வல்லுறவு சிந்தனைகள் வலுக்கட்டாயமாக வேரறுக்கப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

வல்லுறவு சிந்தனைகள் வலுக்கட்டாயமாக வேரறுக்கப்பட வேண்டும்!

பாலியல் வன்கொடுமைகள், வல்லுறவுகள் இன்றும் கட்டுக்கடங்காத நிலையை கடந்து விட்டது. இது பொது வெளியில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சேலத்தில் 40 பெண்களை சீரழித்துள்ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். ஆட்டோ டிரைவரான ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் ஓடியே போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ். அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு மோகன்ராஜ் கல்யாணம் செய்யவில்லை. பதிலாக, பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார். பெண்களை ஏமாற்றி, நாசம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதை பற்றி அண்மையில் ஒரு பெண் பொலிஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமானது. விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன. பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை, ஆயுள்தண்டனை, தனிமைச் சிறை, வேதியியல் ரீதியான ஆண்மை நீக்கம், குண்டர் தடுப்புச் சட்டம், விரைவான நீதி விசாரணை, தனி நீதிமன்றங்கள் என அரசியல் தலைவர்கள், ‘சமூக பிரபலங்கள்’, தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், தன்னார்வக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் என ஆளுக்கொரு தீர்வு சொன்னாலும் அனைத்து தரப்பினரும் விசாரணையை விரைவுபடுத்துவதையும், தண்டனையை அதிகரிப்பதையுமே தீர்வுகளாக முன் வைக்கிறார்கள்.

இவை அனைத்தும் குற்றம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளை தண்டிக்கும் முறை பற்றியே பேசுகின்றன. தண்டனை உண்டு என்ற அச்சம் இருந்தால் வல்லுறவுக் குற்றங்கள் நிகழாது என்ற மாயையை உருவாக்குகின்றன. பாலியல் வல்லுறவில் ஈடுபடும் தனிமனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் பாலியல் உணர்வு, பாலியல் நுகர்வு வக்கிரமாகவும், வெறியாகவும் மாற்றப்படுவது எப்படி? மாற்றத் தூண்டுவது யார்?; இந்தக் கயவர்களுக்கு என்ன தண்டனை என்று எவரும் பேசுவதில்லை.

மனிதர்களின் இயல்பான உயிரியல் தன்மையான பாலியல் உணர்வினை வெறியாக உருமாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது இன்றைய சமூகப் பண்பாட்டு அம்சங்கள் தான். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச வக்கிரங்கள், கைபேசியில் தடையின்றி இவற்றினை அணுகும் வாய்ப்புகள், ஆபாச சீரழிவு வாழ்வினைப் போற்றுகின்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கதைகள், கீழ்த்தரமான நாவல்கள் சொல்லி மாளாத அளவில் வளர்ந்தோங்கியுள்ளன.

பொழுதுபோக்கு என பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் தங்களது இலாபவெறிக்காக மக்களின் உணர்வுகளுடன் நடத்துகின்ற இந்த வியாபார விளையாட்டின் பலியாடுகள் பெண்கள். உலகமயமாக்கலின் வரவிற்கு பின் சமூகத்தின் பண்பாடும் தாராளவாதமாக மாறி வருகின்றது. ‘பொருட்களை வாங்கி நுகர்வது மட்டுமே இன்பம்’ என்று போதிக்கும் புதிய தாராளவாதக் கொள்கை பெண்ணையும் போகப் பொருளாக பார்க்க வைக்கின்றது.

அதனால் தான் தங்களிடம் சிக்குகின்ற ஒரு பெண்ணை பாலியல் வெறிபிடித்த ஆண்கள் மிருகத்தை விடவும் கேவலமாக கூட்டு வல்லுறவு செய்து பெண் உறுப்பையும் உடலையும் சிதைத்து வீசியெறிய முடிகிறது.

தெருவுக்கு தெரு மதுபானக் கடைகள் திறந்து விடப்பட்டு குடிவெறிபிடித்த சமூகமாக மாற்றப்படுகின்றது. தனது காமஇச்சையை தீர்க்கும் ஒரு பொருளாக பெண்ணை பார்க்கும் ஆணாதிக்க சமூகப் பார்வையில் ஏற்கனவே வளர்க்கப்பட்ட ஆண் பாலியல் வெறியும், குடிவெறியும் ஏறினால் என்ன செய்வான். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கமும், ஊடகங்களும், எப்படியும் வாழலாம் என்ற தாராளவாத சிந்தனை போக்காளர்களும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு கண்ணீர் வடிப்பது போல் நடிக்கிறார்கள். கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்கப் போவதாக கதைக்கிறார்கள்.

இன்னொருபுறமோ ஆணாதிக்க வல்லுறவு சிந்தனையை பெண்களுடைய உடை தான் தூண்டுகிறது எனப் ‘பெரிய மனிதர்கள்’ பேசுகிறார்கள்.

பெண்களுடைய உடைதான் இத்தகைய குற்றத்தை துண்டுவதாக ஊடகங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. நிலவுடைமை சமூக உணர்வில் பிற்போக்காக சிந்தித்து பழகியிருக்கும் இவர்களால் பெண் சுதந்திரமாக வாழ்வதும், ஆணுக்கு நிகராக சமமாக மதிக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள முடியாததாக உள்ளது.

பெண்ணின் உரிமைகளை அங்கீகரிக்கும் மனநிலை சமூகத்தின் பொது மனநிலையாக மாற்றப்பட வேண்டும்.

Comments