IMF வழங்கிய நிதியுதவி நாட்டிற்கு புதிய நம்பிக்கை | தினகரன் வாரமஞ்சரி

IMF வழங்கிய நிதியுதவி நாட்டிற்கு புதிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் 2.9பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதானது நாட்டின் பொருளாதாரத்தில் புதிய நம்பிக்கைக்கு வழிவகுத்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  அதேவேளை அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் எதிர்க்கட்சி அது தொடர்பில் மௌனம் காக்காமல் தெரிவுக்குழு ஒன்றை கோர முடியும் என சபையில் தெரிவித்த அமைச்சர் அந்த தெரிவுக் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கவும் தயார் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், 

நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் போன்று மூன்று மடங்கு செலவினங்களுக்கு அவசியமாக உள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் 30இலட்சம் பேருக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பல அரச நிறுவனங்கள் நட்டமீட்டும் நிலையிலேயே இயங்குகின்றன. 

அந்த வகையில் வருமானத்தை அதிகரித்து செலவுகளை குறைக்கவும் வெளிநாட்டுக்கு எமது நிதி செல்வதை தடுக்கவும் அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ளவும் என இந்த நான்கு முக்கிய நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Comments