ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் இலங்கைக்கு ஆதரவாக 27நாடுகள் இருக்கின்றன என்பது உறுதியாகியுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக 20நாடுகள் வாக்களித்துள்ளன. ஆனால் மேலும் 20நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. இலங்கைக்கு ஆதரவாக 07நாடுகள் வாக்களித்ததுடன் 27நாடுகள் பிரேரனைக்கு எதிராகவுள்ளமையே தெளிவாகிறதென்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரின் ஊடகச் செயலாளர்கள், ஊடக இணைப்பாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு பேசும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செயலமர்வு கடந்த 07ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,
பிரேரணைக்கு எதிராக அதாவது, இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான்,பொலிவியா, கியூபா,எரித்திரியா,உஸ்பெகிஸ்தான், வெனிசியூலா என்பன வாக்களித்தன.
அத்துடன் இந்தியா, ஜப்பான், மலேஷியா, இந்தோனேஷியா, பிரேஸில், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் உள்ளிட்ட 20நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன.
ஆரம்பத்தில் இலங்கை்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக சுமார் 30 நாடுகள் வாக்களிக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் அது 20 நாடுகளாக குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கே.அசோக்குமார்