![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/07/q2.jpg?itok=7mTMjGGh)
தெற்காசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்பது நேபாளத்திற்கு புதிதல்ல. தெற்காசிய பிராந்தியத்தில் இப்படி ஒரு விளையாட்டு விழாவை நடத்துவோம் என்று எண்ணம் தோன்றியபோது அதனை முதலில் நின்று நடத்திய நாடு நேபாளம் தான்.
1984ஆம் ஆண்டு முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்றபோதும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்கு அப்பால் பேசுவதற்கு எதுவும் இருக்கவில்லை. பின்னர் 1999ஆம் ஆண்டு காத்துமண்டு நகரில் மீண்டும் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றபோது கூட போட்டிகள் சுமுகமாகவே இருந்தன. ஆனால் நோபளம் மூன்றாவது தடவையாகவும் இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு போறுப்பேற்றது தன்னை விஞ்சிய சுமை என்பது பொதுவாக பார்த்தால் கூட புரிந்து கொள்ள முடியும்.
நாட்டின் பொருளாதாரம், ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நாட்டையே புரட்டிப் போட்டுவிட்டுச் சென்ற பயங்கர பூகம்பத்துக்குப் பின் தலைதூக்குவதற்கு இன்னும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நேபாளம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதென்பது, பிச்சை எடுப்பவனிடம் பத்துப் பேருக்கு சாப்பாடு போடுவதற்கு பொறுப்புக் கொடுப்பது போல சிரமமான வேலை.
அதாவது தெற்காசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இந்த விளையாட்டுப் போட்டி 2019மார்ச் 09தொடக்கம் 18ஆம் திகதி வரை காத்மண்டு, பொகார மற்றும் ஜனக்பூர் நகரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்தபோதும் நேபாளத்தால் சொன்ன நேரத்திற்கு போட்டியை நடத்த முடியவில்லை.
இலங்கைக்கு போட்டியை கொடுப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வந்தாலும் 2019மார்ச் முதலாம் திகதி பாங்கொக்கில் இடம்பெற்ற தெற்காசிய ஒலிம்பிக் குழு கூட்டத்திலேயே போட்டியை நடத்துவதை நேபாளத்திடமே கொடுப்பது என்று முடிவானது.
இத்தனை இழுபறிக்குப் பின்னரே தெற்காசிய விளையாட்டுப் போட்டி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கூட போட்டி நடக்குமா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கத் தான் செய்தது. ஏனென்றால் அப்போது கூட போட்டிக்கான ஏற்பாடுகள் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. மைதானத்தில் புற்கள் வளர்ந்து, கட்டுமாண வேலைகள் பூர்த்தி செய்யாமலேயே இருந்தது. அதாவது சராசரி நேபாளியர்களுக்கு அடுத்த வாரம் சர்வதேச அளவிலான போட்டி ஒன்று நடைபெறப் போவது என்பது பற்றிக் கூட தெரியாது.
ஒரு சர்வதேச போட்டியை நடத்தும் அளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் நேபாளிடம் இல்லை. காத்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் ஒரு உள்ளுர் விமான நிலையம் அளவுக்குத் தான் வசதிகள் இருக்கிறது. ஒரே நேரத்தில் பல விமானங்களை தரையிறக்கும் வசதிகள் இல்லாததால் வருகின்ற விமானங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 40நிமிடமாவது வானத்தில் வட்டமிட வேண்டிய நிலைமை.
