இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினூடாக 35 இலட்சம் குடும்பங்களுக்கு நேரடி நிவாரணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினூடாக 35 இலட்சம் குடும்பங்களுக்கு நேரடி நிவாரணங்கள்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினூடாக சுமார் 35இலட்சம் குடும்பங்களுக்கு நேரடியான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது

இத்திட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்கள் உட்பட சமுர்த்தி உதவி பெறுவோர், ஆதரவற்ற முதியோர், விசேட தேவையுடையோர் போன்றவர்களுக்கும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் இதனூடாக நன்மைகள் கிடைக்கவுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினூடாக தற்போது சமுர்த்தி உதவி பெறும் சுமார் 17இலட்சத்து 49ஆயிரத்து 666குடும்பங்களுக்கும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் சுமார் 07இலட்சத்து 31ஆயிரத்து 975குடும்பங்களுக்கும்  இதனூடாக நிவாரணங்கள் கிடைக்கவுள்ளன. இத்திட்டத்தின்படி சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 5,000ரூபாவுக்கு பதிலாக 7,500ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோன்று காத்திருப்பு பட்டியலிலிருக்கும் குடும்பங்களுக்கு 5,000ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது மேலும் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு 2,500ரூபாயிலிருந்து 10,000ரூபா வரையில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

சமுர்த்தி உதவி பெறாத குடும்பங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துல திலக்கசிறி தெரிவித்தார்

இதற்கு மேலதிகமாக ஆதரவற்றவர்களாக கருதப்படும் நான்கு இலட்சத்து 16ஆயிரத்து 667முதியோர்கள், முப்பத்தி ஒன்பதாயிரத்து 169சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையவர்கள் என கருதப்படும் 72ஆயிரத்து 06பேருக்கும்,  கர்ப்பிணி தாய்மாருக்கும் இந்த கொடுப்பனவு கடைக்கவுள்மை விசேட அம்சமாகும்

சமுர்த்தி கொடுப்பனவுக்காக மட்டும் அரசாங்கம் மாதாந்தம் 530கோடி ரூபாவை செலவிடுவதுடன், வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்கப்படும்  நிவாரணங்களுக்காக 2022ஆம் ஆண்டு  சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் மூலதன செலவில் மற்றும் குறைந்த முன்னுரிமையடிப்படையிலான செலவுகளில் 30ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது

அத்துடன் இதற்கு மேலதிகமாக உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு 20ஆயிரம் கோடி ரூபா உலக உணவு திட்டத்தின் ஊடாக கிடைக்கவுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் பலவற்றிலிருந்து இதற்கான பங்களிப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது

இந்த நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின்படி ஒரு குடும்பத்தில் பலர் இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பமாகவே கருதப்படுவார்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments