ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 07 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது | தினகரன் வாரமஞ்சரி

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 07 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 07வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நிபந்தனைகளுடன் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு அரசியல்வாதியும் 06மாத காலத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 07வருடங்களுக்கு இரத்துச் செய்யப்படும். எனினும் அரசியலமைப்பின் 34 (2) பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டால் ஜனநாயக உரிமை வழங்கப்படும். எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியலமைப்பின் 34 (1) (ஈ) பிரிவின்படியே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 07வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.

எவ்வாறிருப்பினும் தேவையான சந்தர்ப்பங்களில் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கலாமென நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இவ்வாறான நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பே வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததையும் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Comments