![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/06/b4.jpg?itok=imeDMYw3)
சகல சமூகங்களதும் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பூடாக உறுதிப்படுத்தப்படும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே, தேசிய காங்கிரஸ் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ,எல்,எம்,அதாஉல்லா தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது.நாட்டில், ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் ஸ்திரம் அவசியம்.இந்த ஸ்திரத்தை உருவாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும்.எந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு,இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அதில் உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு உறுதி செய்யப்படும் வரை,நிறைவேற்றதிகார முறைமை ஒழிக்கப்படக் கூடாது.பட்டம்,பணம் மற்றும் பதவிகளுக்காக சோரம்போகும் எம்.பிக்கள் இருக்கும் வரைக்கும், பாராளுமன்றத்தை பலப்படுத்த முடியாது.இதனால்தான், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின் அவசியத்தை எமது கட்சி வலியுறுத்துகிறது.முன்னாள் ஜனாதிபதி ஜே,ஆர், ஜெயவர்தனவால் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபைகள் முறை,எமது நாட்டுக்குத் தேவையில்லை.
சின்னஞ் சிறிய நாட்டை ஒன்பதாகப் பிரித்து நிர்வாகம் நடாத்துவதால் செலவுகளே அதிகம். ஏதாவது நாடுகளின் அழுத்தங்களுக்காக இந்த மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டிருந்தால், அந்த நாட்டுக்கு எமது நாட்டின் நிலை குறித்து அரசாங்கம் தெளிவு படுத்தல் அவசியம்.பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதால் பிரிவினைச் சிந்தனைகள் பலமிழந்துள்ளன.சகல இனங்களும் ஒன்று சேர்ந்து உழைக்கும் புதிய கலாசாரத்தை காலிமுகத்திடலில் காணக்கிடைக்கிறது.எனவே, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது போன்று,இனவாதமும் ஒழிக்கப்படல் அவசியம்.இதை ஒழிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதுதான் சிறந்தது.
ஏ.ஜீ.எம்.தௌபீக்