![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/16/a13.jpg?itok=ihXB2m1D)
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக கடந்த மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை 94இலங்கை விமானங்கள் எரிபொருளுக்காக இந்தியா வந்து எரிபொருள் நிரப்பிவிட்டுச் சென்றுள்ளதாக கொச்சின் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 29முதல் ஜூலை 13வரை கொழும்பிலிருந்து 41விமானங்கள் கொச்சி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானங்களை அனுமதிப்பதன் மூலம் இந்திய விமான நிலையங்கள் தங்கள் கடமைக்கப்பால் செயலாற்றியுள்ளன.
அண்டைய நாடுகளுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த இது உதவும்' என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், இலங்கை விமானங்கள் எரிபொருளுக்காக இந்தியா வந்து எரிபொருள் நிரப்பிவிட்டுச் செல்கின்றன.
எரிபொருள் நிரப்புவதற்காக வந்த விமான நிறுவனங்களில் அதிகம் வந்தவை ஸ்ரீலங்கன் ஏர்வேஸ். மேலும், ஏர் அரேபியா, ஏர் ஏசியா, ஃப்ளை துபாய், கல்ஃப் ஏர், ஓமன் ஏர் மற்றும் ஜசீரா ஆகிய விமானங்களும் வந்துள்ளன.
கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய விமான நிலையங்கள், இலங்கை விமானங்களின் தரையிறக்கத்தை அனுமதித்துள்ளதாகவும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு வழிகளில் துணை நிற்பதாகவும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இலங்கையில் இருந்து இராணுவ விமானங்கள் எதுவும் எரிபொருள் நிரப்ப வந்ததா? என்று தெரியவில்லை.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது