![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/23/a9.jpg?itok=veGBI4HJ)
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 20,000ரூபா அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்துக்காக வாகனத்தின் உரிமையாளரைக் கைது செய்து, அந்தக் குற்றத்துக்கான தண்டனையை நீதிமன்றத்தில் வழங்க முடியுமென்று அதிகாரி கூறினார்.
1984ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டம், 2009ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது மற்றும் அதில் காட்டப்பட்டுள்ளபடி இந்த அபராதங்களைச் செயல்படுத்தலாம்.
இந்தக் குற்றத்தின் இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு பிடிபட்ட நபருக்கு 30,000ரூபாவுக்கு குறையாத ஆனால் 50,000ரூபாவுக்கு அதிகரிக்காத வகையில் அபராதம் அல்லது 03மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது.
கடந்த 21ஆம் திகதி எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய திகதிகளில் சிலர் வாகனங்களின் இலக்கத் தகடுகளை மாற்றிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்தே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு அறிவித்துள்ளது.