நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்துக்கு ஒத்துழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்துக்கு ஒத்துழைப்பு

நாட்டை கட்டியெழுப்பும் வேவைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய திட்டத்தை தயாரித்து அதனை இலக்கு நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற எம்.பிக்களின் வாக்கெடுப்பில் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்.

இன்றைய நாளில் இவ்வாறான நேரத்தை ஒதுக்கி ஜனாதிபதியை தெரிவு செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது ஏன் என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும்.

2019இல் 69இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதுடன்> 2020இல் 148இற்கும் அதிகமான எம்.பிக்களை பெற்று அரசாங்கத்தை அமைத்து 20ஆவது திருத்தத்தையும் செயற்படுத்தி ஆட்சியை நடத்தினர்.

ஜனாதிபதியொருவர் மக்கள் வாக்குகளின் மூலமே தெரிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் ஜனநாயக வரலாற்றில் அண்மைக்காலத்தில் முதற்தடவையாக குற்றப் பிரேரணை> அரசியலமைப்பு ரீதியலான நடவடிக்கைகள் அன்றி மக்கள் எதிர்ப்புகளால் பதவி விலக நேரிட்டது. இதனை 225பேரும் புரிந்துகொண்டால் சிறந்தது.

அரசியலமைப்புக்குட்பட்டதாகவே எதுவும் நடக்க வேண்டும். நாட்டில் காட்டுச் சட்டம் இருக்க முடியாது.

இதனால்தான் டளஸ் அழகப்பெரும வேட்பாளராக இறங்கினார்.

நானும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன். பல்வேறு விடயங்களை ஆராய்ந்து மொட்டுக் கட்சியிலிருந்து வந்த டளஸுக்காக புதிய நோக்கங்களுடன்> புதிய கலாசாரத்தை உருவாக்குவதற்காக நாங்கள் ஒரு அடி பின்வாங்கினோம்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாங்கள் எடுத்த தீர்மானத்தில் எந்தக் கவலையும் இல்லை. நாங்கள் சரியான தீர்மானத்தையே எடுத்தோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்

முன்னர் எடுத்த தீர்மானத்திலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று யாரும் அர்த்தப்படுத்தலாம். நாங்கள் தனியாக போட்டியிட்டிருக்கலாமென்று கூறலாம். இந்த சபையில் மக்களின் கோரிக்கைகள் இருக்கின்றதா? என்பது கேள்விக்குரியதே. இங்கு அனைத்தும் அரசியலமைப்பு ரீதியில் இருக்க வேண்டும்.

இதனை ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது பாராளுமன்றத்தில் பெறுபேறு எப்படி இருந்தாலும் பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் விருப்பம் இதற்கு மாற்றமாகவே இருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றம் கூடியது. வேட்பு மனுக்களுக்கு காலம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் வெளியில் மக்கள் என்ன நிலையில் இருக்கின்றனர்.

எரிபொருள், மருந்து இல்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. உணவுப் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

69இலட்சம் வாக்குகளை பெற்றவர்கள் இன்று தான்தோன்றித்தனமாக பொருளாதாரத்தை வழிநடத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும். அதனை இலக்கு நோக்கி எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும். நேர அட்டவணையை ஏற்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடு நடந்தாலும் மக்கள் துன்பத்திலேயே இருக்கின்றனர். இதனை தீர்க்க வேண்டும். இதில் அரசியல் மறுசீரமைப்புகள் நடக்க வேண்டும். இதனை புதிய ஜனாதிபதி செய்வாரென்று நினைக்கின்றேன். 20 ஆவது திருத்தத்தால் நடந்த நிலைமையே இப்போது ஏற்பட்டுள்ளது.

Comments