பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது | தினகரன் வாரமஞ்சரி

பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது

மாதவிடாய் வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்லக்கூடாது என இருந்த தடையை இந்திய உச்ச நீதிமன்றம் அகற்றியவுடன், செயற்பாட்டாளர் கனகதுர்காவும், போராசிரியர் பிந்து அம்மணியும் கடந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

சபரிமலை என்பது ஒரு கோயில்தான். அது ஒரு தனி மதம் கிடையாது. கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை இதுநாள் வரை அனுமதிக்காமல் இருந்து வந்தது என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயலாகும். மேலும், பக்தி என்பது  பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில், பெண்கள் பலவீனமானவர்கள் கிடையாது. அதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து  வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்.

இந்த ஆண்டு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கனகதுர்காவுடன் பிபிசிக்காக அவர் அளித்த நேர்காணல்.

கேள்வி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: செப்டெம்பர் 28ம் திகதி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருத்தமானது என்று நினைக்கிறேன். இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றோ, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றோ, தீர்ப்பை மாற்ற வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை.

கேள்வி: கோயிலுக்குள் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார். சபரிமலை, செயல்பாட்டு இயக்கம் நடத்தும் இடமில்லை என்று அவர் கூறியுள்ளதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: செயல்பாட்டு இயக்கம் என்று சொல்கிறபோது அவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அமைச்சர் சுரேந்திரனின் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. முந்தைய தீர்ப்பை நடைமுறைபடுத்துவதில் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது. பெண்கள் சபரிமலை கோயிலை சென்றடைந்தால், அவர்களை பாதுகாப்பதும், கோயில் வரை சுதந்திரமாக செல்ல வழி செய்வதும், ஐயப்பனை வழிபட உதவுவதும் கேரள அரசு, காவல்துறை மற்றும் சமூகத்தின் பொறுப்பு. இதனை அவர்கள் செய்தாக வேண்டும்.

கேள்வி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றது கருத்தியல் சார்புடைய முடிவா? மத சார்புடைய முடிவா?

பதில்: இரண்டுமே. மத மற்றும் பாலின சமத்துவ ரீதியிலானது. இவை இரண்டையும் மனதில் கொண்டு, பெண்களுக்கான சுதந்திரம் பற்றி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க சொன்னதால்தான் நான் சபரிமலை சென்றேன். சபரிமலை ஐயப்பன் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

கேள்வி: திரும்பி வந்துபோது, நீங்கள் அதிக பிரச்சினைகள் எதிர்கொண்டீர்கள். உண்மையில் என்ன நடந்தது?

பதில்: சபரிமலைக்கு சென்று பத்து பன்னிரெண்டு நாட்களுக்கு பிறகு வீட்டை வந்தடைந்தேன். வீட்டுக்கு சென்ற நேரத்தில் எனது மாமியார் அங்கிருந்தார். கணவரும், குழந்தைகளும் அங்கில்லை. நான் உள்ளே நுழைந்தவுடன், அவர் என்னை வாய்மொழியாக திட்டியதுடன், பிறகு தாக்கவும் ஆரம்பித்தார்.

மரக்கட்டை கொண்டு குறைந்தது 12 முறை எனது தலை மற்றும் தோளில் அடித்தார். எனது தலை காயமடைந்திருந்ததால் நான் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன், எனது கணவர் நேராக என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த காவல் ஆய்வாளர் மூன்றரை மணிநேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எனது கணவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். சமரசம் செய்துகொள்ள அவர் தயாராக இல்லை.

நான் வீட்டுக்கு சென்றால், சில அரசியல் கட்சியினர் வீட்டை தாக்குவார்கள் என்பதால், சபரிமலைக்கு சென்றபோது என்னுடன் இருந்த நண்பர்களோடு நான் செல்ல வேண்டும் என்று எனது கணவர் கூறிவிட்டார்.

அதனால், நான் அரசின் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டேன். அங்கு சுமார் இருபது நாட்கள் இருந்தேன். நீதிமன்றத்தில் புகார் அளித்து, நீதிமன்றம் அளித்த ஆணையின்படி, வீட்டிற்கு சென்றேன்.

அன்று எனது வீட்டின் கதவு எனக்காக திறந்து இருந்தது. எனது கணவர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். என்னை அந்த வீட்டில் தனியே விட்டுவிட்டார். அன்று முதல் நான் இங்கு தனியாக வாழ்ந்து வருகிறேன்.

கேள்வி: குழந்தைகளை பார்க்க உங்களை அனுமதித்தார்களா?

பதில்: முதலில் எனது குழந்தைகளை பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை. குழந்தை நல ஆணையத்தில் நான் புகார் அளித்தேன். ஒரு வாரத்திற்கு ஒருமுறை குழந்தைகள் என்னை பார்க்க அனுமதிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது.

அதற்கு பின்னர், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குழந்தைகள் என்னோடு இருந்தார்கள்.

ஆனால், மார்ச் மாதம் விவாகரத்து கேட்டு எனது கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குழந்தைகளை மூளை சலவை செய்ய தொடங்கினார்.

மார்ச் மாதம் 28ம் திகதி முதல் எனது குழந்தைகளை பார்க்க முடியாமல் இருக்கிறேன். அன்றுதான் நான் அவர்களை கடைசியாக பார்த்தேன். எனது குழந்தைகள் என்னோடு இருக்க வேண்டுமென விரும்புகிறேன். 12 வயது வரை அவர்கள் எப்போதும் என்னோடு இருந்தார்கள். அவர்கள் இல்லாமல் இந்த வீட்டில் வாழ்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

பெப்ரவரி மாதம் நான் எனது குழந்தைகளோடு உரையாடியபோது, என் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு கிடையாது என்பதை அறிந்து கொண்டேன். ஆனால், எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் குழந்தைகளிடம் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

பின்னர், அவர்கள் என்னோடு வர விரும்பவில்லை என்றும், என்னை பார்க்க விரும்பவில்லை எனவும் கூறிவிட்டனர்.

கேள்வி: குழந்தைகளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென புகார் அளித்திருக்கிறீர்களா?

பதில்: மார்ச் மாதம் முதல் குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுள்ளேன். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. என்னால் அவர்களை பார்க்க முடியவில்லை. அவர்களை பார்க்கக்கூட நீதிபதி எனக்கு அனுமதி வழங்கவில்லை.

கேள்வி: உங்கள் கணவரின் எதிர்ப்புதான் என்ன?

பதில்: நம்பிக்கை, விசுவாசம், கருத்தியல் போன்றவற்றில் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளோம்.

என்றாலும், ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். முக்கிய பிரச்சினை ஏற்பட்டது சபரிமலையால்தான். நான் அவரிடம் சொல்லாமல் சென்றுவிட்டதுதான் காரணம். நான் ஐயப்பனை வழிபட்டது பெரியதொரு பரபரப்பை ஏற்படுத்தியது, என்னால் இந்த விடயம் தீவிரமானது, நான் சபரிமலையை புனிதமற்றதாக, அசுத்தமானதாக ஆக்கிவிட்டேன் என்று எனது கணவர் கூறுகிறார்.

கேள்வி: வாழ்க்கையில் இப்போது என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: குறிப்பிட்ட நோக்கம் என்று எனக்கு ஒன்றும் இல்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென நான் எப்போதும் விரும்பியதுதான் என்னை உள்ளூர பாதித்துள்ளது. இனி சமூகப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும் என்ற நோக்கம் உள்ளது.

கேள்வி: இந்த அனுபவத்திற்கு பிறகு, பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஊக்குவிப்பீர்களா?

பதில்: நான் பெண்களை ஊக்குவித்து வருகிறேன். நான் ஐயப்பனை தரிசித்த பின்னர், சுமார் 100 பெண்கள் சபரிமலைக்கு செல்லத் தயாராக இருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நான் அனுபவித்துள்ளதை அறிந்த பின்னர், அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்குமோ என தயங்குகிறார்கள்.

எனது அனுபவத்தை பார்த்த பின்னர், தங்களின் சொகுசு நிலையில் இருந்து வெளியில் வர சுமார் 95 சதவீத பெண்கள் விரும்பவில்லை.

இதற்குப் பின்னரும், சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள் உள்ளனர். நான் அவர்களுக்கு ஊக்கமூட்டி வருகிறேன்.  

Comments