ஐயா, அம்மணி மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் பிரதிநிதிகளே! (லேடிஸ், ஜென்டில்மென் என்ட் ரெப்பிரசன்டேட்டீவ் ஒஃப் டிரான்ஸ்ஜென்டர் பீப்பல்) என்று எந்தவொரு நிகழ்ச்சியிலாவது பேச்சாளர் சபையை நோக்கி விளிக்கக் கேட்டிருக்கிறீர்களா? ஆனால் இப்படித்தான் நிகழ்ச்சிகளில் தமது உரைகளை பேச்சாளர்கள் ஆரம்பிக்கிறார்கள், இங்கே இலங்கையில் அல்ல, அங்கே பாகிஸ்தானில்! எனக்கு இதைச் சொன்னது மீரப் இதைச் சொல்லும்போது எனக்கு மட்டுமல்ல நிச்சயம் அது அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கும்.
'பாகிஸ்தான்' என்ற பெயரைக் கேட்டதுமே தீவிரவாதம், குண்டுவெடிப்பு, சமய அடிப்படைவாதம் என எப்போதும் வன்முறைகளே மனக்கண் முன் வந்து செல்வது வழக்கம்தானே! ஆனால் பாகிஸ்தானில் மனித உணர்வுகளுக்கு வழங்கும் கெளரவத்தைத் தெரிந்து கொண்டதும் அது என்னில் வியப்பை ஏற்படுத்தாமலா இருக்கும்! தனிமனித சுதந்திரத்தை பெரிதும் மதிக்கும் அமெரிக்காவில்கூட லேடிஸ் என்ட் ஜென்டில்மென் என்றே மக்கள் இன்னமும் விளிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நடைமுறை எங்களுக்கு சற்று வித்தியாசமாகவே தெரிந்தது!
ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான சிவில் உரிமைகள் பற்றிய நிகழ்ச்சித்திட்டமொன்றிற்காகவே நாம் அமெரிக்கா சென்றிருந்ததால் அங்கே சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகளுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். அமெரிக்காவில் மனித மற்றும் சிவில் உரிமைகளுக்கு பஞ்சமே இல்லை. அந்நாட்டுடன் ஒப்பிடும்போது தெற்காசிய நாடுகளில் உரிமைகள் மிகவும் குறைவு என்றாலும் மீரப் சொன்னது போன்ற தகவல்கள் எமக்கு படிப்பினையாகவும் இருந்தன.
திருநங்கைகள், பொதுவாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் இடம் இல்லை என்பதே என் அனுபவ ரீதியான புரிதலாக இருந்தது. திருநங்கைகளை என் இஸ்லாமிய நண்பியொருத்தி அவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள். ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறுவார்கள். எனவே பாகிஸ்தானில் அவர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நடைமுறையில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கென தனியானதொரு சட்டம் அமுலில் இருக்கின்றது. அது 'மாற்றுப்பாலினத்தவரை பாதுகாக்கும் சட்டம். ஒரு ஆண் தன்னை பெண்ணாகவோ அல்லது ஒரு பெண் தன்னை ஆணாகவோ அடையாளப்படுத்த விரும்பும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக தங்கள் நாட்டின் ஆட்பதிவுத் திணைக்களத்துக்குச் சென்று தன்னை மாற்றுப் பாலினத்தவராக பதிவு செய்து கொள்ள முடியுமாம்.
இதற்காக அவர்கள் எந்தவொரு உடல் ரீதியான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லையென்றும் வெறுமனே பதிவு மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும் மீரப் கூறினார். அதற்கமைய அவரவர் விருப்பு வெறுப்புக்கமைய தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது மாற்று பாலினத்தவராகவோ பதிவு செய்துகொள்ளும் சுதந்திரம் பாகிஸ்தானியர்களுக்கு உண்டு!
பாகிஸ்தான் மாற்று பாலினத்தோர் நாட்டின் ஏனைய பிரஜைகள் போலவே சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கும் சட்டத்தில் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் அவர்களின் உரிமைகளும் முக்கியத்துவமும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் மாற்றுப் பாலினத்தாருக்கு சம அந்தஸ்தும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் மீரப் கூறினார்.
இவையனைத்தையும்விட மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் பாகிஸ்தானின் பல பிரதேசங்களிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருவதாக மீரப் தெரிவித்தபோதுதான் பாகிஸ்தான் அவர்களை எவ்வளவுக்கு கௌரவப்படுத்துகிறது என்பதை என்னால் உணர்வுபூர்வமாக அறியமுடிந்தது.
பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையில்கூட அந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ஆண், பெண், மாற்று பாலினத்தைச் சேர்ந்த ஆண், மாற்றுபாலினத்தைச் சேர்ந்த பெண் என்பது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக மீரப் அமெரிக்கர்கள் முன்னிலையில் பெருமையாகக் கூறினார். மாற்றுப்பாலினத்தார் பல அசெளகரியங்களை எதிர்கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் எதிர்நோக்குமொரு பிரச்சினைதான் கழிப்பறை. நம் நாட்டில்கூட இப்படியானதொரு அசெளகரியமான சம்பவத்தை பார்த்த சந்தர்ப்பம் எனக்கும் உண்டு. தன்னை ஆணாக பிரதிபலிக்கும் பெண்ணொருவர் மிகப் பிரபலமானதொரு இடத்தில் பெண்களுக்கான மலசலகூடத்துக்கு செல்ல முற்பட்டபோதும் அங்கிருந்த சுத்திகரிப்பாளர்கள் உள்ளி்ட்ட ஏனைய பெண்கள் அவரை மேலும் கீழுமாக பார்க்கத் தொடங்கியதையடுத்து அவர் அப்படியே வெட்கத்தில் திரும்பிப்போய்விட்டார். இது மிகவும் கொடுமையானதொரு சூழ்நிலையாகவே அப்போது எனக்கு தென்பட்டது.
ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை உளரீதியாக தன்னை ஆணாக பிரதிபலிக்கும் பெண்கள் உடல்ரீதியாக பெண்களாகவே இருப்பதால் அவர்கள் பெண்களுக்குரிய மலசல கூடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று உளரீதியாக தன்னை பெண்களாக பிரதிபலிக்கும் ஆண்களும் உடல்ரீதியாக ஆண்களாகவே இருப்பதனால் ஆண்களுக்கான மலசலக்கூடத்தை தாராளமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். அநேகமான இடங்களில் அனைத்து மனிதர்களும் ஒருவரே என்பதை பிரதிபலிக்கும் வகையில் பொதுவாக ஒரு மலசலகூடமே காணப்படும். அதில் ஆண், பெண் என்று எவ்வித பாகுபாடும் குறித்து காட்டப்பட்டிருக்காது. இதே உரிமையும் அனுமதியும் பாகிஸ்தான் மாற்றுப்பாலினத்தார்களுக்கும் இருப்பதாக மீரப் கூறினார். ஒவ்வொரு பிரஜையும் மன ரீதியாக தங்களை எவ்வாறு உணர்ந்தாலும் தங்களது உடல் அமைப்பை பொறுத்தே அவர்கள் மலசலகூடத்தை தெரிவு செய்வதாகவும் மீரப் எனக்கு விளக்கமளித்தார்.
பாகிஸ்தான் என்றதும், 'உங்கள் ஜனாதிபதி எப்படியிருக்கின்றார்? அவருடைய ஆட்சி எப்படியுள்ளது?,' என அமெரிக்கர்கள் ஆசையுடன் கேட்கத் தவறவேயில்லை. அவ்வளவுக்கு முன்னாள் கிரிக்கட் விளையாட்டு வீரரான பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான்கான் அமெரிக்கர்களிடையே பிரபலம்!
உரிமைகளை பற்றி பெருமையாக பேசிவந்த மீரப், பாகிஸ்தானின் பல பிரதேசங்களில் 'கெளரவம்' எனும் பெயரில் தொடர்ந்தும் நடத்தப்பட்டுவரும் கொலைக் குறித்து எம்மிடம் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார். 'கொலையில் என்ன கெளரவம் வேண்டிக்கிடக்கு? இது கெளரவத்தின் பேரில் நடத்தப்படும் கொலை. அநேகமான அப்பாவி பெண்கள் தமது குடும்பத்துக்கு பொருத்தமில்லாத ஆடவர் ஒருவரை காதலிப்பதன் காரணமாகவே அக்குடும்பத்திலுள்ள ஆடவர்களால் கொலை செய்யப்படுகின்றனர். இக்கொலை குடும்ப கெளரவத்தை காப்பாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது. இது மிகவும் கொடுமையான விடயம். இதற்கும் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்' எனக்கூறிய மீரப்புக்கு என்றாவது ஒருநாள் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதே கனவாம்!
மீரப்பின் காலுக்கு பொருத்தமான பாதணிகள் பாகிஸ்தானில் கிடைப்பது மிகக் கடினமாம். அதனால் அமெரிக்கா சென்ற முதல் நாள் தொடக்கம் மூன்று வாரங்களும் சென்ற அனைத்து மாநிலங்களிலும் நாமும் மீரப்புக்காக பாத அணிகளை தேட ஆரம்பித்தோம்,....
நினைவுகள் தொடரும்........
லக்ஷ்மி பரசுராமன்