இந்தியாவின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவானார் | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவானார்

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது தொடக்கம் முதலே திரெளபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார்.

இதில் மொத்தம் பதிவான 4,754வாக்குகளில் 53வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 4,701வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2,824வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 6,76,803வாக்குகள் மதிப்பு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,877வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 38,0,177ஆகும். இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். திரெளபதி முர்மு ஜனாதிபதியானதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி எனும் பெருமையை அவர் பெறுகிறார்.

திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரௌபதி முர்மு ஜனாதிபதியாக நாளை 25ஆம் திகதி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க, செய்து வருகிறது. இதையடுத்து அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடியினர் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக இருந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் திரௌபதி வெற்றிப்பெற்றதால், நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்னும் பெருமையை பெற்றார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Comments