இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 113மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.
உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.
இதுவரை 80சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும். அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.