பெற்றோல், டீசல் தாங்கிய 03 கப்பல்கள் இன்று நாட்டுக்கு | தினகரன் வாரமஞ்சரி

பெற்றோல், டீசல் தாங்கிய 03 கப்பல்கள் இன்று நாட்டுக்கு

மூன்று எரிபொருள் கப்பல்கள் இன்று 17ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 40.000மெற்றிக் தொன் டீசலுடன் இரண்டு கப்பல்களும் ஒக்டேன் 92ரக பெட்ரோல் 35.000மெற்றிக் தொன்னுடன் மேலும் ஒரு கப்பலும் இன்று 17ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி விரைவில் நிவர்த்தி செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டுக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்காக விநியோகிப்பது தொடர்பில் முறையான வேலைத் திட்டமொன்றை தயாரிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் முறையான வேலைத் திட்டத்தை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் எரிசக்தி அமைச்சின் செயலாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் விநியோகம் தொடர்பில் முறையான வேலை திட்டமொன்றை தயாரிக்குமாறு உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை மனுக்கள் மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேவேளை, சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்குவதில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் சுகாதாரத்துறையினருக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பமாகும் எனவும், அந்த செயற்திட்டத்தின் கீழ் 100 எரிபொருள் நிலையங்கள் மூலம் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்க உள்ளதாகவும் கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments