இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் ஐந்து அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பல்துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி இணையாசிரியர் மர்லின் மரிக்கார் 'மைச்சுடர் மாமணி சக்ரா விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த தினம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதியாகும். அதனையொட்டி தமிழ்நாட்டின் கோவை மாவட்ட உலக செம்மொழி பயிலரங்க மன்றம், தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை, திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேசன், சேலம் மாவட்ட ஸ்ரீ சக்ஸஸ் அகடமி, ஈரோடு ஸ்ரீ ஹயக்ரீவர் கலை மற்றும் கலாசார அகடமி ஆகிய அமைப்புகள் இணைந்து பல்துறைச் சாதனையாளர்களுக்கு விருது சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கவென சாதனையாளர்களிடம் இருந்து கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி இருந்தன.
ஆசிரியர்கள், இளம் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என ஒன்பது பிரிவுகளின் கீழ் சாதனையாளர்களிடம் இருந்து இணையதளம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கேற்ப 777பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அந்த வகையில் நான்கு ஊடகவியலாளர்கள் மைச்சுடர் மாமணி சக்ரா விருது சான்றிதழ் வழங்கி இத்திட்டத்தின் கீழ் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இவ்விருதைப் பெற்றுக்கொண்டுள்ள ஒரே இலங்கை ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் ஆவார். ஏனைய மூன்று ஊடகவியலாளர்களும் தமிழகத்தின் தர்மபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் இலங்கை மருத்துவர்கள் சங்கம், இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம், சுகாதார கல்வி பணியகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களின் விருதுகளையும் சான்றிதழ்களையும் இவரது கட்டுரைகள் ஏற்கனவே வென்றுள்ளமை தெரிந்ததே.