நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்; தாழமுக்கம் சூறாவளியாக உருவாகவும் சந்தர்ப்பம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்; தாழமுக்கம் சூறாவளியாக உருவாகவும் சந்தர்ப்பம்

சீரற்ற காலநிலை மேலும் தொடருமென்றும் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடற்றொகுதியில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக நாட்டில் சீரற்ற காலநிலை மேலும் நீடிப்பதுடன்கடும்மழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பும் காணப்படும் என்றும் மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் அது தொடர்பில் செம்மஞ்சள் எச்சரிக்கையையும் எடுத்துள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் மேற்படி தாழமுக்கம் இன்று 23ஆம் திகதி காற்றழுத்த மண்டலமாகவும் அதனையடுத்து நாளை சூறாவளியாகவும் மாற்றமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசை ஊடாக மேற்படி தாழமுக்கம் 25ஆம் திகதி மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்பரப்புகளில் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையும் கடல் கொந்தளிப்பும் காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள அந்த திணைக்களம் கடல்தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 100மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இடம்பெற்ற நிலையில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல்மாகாணம், சப்ரகமுவமாகாணம் ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அந்த காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளதாகவும் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments