நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பின் தற்போதைய நிலை பற்றி நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை நேற்று முன்தினம் (02) கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
தற்போது நிந்தவூர் பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அவசரமாக எடுக்க வேண்டிய நிலைமை பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் இம்மாதம் 23,24ஆம் திகதிகளில் நிந்தவூரிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் தற்போது வரைக்கும் இந்த கடலரிப்பு விடயத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரதித் தவிசாளரினால் அமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு விடயங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மீன் பிடி தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்வதற்குத் தேவையான போதிய அளவு மண்ணெண்ணெய் இல்லாமல் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து மீனவர்களுக்குத் தேவையான மண்ணெண்ணெயை மானிய அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட அமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் தற்போது நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் கடல் அரிப்பினை நிலையாக கட்டுப்படுத்த கிழக்கு-மேற்காக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களது மீனவர் கட்டடங்கள், மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.