அனுதர்ஷி லிங்கநாதன்
பெண் அதிகாரத்தை அல்லது பெண்களால் நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத ஓர் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், இலங்கையில் பால்நிலைச் சமத்துவம் என்பது பெயரளவிலேயே உள்ளது.பெண்கள் எந்தத் துறையைத் தெரிவுசெய்து கல்வி கற்க வேண்டும் என்பதை குடும்பமும் சமூகமும் தீர்மானிக்கின்றன.
அதேவேளை ஊடகத்துறையைத் தெரிவு செய்வதில் பெண்கள் பின்னிற்கிறார்கள் அல்லது ஊடகத்துறையைத் தெரிவுசெய்வதை அவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை.
இதையெல்லாம் தாண்டி ஊடகத்துறையை படிப்பவர்கள் அல்லது தமது பட்டப்படிப்பிற்காகத் தெரிவுசெய்பவர்களில் பெரும்பாலானோர் தமது தொழில்துறையாக ஊடகத்துறையைத் தெரிவுசெய்வதில் பெரும்பாலான பெண்கள் பின்னிற்கின்றனர். இலங்கையில் ஊடகக்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில், அத்துறையில் கல்விகற்றவர்கள் அத்துறையில் ஈடுபடாது இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
ஆங்கில மொழிமூலம் ஊடகத்துறைப்பட்டத்தை வழங்கும் திருகோணமலை வளாகத்தில் தமிழ்பேசும் பெண் மாணவிகளுடைய தொகை மிகக் குறைவாகவே உள்ளது. தற்போதைய கல்வியாண்டில் இரண்டாம் வருடத்தில் இரண்டு தமிழ்பேசும் பெண்களும், மூன்றாம் வருடத்தில் ஆறு தமிழ்பேசும் பெண்களே உள்ளனர்.நான்காம் வருடச் சிறப்புக் கற்கையில் எந்த ஒரு தமிழ்பேசும் மாணவியும் இல்லை. யாழ். பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கும் குறைந்தளவிலான தமிழ்பேசும் பெண்களே ஊடகக் கல்வியைத் தொடர்கின்றனர்.
கல்வியில் மட்டுல்ல இலங்கையின் ஊடகத்துறையில் தொழில்புரிவதும் பெண்களுக்கு சவால்மிக்கதாகவே இருக்கிறது. ஊடக நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்கும் போதும், வேலைப் பகிர்ந்தளிப்பிலும் பால் நிலைச் சமத்துவத்தைப் பேண வேண்டும்.
2011ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 31 அச்சு ஊடக நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 192 பெண் ஊடகவியலாளர்களும் 464 ஆண் ஊடகவியலாளர்களும் இருப்பதாகக் கூறுகின்றது. அதாவது, 29.5 வீதமான பெண்களே ஊடகவியலாளர்களாக இருக்கிறார்கள். இதில் தமிழ்பேசும் பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். அண்மைய ஆய்வுகள் ஆங்கில ஊடகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன.
இலங்கையின் தமிழ் அச்சு ஊடகங்களில் பெண்களின் வகிபாகம் குறைந்த அளவில் உள்ளது. பெரும்பாலான அச்சு ஊடகங்கள் ஆணாதிக்கக் கட்டமைப்பின் கீழேயே இயங்கி வருகின்றன. அச்சு ஊடகங்களில் உயர் பதவிகளில் பெண்கள் இல்லை.
அத்தோடு பெறுமானமுடைய உள்ளடக்கங்களில் பணியாற்ற அனுமதிப்பது குறைவு, தீர்மானம் எடுக்கும் வாய்ப்பு குறைவு, செய்திசேகரிப்பு மற்றும் செய்தித் தொகுப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு என்பனவும் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. தமிழ் அச்சு ஊடகங்களில் பத்திரிகையாசிரியர் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. நிருபர்களாகவோ, உதவி ஆசிரியர்களாகவோ தான் பெண்கள் பதவி வகித்து வருகிறார்கள். ஆளுமை நிறைந்த எத்தனையோ பெண்களுடைய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.
தாக்கமிக்க துறைகளில் முக்கியமானவை ஊடகங்கள். அவற்றில் பெண்கள் கருத்தியல் ரீதியாக மிகக்குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். அத்துடன், ஊடகங்கள் பெண்களுக்கு என்று ஒரு கட்டமைப்பினையும் ஏற்படுத்தி விடுகின்றமை நோக்குதற்குரியதாகும். பெண்களுக்கு அரசியல் கலாசாரம் பற்றி பேசத் தெரியாது. ஆனால், அதைப் பேணுவதற்கும் பின்பற்றுவதற்கும் பெண்தான் தேவை என்றவாறான ஒரு கட்டமைப்பை ஊடகங்கள் கொடுத்து வருகின்றன.
பெரும்பாலான ஊடகங்கள் சமாதானம் பற்றியோ அரசியல் பிரச்சினைகள் பற்றியோ பெண்களிடம் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வது குறைவாகவே உள்ளது அல்லது பெண்களுடன் கருத்துப்பகிர்வை மேற்கொள்வதில்லை என்றுதான் கூறவேண்டும். பெண்கள் தொடர்பாக வரக்கூடிய நிகழ்ச்சிகள், செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றில் பெண்களின் குடும்ப அலகு பற்றி மட்டுமே அழுத்தம் கொடுத்துப் பேசப்படுவதாகவுள்ளது. அழகுக்கலை, சமயற்கலை, கலை, கலாசாரம் போன்றவை சம்பந்தமான உள்ளடக்கங்களைத் தான் வெகுஜன ஊடகங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு வழங்குகிறார்கள்.
அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலோ, ஆய்வுகளிலோ, கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் போன்ற கனதியான விடயங்களில் பெண்களின் பங்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஊடக நிறுவனங்களில் பாலியல் ரீதியான சுரண்டல்கள், வன்முறைகள் போன்றவற்றை பெண்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலான பெண்கள் தமது தொழில் பாதுகாப்புக் கருதி தமக்கெதிரான வன்முறைகளையும் நிராகரிப்புக்களையும் சகித்துக்கொண்டு வாழப் பழகியுள்ளனர்.
அதேவேளை, செய்தி அறைகளில் சமத்துவம் நிலவவேண்டும். காலங்காலமாக ஊடகங்களில் நடைபெறும் ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ள ஆரம்பித்தோமானால் மாற்றம் ஏற்படவாய்ப்பில்லாது போகும். எனவே, செய்தி அறைகளில், ஊடக நிறுவனங்களில் பெண்கள் தமது உரிமைகள் நிராகரிப்புக்கு எதிராக தாமே குரல்கொடுக்க வேண்டும். தமது பிரச்சினைகளுக்காகப் பேசவேண்டும்.
ஊடக நிறுவனங்களிலேயே பால்நிலைச் சமத்துவம் இல்லாத போது அவர்கள் எவ்வாறு பால்நிலைச் சமத்துவம் பற்றிய புரிதலை சமூகத்திற்கு வழங்க முடியும். பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண் கல்வி என்பன அடிப்படை மனித உரிமையாகும். ஊடகத்தொழில் துறையில் மாத்திரமல்லாது ஊடகக்கல்வியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் சவாலைப் பெண்கள் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்.
ஆணாதிக்கவாத சமுதாயத்தால் நிராகரிக்க முடியாதவர்களாக நாம் மாறவேண்டும். பெண்கள் சிந்தனையாலோ, அறிவாற்றலாலோ அல்லது எந்த வகையிலும் ஆண்களைவிட குறைந்தவர்கள் அல்லர்.