இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழங்கிய விசேட கவியரங்கம் ‘தியாகத்தென்றல்’ கடந்த 10ஆம் திகதி தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளன்று முற்பகலில், ஒலிபரப்பாகியது.
காலை 11.00மணிக்கு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், 11.00மணியிலிருந்தே காத்திருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முற்பகல் 11.45மணியளவில்தான் நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆரம்பமானது.
இலக்கியச் செம்மல், கலாபூஷசணம், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் தலைமையேற்று நடாத்திய இக்கவியரங்கில், கொழும்பு -12 ‘கலைக்கமல்’ மஹ்தூம் ஜமால்தீன் (கொழும்பு மாவட்டம்), பேருவளை பாரிஹா பாருக் இம்தியாஸ் (களுத்துறை மாவட்டம்), பலகத்துறை அபூ சஊத் சைலாஸ் (கம்பஹா மாவட்டம்), சாய்ந்தமருது சித்தி ஜெரீனா கரீம் (அம்பாறை மாவட்டம்), வெலிகம, மதுராப்புர எம். எச். எம். மின்ஹாஜி (மாத்தறை மாவட்டம்), உடதலவின்ன இல்ஹாம் ஜுனைதீன் (கண்டி மாவட்டம்) ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகள் பாடினர்.
தலைமைக் கவிஞர், இறையருட்பா பாடி ஆரம்பித்ததோடு, நிகழ்வின் சிறப்பினை முதலில் கவிதையிலேயே எடுத்துச் சொன்னார்.
அதில், இங்கு கவிதை பாடும் கவிஞர்கள் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஐவர் இதுவரை வானொலி கவியரங்கில் கவிதை பாடாதவர்கள் எனக் குறிப்பிட்டார்.
கவியரங்கினை நடாத்திய கவியுழவர் ரஷீத் எம். இம்தியாஸ் அவர்கள் முதலில் ஹஜ்ஜுப் பெருநாளின் சிறப்பினைத் தனக்கேயுரித்தான தனிப்பாணியில் எடுத்துச் சொநார்.
அதன்போது,
‘வானுயரக் கொழுந்துவிட்டெரிந்த அந்த
நம்ரூதின் கொடுந்தீயில் நின்றபோதும்
நெஞ்சுறுதியின் தினாவட்டு தளர்ந்திடாத
நபிநாதர் பற்றெமக்கு நல் பாடமன்றோ....
பாவப் பிசாசுகளைப் புவியில்
சுட்டெரித்து
பஸ்பமாக்கிடும் பலமெமக்குத்
தருமன்றோ’
எனக் குறிப்பிட்டவை, ஆழ்மனதில் ஆழப்பதியும் வண்ண வரிகளன்றோ...
ஒரே மூச்சில் தங்கள் கவிதைகளைக் கவிஞர்கள் வாசித்துச் செல்லாது, நேயர்கள் மனதில் கவிஞர்களை ஊடறுக்கும் வண்ணம் தலைவர், இரு கட்டங்களில் கவிதைகள் பாட வைத்திருந்த முறைமை மெச்சத் தக்கது என்பதுடன், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்தது..
கவிதை பாடிய கவிஞர்களின் கவிதைகளில் சில வரிகளை இங்கு கோடிட்டுக் காட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தெள்ளுதமிழில் முதலில் கவிதை பாடினார் பலகத்துறை அபூ சஊத் சைலாஸ். விருத்தம் போலும் இருந்த அவர் கவிதையின் பின்வரும் வரிகள் அவரது முழுக்கவிதையினதும் சந்தத்துடன் கூடிய முத்தாய்ப்பாய் இருந்தது.
