சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சட்டவிதி தெளிவானது. அதாவது, பிஃபா அங்கத்தவர்கள் சுய அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். எந்த உறுப்பு நாடாக இருந்தாலும் அரசியல் அல்லது சட்டரீதியான தலையீடுகள் இருக்கக் கூடாது.
பிஃபா இந்த சட்டத்தில் கடுமையான பிடிவாதம் காட்டுகிறது. இதனை மீறிச் செல்லும் எந்த உறுப்பு நாடாக இருந்தாலும் தடை நிச்சயம். இதன் அண்மைய உதாரணம் இந்தியா. சரியாக இந்திய சுதந்திர தினத்தன்று, பேரிடியாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு தான் தடைக்குக் காரணம் என்று பிஃபா நச்சென்று சுருக்கமாகச் சொல்லிவிட்டது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் ஏகப்பட்ட குழப்பம். அதில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தலைவராக இருப்பவர் பிரபுல் படேல். நான்கு ஆண்டுகள் கொண்ட சம்மேளனத்தின் தலைவருக்கான பதவிக் காலத்தை மூன்று தடவைகள் வகித்தவர். ஆனால் இந்திய தேசிய விளையாட்டு சட்டவிதியின்படி பார்த்தால் அவரால் அந்தப் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியாது. என்றாலும் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தாமல் 2020இல் இருந்து இழுத்தடிப்புச் செய்தார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, உச்ச நீதிமன்றம் கால்பந்து நிர்வாகத்தை கலைத்து மூன்று பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்க, கடைசியில் அது பிஃபா தடை வரை சென்றுவிட்டது.
இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர், உச்ச நீதிமன்றம், விளையாட்டு நிர்வாகம் மன்றாடித் தான் கடைசியில் பிஃபாவிடம் இருந்து அந்தத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.
பிஃபா இப்படித் தடை விதிப்பதும் பின்னர் விலக்கிக் கொள்வதும் தொடர்ச்சியாக நிகழும் ஒன்றாக மாறிவிட்டது.
பெனின், குவைட், நைஜீரியா, ஈராக் போன்ற நாடுகள் மீதும் கடந்த காலங்களில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு, இதே விதியின் கீழ் பாகிஸ்தான் கால்பந்து சம்மேனமும் தடை செய்யப்பட்டது. 15மாத தடைக்குப் பின்னர் கடந்த ஜூலையிலேயே அது நீக்கப்பட்டது.
இந்த சுழற்சியில் இப்போது இலங்கையின் பெயரும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இலங்கை கால்பந்து நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி முடிவடைந்தது. அடுத்த நிர்வாகத்தை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பை நடத்துவதிலும் இழுபறி ஏற்பட்டுவிட்டது. இனி கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிப்பது யார் என்ற பெருத்த கேள்விக்கு பதிலில்லை. தன்னிஷ்டத்திற்கு நிர்வாகக் குழுக்களை அமைத்தால் பிஃபா கழுத்தைப் பிடித்துவிடும்.
உண்மையில் ஓகஸ்ட் 31ஆம் திகதி கால்பந்து சம்மேளத்தின் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி பேச கடந்த மே 17ஆம் திகதி பொலன்னறுவையில் சிறப்பு பொதுக் குழு கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடானது. ஆனால் அந்தக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே சிக்கல் ஆரம்பித்தது. அதனால் திட்டமிட்டபடி ஓகஸ்ட் 31ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாமல்போய்விட்டது.
இலங்கை கால்பந்து நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. கடைசியாக 2021ஜூலை 30ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த மே 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நிர்வாகத்தை தேர்வு செய்யும்படி விளையாட்டு அமைச்சு அறிவுறுத்தி இருந்தது. இதற்கிடையே நாட்டில் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் வேறு. எதையும் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என்பதற்கு இது நியாயமான சாக்காக எடுத்துக்கொள்ளலாம்.
இதனால் தேர்தல் நடத்த முடியாமல் காலாவதியான விளையாட்டு நிர்வாகங்களுக்கு மூன்று மாத சலுகைக் காலம் வழங்கப்பட்டது.
இந்தக் குழப்பத்திற்கு மேல் பிஃபா புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்தது. அதாவது பிஃபாவுக்கு இணங்கக் கூடிய இணையாகச் செல்லும் புதிய யாப்பு ஒன்றை இலங்கை கால்பந்து சம்மேளனம் தயாரித்து அதன் கீழ் தேர்தலை நடத்த வேண்டுமாம். ஆனால் தேர்லை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கும்போது புதிய யாப்பை தயாரிப்பது குதிரைக்கொம்பு.
இதுவரை இவ்வாறான ஒரு யாப்பு ஒன்றை தயாரிக்க முடியாத நிலையிலே அதன் கீழ் தேர்தலை நடத்துவதும் நிச்சயமில்லாத ஒன்றாக உள்ளது.
இவ்வாறான குழப்பமான சூழலிலேயே இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் ஒமர் ஒரு வாரத்திற்கு முன்னர் கட்டார் சென்று சர்வதேச கால்பந்து சம்மேனத் தலைவர் கினியானி இன்பென்டினோவை சந்தித்தார். இலங்கை கால்பந்து எதிர்காலம் பற்றிய தீர்மானங்கள் எடுப்பதில் இந்த சந்திப்பு முக்கியமாக இருந்தது.
குறிப்பாக இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனையொட்டியே இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தைச் சேர்ந்த தூதுக் குழு ஒன்று இலங்கை வருகிறது.
மூன்று நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கை வந்த இந்தத் தூதுக் குழு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் உட்பட இலங்கை கால்பந்து நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக செயற்பாடு மற்றும் தேர்தல் பற்றி இந்தத் தூதுக்குழுவின் ஆலோசனைகள் முக்கியமானதாக இருக்கும். அதேபோன்று தட்ட முடியாத அறிவுறுத்தலாகவும் அமையும்.
“ஓகஸ்ட் 31ஆம் திகதி கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்த முடியவில்லை. அப்படியென்றால் விளையாட்டு அமைச்சு எடுத்திருக்கும் முடிவுக்கு அமைய இலங்கை கால்பந்து சம்மேளனத் தேர்தலை விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தின் பெறுப்பில் பெற்று நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
என்றாலும் கால்பந்து நிர்வாகம் தொடர்பில் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் எடுக்கின்ற நடவடிக்கைகள் சர்வதேச கால்பந்து பிரதிநிதி களுடன் மேற்கொள்ளப்படுகின்ற பேச்சுவார்த்தை வரையில் ஒத்திவைத்திருக்கிறோம். அதனால் அவசர முடிவு ஒன்றுக்கு வரப்போவதில்லை” என்று விளையாட்டு பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய கூறுகிறார்.
எனவே ஓகஸ்ட் 31க்கு பின்னரான கால்பந்து நிர்வாகம் என்பது யாருக்கும் தன்னிஷ்டத்திற்கு முடிவு எடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கப்போகிறது. அரசியல் நிர்வாகத்தால் எடுக்கப்படும் அதிரடி முடிவுகளாகட்டும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளாகட்டும் எதுவும் பிஃபாவை திருப்திப்படுத்தப்போவதில்லை.
பிஃபாவுக்கு தலையாட்டுவதைத் தவிர இதில் வேறு தேர்வு இல்லை என்பதை இந்தியாவை பார்த்து புரிந்துகொண்டால் போதுமானது.