பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

அண்மைக்காலமாக நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மலையகப் பகுதிகளில் பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரம், தொழிலாளர்  நலன்கள் மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் நீண்டகால  திட்டமிடல் அடிப்படையில் அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகளின்றி இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு மலையகத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்.  

பேராசிரியர் எஸ். விஜயசந்திரனின் அழைப்பின் பேரில் கொழும்பு 'கெப்ரி' தனியார் விடுதியில் கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற பூர்வாங்க கலந்துரையாடலில் சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வே. இராதாகிருஷ்ணன், பழனி திம்பரம், வடிவேல் சுரேஷ், ஜீவன் தொண்டமான், வேலு குமார், எம் உதயா மற்றும் பேராசிரியர் சந்திரபோஸ், பெ. முத்துலிங்கம் உள்ளிட்டோருடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம், செயலாளர் நாயகம் எஸ். விஜயசந்திரன், முன்னாள் எம்.பி மாரிமுத்து, தொழிலதிபர் எஸ். மணிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். 

மலையக மக்களின் அரசியல் உரிமைகள், பொருளாதாரம், கூட்டு ஒப்பந்தம் மற்றும் ஏனைய சமூக நிலைமைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் அந்தந்த துறைகள் சார்ந்த நிபுணர்கள், சிவில் செயற்பாட்டாளர்களின் குழுக்களை அமைத்து செயற்படுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. 

Comments