‘இந்நாளில் இம்மண்ணின் நம்சமூகம் படுகின்ற
அவலங்களை சொல்லாமல் இருந்திட்டால்
என்நாவு செய்திட்ட பாவம் என்றாகும் - அதனால்
சமகாலம் நாம்காணும் போராட்டம்
மனிதன் வாழ்ந்திடத் துடிக்கும் சமராகும்
எனச் சொல்லும் பெருநாளின் கொண்டாட்டம்
பசிக்காக கொடிபிடிக்கும் வறுமையின் திண்டாட்டம்’
மக்கத்து மண்ணின் புகழ்பாடும் இந்நாளில் - உன்
பக்கத்து மனையின் நிலைபாரும் - மனிதா
வெட்கத்தில் வாய்திறந்து கேட்கமுடியா நிலையில்
துக்கத்தில் துவளும் பட்டினி வயிறுகளை நிரப்பு நீ
அடுத்து, பாரிஹா பாருக் இம்தியாஸ் கவிதை பாடும்போது, சிந்திய வரிகளில் ‘மீண்டும் ஹஜ் செய்வோருக்கான விண்ணப்பம்’ மேலோங்கி இருந்தது. அவரது வரிகளெல்லாம் ஹாஜிகளுக்கு விண்ணப்பங்கள் கூறுவதாயும் அமைந்திருந்த்து.
‘இங்கு சின்னம் சிறு சிறுசுகளை
காமுகக் கண்கொண்டு நோக்கும்
மனிதாபிமானமற்ற மனித சாத்தான்களை
மனித மிருகங்களை கல்லெறிந்துவிட்டு---------------
ஷைத்தானுக்கு கல்லெறிய வேண்டும்’ என அவரது கவி வரிகள் ஆதங்கம் நிறைந்த வரிகளாய் இருந்ததன. சமகால நிகழ்வுகளை மனக்கண்முன் கொணர்ந்தன.
‘கலைக்கமல்’ மஹ்தூம் ஜமால்தீன் சந்ததக்கவி பாடும்போது, ‘உம்மா இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு’ எனத் தொடங்கிய கவிதை வரிகள் ஹஜ்ஜின் மேன்மையை திறம்பட எடுத்துச் சொன்னது.
உம்மாவின் மக்கத்து ஏக்கம்
உண்டியல்கள் வீட்டில்
ஊதிப் பெருத்தன…..
அரபா ஆவல்… தங்க வளையல்கள்
பணமாகி மகிழ்ந்தது…
என்று ஹஜ்ஜுக்கான ஓர் தாயின் தாகத்தைப் படம் பிடித்துக் காட்டியது. அவர் கவி வரிகளில் வரலாற்று உண்மை துல்லியமாய்த் தெரிந்தது.
கவிஞர் இல்ஹாம் ஜுனைதீனின் சந்தங்களோடு சிந்துபாடிய கவிதை ஆழ்மனதை அப்படியே வருடிச் சென்றது என்பதே உண்மை. புல்லரித்துப் போகும் அவரது கவிதையின் முதல் வரியே ‘ஹாஜரா உன் மகளுக்குச் சொல்லிக் கொடு’ என்று இருந்தது.
இன்றைய ஹாஜராக்களுக்கான அவரது கவிதை அது. நவீனத்தில் துவண்டு போயுள்ள இளசுகளை கரைமீட்டுவதாய் கவிதை அமைந்திருந்தது. அவர் பாடுகிறார் இப்படி,
இயம்பி விடு
ஹாஜரா...
உன் மகனுக்கும்....
இவ்வுலகம் நிலையல்ல,
இனி வரும் மண்ணறைக்காய்
இஸ்லாமிய ஈடேற்றத்தை
இதயத்தில் நிரப்பி விடு!
இவ்வையகத்தில்
இன்றிவரோ
இல்லாத பொய் கூறி
செய்யாத செயல் வேண்டி
சொல்லாத பொய் இல்லை
பொல்லாத வாழ்க்கை இது,
பொறுக்காது வையகமும்,
இல்லாளைத் தேடிவரும்
வெறும் நையாண்டிக் கோளமிது!
