தற்போதைய பொருளாதார வீழ்ச்சி அதிக கேள்வியினால் ஏற்பட்டதல்ல | தினகரன் வாரமஞ்சரி

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி அதிக கேள்வியினால் ஏற்பட்டதல்ல

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு பொருளாதாரப் பின்னடைவாகும். இலங்கைப் பொருளாதாரம் 2022இன் முதல் காலாண்டில் 1.6 சதவீத வீழ்ச்சியையும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீத வீழ்ச்சியையும் எதிர்நோக்கியது. உலக வங்கியின் அண்மையை எதிர்வு கூறல்களின்படி இலங்கை 2022 ஆண்டில் 9.2 சதவீத பொருளாதார வீழ்ச்சியை அடைவதோடு, 2023இலும் 4.2 சதவீதத்தினால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தகவல்களின்படி, 2022இல் இலங்கைப் பொருளாதாரம் 8.8 சதவீதத்தினாலும் 2023இல் 3.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் கொவிட் 19 இற்குப் பிந்திய தெற்காசியாவின் பொருளாதார மீட்சியானது அருமையானதாக உள்ளதாக அவ்வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன.

2022இல் இலங்கையைத் தவிர சகல தெற்காசிய நாடுகளும் நேர்க்கணியமான பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மாலைதீவு வங்காளதேசம் மற்றும் இந்தியா 7 சதவீதத்திற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. தெற்காசியாவின் சிறிய பொருளாதாரங்களாகிய நேபாளமும் பூட்டானும் கூட 4 சதவீதத்திற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே பிராந்நியத்தில் உள்ள ஏனைய நாடுகள் திருப்திகரமான பொருளாதார விரிவாக்கத்தை எய்தியுள்ள நிலையில் இலங்கை அதற்கு நேரெதிராக மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையானது சர்வதேச ரீதியிலோ அல்லது பிராந்திய ரீதியிலோ ஏற்பட்ட பொருளாதாரத் தொய்வுகளால் உருவாகிய ஒன்றல்ல. மாறாக இலங்கை தானாகத் தேடிப் பெற்றுக்கொண்ட ஒன்றாகும். அரசியல் மயப்படுத்தப்பட்ட பிழையான பொருளாதாரக் கொள்கைத் தெரிவுகள் தான்தோன்றித் தனமான பொருளாதாரத் தீர்மானங்கள் நிபுணர்களின் கருத்துகளை செவிமடுக்காமை உரிய காலத்தில் அவசியமான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்காமை, கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்கற்காமை பிரச்சினைகள் தாமாகவே தீர்ந்து போகும் என்ற மூடநம்பிக்கை போன்றனவே, இப்பிரச்சினைக்கான உடனடிக்காரணங்களாகும். பொருளாதாரத்தின் நிறுவன ரீதியான கட்டமைப்புகள் சரிவர இயங்காைம ஊழல் இலஞ்ச மோசடிகள் போன்றன தலைவிரித்தாடுகின்றமை என்பன இலங்கையின் நடைமுறைசார்ந்த அரசியல், பொருளாதார இயங்கு நிலையை அவதானிக்கும் போது புலப்படும், முக்கியமான பலவீனம் யாதெனில் பொறுப்புக் கூறும் பொறிமுறை இருந்தும், பாரிசவாத நிலையில் அது முடங்கிப்போயுள்ளமையாகும். பொறுப்புக் கூறல் இல்லாத அதிகாரங்கள் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கும் இட்டுச்செல்லப்படுவதும். அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவரும் பொறுப்புக் கூறாத நிலையும் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாகும். இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இதே நிலைமை தொடர்வதும் அவதானிக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு பொருளாதார பின்னடைவு 2008இல் அமெரிக்காவில் உருவாகிய போது பாதிக்கப்பட்ட நிறுவனங்களை மீட்டெடுக்க அரசாங்கம் தலையிட்டது. வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு பெரும் எடுப்பில் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. உலக வங்கி உட்பட ஏனைய நிறுவனங்கள் இதனை ஆதரித்தன. மாறாக வரிகளை அதிகரிக்க ஆலோசனைகள் முன்வைக்கப்படவில்லை. அதன் மூலம் மக்களின் கொள்வனவு சக்தியை அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக, வரிகளை அதிகரிக்குமாறு IMF நிர்ப்பந்திப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் ஒரு சில வருடங்கள் தவிர ஏனைய எல்லா ஆண்டுகளிலும் அரசாங்கத்தின் அடிப்படை நிலுவை பற்றாக்குறையாகவே இருந்துள்ளது. அதனை உடனடியாக சீர்செய்ய முனைவது மடமை. அதுவும் பொருளாதாரம் பின்னடைவில் உள்ள நிலையில் அதனைச் செய்ய முனைவது பொருளாதாரத்தின் ஆணிவேரையே பிடுங்கிவிடும். பொருளாதாரத்தின் இப்போதைய வீழ்ச்சி மேலும் தீவிரமடைந்து பெருமந்தத்துக்கு இட்டுச்செல்லலாம். இப்போதைய பொருளாதாரத்தின் வீழ்ச்சி அதிக கேள்வியினால் ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக எரிபொருள் விலையேற்றம் போன்ற நிரம்பல் பக்க காரணிகளால் ஏற்பட்டதாகும். அதனைச் சீர்செய்ய இலக்குப்படுத்தப்பட்ட முதலீட்டுச் சீர்திருத்தங்களுடன் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைளும் அவசியம். வரி அதிகரிப்பின் மூலம் அதனைச் செய்ய முடியாது.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments