பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் | தினகரன் வாரமஞ்சரி

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பதில் ஜனாதிபதியாக நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நண்பகல் அவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக பிரதமர் செயலகம் தெரிவித்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து சட்டரீதியாக விலகிக் கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிவிப்பை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அதற்கிணங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதையடுத்து அதற்கான செயற்பாடுகள் முடிவடையும் வரை ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை பதில் ஜனாதிபதி மேற்கொள்வார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments