விவேகபூர்வமற்ற நடவடிக்கைகள் காரணமாக மாதக்கணக்கில் தட்டுப்பாடுகளும் அதன் காரணமான நீண்ட வரிசைகளும் அதைப்பயன்படுத்தி ஒருசில குழுக்கள் பெற்றோலையும் டீசலையும் கள்ளச் சந்தையில் விற்று கொள்ளை இலாபம் உழைக்கும் நடவடிக்கைகளும் தொடருமாயின் மக்கள் அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் நெருக்கடி ஏற்படப்போகிறதென்பது அரசாங்கத்திற்குத் தெரியாதா அல்லது அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஏதிர்பாராத நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாற்றுத் திட்டம் ஒன்று இருப்பதில்லையா? எதிர்வரும் பத்துநாட்களுக்கு கப்பல் வாராது பதினைந்து நாட்களுக்கு கப்பல் வராது என்று அறிவிப்பதற்கு ஒரு அமைச்சு தேவையா அமைச்சர் தேவையா என்று மக்கள் நாக்கைப் பிடுங்குமாறு கேட்கிறார்கள் முறையான பதிலை எவரும் சொல்வதாக இல்லை.
அண்மையில் கோப் எனப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கருத்துத் தெரிவித்த மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பெற்றோலிய விலையிடல் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் மிகுந்த அவதானத்திற்குரியனவாக மாறியுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலிய விலைகளுக்கும் உள்நாட்டு வரி உள்ளடங்களாக எல்லாக் கட்டணங்களையும் செலவுகளையும் முழுமையாக செலுத்திய பின்னர் ஏற்படும் ஒரு லீற்றர் எரிபொருளுக்கான முழுச்செலவுக்கும் மக்களிடமிருந்து ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் அறவிடப்படும் விலைக்கும் இடையில் லீற்றர் ஒன்றுக்கு சுமார் இருநூறு ரூபா வரையிலான இடைவெளி நிலவவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே பெற்றோலியப் பொருள் விலைகள் இந்தளவுக்கு உயர்வாக இருக்க முடியாதெனவும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய அமைச்சு இது பற்றிய தெளிவுபடுத்தலைச் செய்ததாகத் தெரியவில்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி தவித்த முயல் அடித்த கூடிய விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. கடன் மீளச் செலுத்தமுடியாமல் போன ஒரு நாடு என்ற அந்தஸ்தை அடைந்த பின்னர் சாதாரண வணிகர்கள் அந்நாட்டுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்ய மறுப்பதனால் வேறு மூலாதாரங்களில் இருந்து பெற்றோலியத்தைக் கொள்வனவு செய்ய நேர்ந்துள்ளமையால் தாமதங்களும் விலையதிகரிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சுத் தரப்பில் ஒரு பத்திரிகை மாநாட்டுத் தகவல் காரணங்கூறுகிறது.
இதுகூட முகாமைத்துவ மற்றும் நிருவாகக் குறைபாடுகள் காரணமாக எற்பட்டவை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உலகளாவிய ரீதியில் எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல என்று காரணங்காட்டுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல, தெற்காசிய வட்டகையில் உள்ள ஏனைய நாடுகள் எல்லாமே கொவிட் 19தாக்கத்திலிருந்து மீட்சி பெற்று தமது வெளிநாட்டுச் சொத்துகளை மீளக்கட்டியமைத்துவரும் நிலையில் இலங்கை மாத்திரம் இவ்வாறு தலைகுப்புற விழுந்து பொருளாதார நோயாளியாக உயிருக்குப்போராடிக்கொண்டு அனுங்கிக்கொண்டிருப்பது உலகப்பொருளாதாரப் பின்னடைவினாலோ கொவிட் பிரச்சினையினாலோ ஏற்பட்டதல்ல. மாறாக பெரும் நிருவாகத் தவறினால் ஏற்பட்ட தேடிப் பெற்ற வினையாகும். அந்த வினையைச் சுட்டிக்காட்டியே இப்போது மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
முக்கியமாக சிங்கள பெளத்த மக்களின் பேராதரவு பெற்று ஆட்சிபீடம் ஏறிய அரசும் அரச தலைவர்களும் பலதடவைகள் தாம் சிங்கள பெளத்த மக்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்ததாக பெருமையுடன் கூறி மகிழ்ந்தனர். இப்போது அதே சிங்கள பெளத்த மக்களின் மூலாதாரமாகிய முப்பீடாதிபதிகள் செங்கடகல பிரகடனத்தைச் செய்துள்ளனர். அரசு தலைவர்கள் எவரும் இப்போது தலதா மாளிகைக்குள் நுழைய அனுமதியில்லை என்பதும் இதனோடு இணைந்ததே. இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழம்