ஆடைக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

ஆடைக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு

நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் ஆடைக் கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கும் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த ஆலோசனையை வழங்கினார்.  

ஆடைக் கைத்தொழிலில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடிய பாதகமான விளைவுகளை கண்டறிவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் (08) நடைபெற்றது.  

இலங்கையில் ஆடைக் கைத்தொழிலானது ஏற்றுமதி துறையில் முன்னணி வகிக்கின்றது. எனவே இத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்து இச்சந்திப்பில் நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது.  

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, மூலப்பொருட்கள், அந்நியச் செலாவணி ஆகியன இத்துறையில் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகள் குறித்தும் இச்சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. 

நாடு எதிர்நோக்கியுள்ள இந்த சவாலான தருணத்தில் ஆடைக் கைத்தொழிலை பாதுகாத்து அதன் முன்னேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அத்துறையுடன் தொடர்புடைய அரச திணைக்களங்களின் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தனர்.  

இது தொடர்பில் அமுல்படுத்தக்கூடிய உடனடி தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 

Comments