![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/16/a8.jpg?itok=5uO7W02b)
ஜனாதிபதி தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதையடுத்து தாமும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காக பல பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தாம் அப் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சட்ட அதிக்கத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதன் மூலம் நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளதாவது:
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எழுந்துள்ள மக்கள் போராட்டம் அரசியல் அதிகாரங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. அதன்படி தற்போது மக்களின் எதிர்பார்ப்புகள் மாற்றமடைந்துள்ளன.
இத்தகைய நிலையில் நாட்டு மக்கள் தொடர்ந்தும் பாதிப்புகளுக்கும் அசௌகரியங்களுக்கும் உட்படக் கூடாது என்பதில் நான் உறுதியாகவுள்ளேன்.
பாடசாலை சிறுவர்கள் முதல் ஓய்வூதியக்காரர்கள் வரை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நிலையான தீர்வு தொடர்பில் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக கூற முடியும்.
முன்னேற்றம் அடைந்த கலாசாரத்தை கொண்ட சமூகம் என்ற வகையில் அனைத்திற்கும் தீர்வு பெற்றுக் கொள்ள ஜனநாயக அரசியலமைப்பின் மூலமான அரசியல் வரைவின் மூலமே முடியும் மூன்று தசாப்த காலமாக அரசியலில் செயல்பட்டுவரும் நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களின் பக்கமே இருந்து வருகின்றேன்.
சட்ட ஆதிக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாத்து பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்