19ஐ விஞ்சும் புதிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவோம் | தினகரன் வாரமஞ்சரி

19ஐ விஞ்சும் புதிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவோம்

நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதிலிருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஆவதை விஞ்சிய புதிய திருத்தமொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

22ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 22ஆவது திருத்தத்துக்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார்.

அது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், இப்போது அரசாங்கம் முழுமையாக மாறியுள்ள காரணத்தினால் மீண்டும் அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த இணைப்புகளை நீக்கி மீண்டும் 19ஆவது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதிலிருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஆவது திருத்தத்தை விஞ்சிய புதிய திருத்தமொன்றை கொண்டுவர அறிவுறுத்தியுள்ளேன்.

இச் சட்டமூலம் அமைச்சரவை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதியை பெற்ற பின்னர் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடவும், அடுத்த ஏழு நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவரவும், அதேபோல் பாராளுமன்ற தெரிவுக்குழு வொன்றை அமைத்து நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியிடம் இருக்க வேண்டமென்பதில் மாற்றம் இல்லை, இந்த அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு மாற்றப்பட வேண்டுமென்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றார்.

Comments