தொடர்ந்து கவிதை சொன்னார் கவிஞர் எம்.எச்.எம். மின்ஹாஜி. ஹஜ்ஜின் தோற்றுவாயுடன் ஆரம்பமான அவரது கவிதை தற்கால அவலங்களைத் துல்லியமாய் எடுத்தியம்பின. சந்தத்துடன் கூடிய அவரது கவிதையில்,
தொட்டுச்சுவைத்திட உணவின்றி
தட்டுகள் நீட்டும் பட்டினிப்பிணி
வாட்டுதே எம் உயிரை ஓட்டுதே
அடுப்பங்கரைக் காளானும்
எத்தனை எத்தனை வீட்டில்.... என்ற வரிகள் மனங்கொள்ளத்தக்கன.
கவிஞர் சித்தி ஜெரீனா கரீம் அவர்கள் ‘அன்னையின் தியாகம்’ என்ற மகுடத்தில் கவிதை பாடிய அழகு மெச்சத்தக்கது. அவரது குரலோடு மக்கமா நகருக்கச் சென்றுவந்த நிலை... வறுமையினை விரட்டுவான் வேண்டி அவர் சொல்லும் வழிகள் ஏற்கத்தக்கன.
அவரது கவிதை இன்றைய தாய்க்குலத்திற்குப் பாடம் புகட்டுவதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதோ சில வரிகள்,
சங்கையாய் நாம் வாழ
சந்தர்ப்பங்கள் பல உண்டு
கையில் இறைவேதம் கொண்டு
தர்மங்கள் பல வழங்கி
சாதனைகள் படைக்கலாம்
நல்ல செல்வங்களை
நலமோடு வளர்க்க
நன்மைகள் நாளும் அடைய
வல்லவன் அல்லாஹ்
நமக்களித்த திருக் குர்ஆன்
வாழ்ந்து காட்ட ஓர் சரித்திரம்
தினம் ஓது வழி பிறக்கும்
அனைத்துக் கவிஞர்களும் இரு பாகங்களாக தமது கவிதைகளை சமர்ப்பித்தனர். அவர்களை ஆரம்பத்திலும், இடையிலும் முடிவிலும் அழைத்து, விடைகொடுத்து, மீள அழைத்து, வழியனுப்பிய சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸின் கவி வரிகள் வசீகரமாய் அமைந்திருந்தன. அவர் தாது முடிவுரையில் இப்படிக் கூறினார்:
மக்கள் மகோன்னதராய் வாழ
மகான்கள் செய்யும் யாகம்
படைத்தோன் மகிழ்வை வென்று
பெற்றிடும் பெரும் யோகம்
உலகம் சிறந்திட நல்லோர்
உளமார செய்யுமுத் யோகம்
நாடும் வீடும் செழித்திட
நாமெல்லாம் செய்வோம் தியாகம்
மொத்தத்தில் தலைமைக்கவி சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் உட்பட எழுவரும் தந்த கவிதைகள் கன்னல் கவிகள் என்றால் மிகையல்ல.
இலை மறைகாயாகவுள்ள கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்து, சாலப்பணி செய்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன முஸ்லிம் சேவை, பலரதும் வேண்டுகோளுக்கிணங்க, மின்சாரத்தடையைக் கருத்திற்கொண்டு மீண்டும் இந்நிகழ்ச்சியை அடுத்த நாள் திங்கட்கிழமை இரவே மறு ஒலிபரப்புச் செய்தமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தயாரித்தளித்த ஏ. எம். முஹம்மது ரளீம், நெறிப்படுத்திய பணிப்பாளர் பாத்திமா ரினூசியா ஜவ்பர் பாராட்டுக்குரியோரே. மொத்தத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தந்த ‘அருஞ்சுவை ஹஜ்ஜுப் பெருநாள் விருந்து’ இத் ‘தியாகத்தென்றல்’ கவியரங்கம் என்றால் மிகையல்ல.
‘தமிழ்ச்சுடர்’
கலைமகன் பைரூஸ்