கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த உலகில் துரித கதியில் முன்னேறியுள்ள இந்திய தேசம்! | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த உலகில் துரித கதியில் முன்னேறியுள்ள இந்திய தேசம்!

கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் உலக நாடுகள் அனைத்துமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன, பெரியளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டன, பொருளாதார ரீதியாக இழப்புகளைச் சந்தித்தன.

இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. ஆனால், கொவிட் தொற்றை சிறப்பாகக் கையாண்டது. உலக ஊடகங்கள் போட்டி போட்டபடி இந்தியாவை இகழ்ந்து கொண்டே இருந்தன. ஆனால், இவை அனைத்தையும் கடந்து இந்திய அரசு செயற்பட்டுள்ளது.

வல்லுனர்களும், ஊடகங்களும் இந்தியாவில் இவ்வாறு நடக்கும் என்று பயமுறுத்தியவாறு எதுவுமே நடக்கவில்லை. அனைவரும் கூறுகின்ற எரிபொருள் விலையேற்றம் அதிகமாகி விட்டது என்பது நியாயமான குற்றச்சாட்டு. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், இப்பிரச்சினையானது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினையாகும். ஐரோப்பா நாடுகளிலும் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் வரி மூலம் மத்திய அரசு மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறது என்று அரசியல் செய்து வருகிறார்கள்.

ஆனால், அப்பணத்தை இந்திய மத்திய அரசு எப்படிப் பயன்படுத்தியது என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எதிர்க்கட்சிகள் பேசப் போவதில்லை. ஏனென்றால், அதுதான் அவர்களின் அரசியல். ஆனால், பா.ஜ கவினர் கூட தங்களது மக்கள்நலப் பணிகளை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

கடந்த இரு வருடங்களில் அனைத்து மக்களுக்கும் விலையில்லா உணவுப் பொருட்களை பா.ஜ.க அரசு கொடுத்தது, தடுப்பூசி வழங்கியது, சிறுதொழில் செய்பவர்களுக்குக் கடனுதவி வழங்கி பாதிப்புகளைக் குறைத்தது என்றெல்லாம் மிகச்சிறந்த பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.

ஆனால் மத்திய அரசு செய்த சிறப்பான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவிலுள்ள பல ஊடகங்கள் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையையே மக்களிடம் பரப்பி வருகின்றன.

எத்தனை குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது முன்வைக்கலாம். ஆனால் எட்டு வருடங்களாகியும் இன்னமும் ஏன் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிரணிகளால் முன்வைக்க முடியவில்லை?

அரசின் வருமானத்தை மக்களுக்கேதான் பல்வேறு வழிகளில் செலவிடுகின்றது இந்திய அரசு என்பதை எதிர்க்கட்சிகள் கூறுவதில்லை. மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காமல் சரியான வழியில் மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கிறார்கள், உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். அவைதான் பிரதானம்.

கொரோனா தொற்று தாண்டவமாடிய வேளையில், 130கோடி மக்களைக் கொண்ட சீனா போன்ற நாடுகளே திண்டாடின. ஆனால் பெரிய சிக்கல்கள் இல்லாமல் இந்தியா சமாளித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை.

இலங்கையில் தற்போதுள்ள நிலையென்ன? பாகிஸ்தானின் நிலையென்ன? அவை தவிர வல்லரசாக இருக்கும் சீனா தற்போது கொரோனா பிரச்சினைகளைக் கையாள முடியாமல் திணறி வருகிறது. அங்கு ஊடகங்களால் செய்திகளை உலகுக்குக் கூற முடியாது. செய்திகள் வெளியே தெரியவில்லையென்பதால் சீனா சிறப்பான நாடெனக் கூற முடியுமா?

இவை அனைத்தையும் தாண்டி சீனாவில் மக்கள் படும் துன்பங்கள், உணவுக்காக மக்கள் நடத்தும் கலவரங்கள், மனஉளைச்சல்களால் கூச்சலிட்ட மக்களின் நிலை சமூகத்தளங்கள் வழியாகக் கசிந்து வருகின்றன.

சீனா போல இந்தியா ஒரே தலைமையின் கீழ் இயங்கவில்லை. பல மாநிலங்களை அதன் அரசியல்களை உள்ளடக்கி ஆட்சி புரிகிறது. இந்திய குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு உள்நாட்டு அரசியல்களையும் தாண்டி இந்தியா சவால்களை வென்று சாதித்துள்ளது.

சீனாவில் தற்போது ஷாங்காய் நகரில் மிக மோசமான நிலை நிலவுகிறது. ஆனால் உலக ஊடகங்கள் சீனாவின் நிலைமையை வெளிப்படுத்துவதில் அமைதியாகவே உள்ளன? இந்தியாவில் எது நடந்தாலும் அதனை சில ஊடகங்கள் பூதாகரமாக்குகின்றன.

இந்தியாவில் பிரச்சினைகள் உள்ளன என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையேயும் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தியுள்ளது.

தற்சார்பு இந்தியா மூலம் உற்பத்தியை பெருக்கியுள்ளது. இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டு வருகின்றன. புதிய பாலங்கள் கட்டப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊழல் செய்வதற்கான வழிகள் டிஜிட்டல் இந்தியா மூலம் தடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு உதவிப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கி மிகப்பெரிய உணவுப் பற்றாக்குறையைத் தவிர்த்துள்ளது இந்தியா. அத்துடன் வறிய மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

தற்போது அடுத்ததாகக் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதித்துக் கொண்டுள்ளது. இலங்கையைப் போன்று பொருளாதாரச் சிக்கலில் இந்தியா அகப்படவில்லை. உலக அரங்கில் வல்லரசாக இருக்க நினைக்கும் அமெரிக்காவே தற்போது இந்தியாவிடம் அடங்கிச் செல்கிறது. இது போன்று உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இந்தியாவை வீழ்ச்சிக்கு உள்ளாக்கலாம் என்ற திட்டத்தையெல்லாம் மற்றைய வல்லரசு நாடுகள் இனிமேல் மறந்து விட வேண்டியதுதான்.

பிரதமர் நரேந்திர மோடியை பல காரணங்களுக்காகப் பலரும் விமர்சிக்கலாம் ஆனால், அவரின் முன்னோக்கிய திட்டங்கள், சிந்தனைகள், அதற்கான தைரியமான முடிவுகள், செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை.

சில முடிவுகள் தொடக்கத்தில் கடினமான நிலையை ஏற்படுத்தி இருந்தாலும், அதனால் பிற்காலத்தில் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. டிஜிட்டல் இந்தியா & தற்சார்பு இந்தியா இவை இரண்டும் இந்தியாவின் வளர்ச்சிக்குக் கொடுத்த, கொடுக்கப் போகும் பங்கு அளவிட முடியாதவை.

எதிர்காலத்தில் நன்மை பயக்கும் ஆனால், தற்காலத்தில் சிரமத்தைக்கொடுக்கும் முடிவை ஒரு தலைவர் எடுப்பது கடினம். யாருமே முயற்சிக்கத் துணியாத முடிவை எடுப்பவர்களே சிறந்த தலைவராகக் கருதப்படுகிறார்கள். எனவே, தைரியமான முடிவுகளை எடுக்கும் பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர் என்பதில் இந்திய மக்களுக்குச் சந்தேகமில்லை. மக்கள் விரும்புவதை செயல்படுத்துபவர் நல்ல தலைவரல்ல. மக்களுக்கு எது நன்மை கொடுக்கும் என எதிர்காலத் தேவையை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்துபவரே சிறந்த தலைவர்.

தற்காலச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைத்து முடிவுகளைத் தள்ளிப்போட்டால் எதிர்காலம் மிக மோசமாக மாறிவிடும்.

பிரதமர் மோடியையும் அவரின் முன்னோக்கிய திட்டங்களையும் குறைத்து மதிப்பிட்டு விடுவது விவேகமல்ல. உலக அரங்கில் முக்கியமான நிலையை இந்தியா வந்தடைந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. நினைத்ததை விட மிக வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் தாற்காலிகமானவையே. சாமானியரும் இந்திய வளர்ச்சியின் முழுமையான பலன்களைப் புரிந்து கொள்ள, அனுபவிக்கச் சில வருடங்களாகும்.

டிஜிட்டல் இந்தியா தொடர்பில் பலரும் ஆரம்பத்தில் நம்பவில்லை ஆனால் நன்மையான பலன் நடந்து விட்டது.

எஸ்.சாரங்கன்

Comments