இந்திய வானுக்கு மேலால் இருக்கும் தூசுப் படலம் காரணமாக சில விமானங்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டு பல மணி நேரம் தாமதத்திற்கு பின்னரே நேபாளத்திற்கு வர முடிந்தது. இதனால் இலங்கையில் பல வீரர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
குறிப்பாக மேசைப்பந்து, கொல்ப் மற்றும் வாள்சண்டை உட்பட 42வீரர்கள் வந்த விமானம் பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஏற்கனவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானம் டெல்லிக்கு செல்லும் முன்னர் அதிக பனி மற்றும் மோசமான காலநிலையால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடைசியில் அவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இங்கிருந்து இரண்டு விமான நிலையங்கள் ஊடாகவே காத்மண்டுவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். காத்மண்டு நகரில் உள்ள தூசு மற்றும் அதிக குளிரான 10, 11பாகை செல்சியஸ் காரணமாக வீரர்கள் போட்டி அழுத்தத்திற்கு மத்தியில் இன்னும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வீரர்களுக்கு சுவாச முகவுறையை அணிந்தபடி போட்டிகளில் பங்கேற்கும் படி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பூப்பந்து, பராக்ளைடின், அம்பெறிதல், கைப்பந்து, கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்கல், பெண்கள் கால்பந்து போட்டிகள் நடைபெறும் பொகாரா நகரில் மேலும் அதிக குளிரான காலநிலை நிலவுகிறது.
இந்த சூழலில் இலங்கையின் நான்கு வீரர்கள் சுகயீனத்திற்கு உள்ளாகியுள்ளனர். 200, 400மற்றும் 400மீற்றர் அஞ்சலோட்ட வீராங்கனை நதீசா ராமநாயக்க, 10,000மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க வந்த உபுல் குமார மற்றும் மேசைப் பந்து வீராங்கனை பிமன்தி பண்டார ஆகியோர் டெங்கு காய்ச்சலால் நேபாள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எனினும் கால்பந்து வீராங்கனை ஒருவர் மோசமான நிலையில் பொகாராவில் இருந்து காத்மண்டுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். எனினும் அவரை நேராக இலங்கைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலவும் சூழலில் இலங்கை வீர, வீராங்கனைகள் பயணிக்கும் காத்மண்டுவில் இருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவை ஊடாக அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தேசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் அளவுக்குக் கூட ஒப்பிட முடியாத நிலையில் இருந்தது.
காத்மண்டுவின் தசரத் விளையாட்டு அரங்கு போட்டி ஆரம்பிப்பதற்கு முந்தைய தினத்தில் கூட கட்டுமாணப் பணிகள் பூர்த்தியாகி இருக்கவில்லை. தீப்பந்தம் வைக்கப்படும் கோபுரம் கூட உத்தியோகபூர்வமாக போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தான் பூர்த்தி செய்யப்பட்டது. மைதானத்தின் கட்டடங்கள் பாதி அளவு வேலைகள் மூடிந்த நிலையிலேயே போட்டிகள் ஆரம்பமானது. வீர, வீராங்கனைகள், அதிகாரிகள் எவருக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட போதுமாக இல்லை.
தடகளப் போட்டிகள் குளிர் தணியாத காலை நேரத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. ஏனைய போட்டிகளின் நிலைமையும் இப்படித் தான் இருந்தது. நீச்சல் போட்டிகளின் நிலைமை அதனை விடவும் மோசம். போட்டி ஆரம்பிக்கும் தினத்தில் கூட கட்டுமாணப் பணிகள் இடம்பெற்றது. போட்டிக்காக வந்த இலங்கை வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு நீச்சல் தடாகம் ஒன்று கூட இருக்கவில்லை. அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கு இன்னும் பூர்த்தியாகாமல் இருந்த நீச்சல் தடாகத்தை காண்பிக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் முயன்றார்கள். பாதுகாப்பு நிலைமையும் மோசமாகவே இருந்தது. இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் ஜூட் சுமன் போட்ட கடைசி நேர கோலால் இலங்கை போட்டியை சமன் செய்தது. ஆனால் போட்டியின்போதும் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாத இரு வீரர்களை நேபாள ரசிகர்கள் தள்ளியபடி மைதானத்திற்கு வெளியே இழுத்துச் செல்லும்போதும் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். கடைசியின் இலங்கை ஊடகவியலாளர்கள் தலையிட்டே அந்த இரு வீரர்களையும் மீட்டு வர வேண்டி இருந்தது. இது தொடர்பில் நேபாள நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
'இங்கே (நேபாளத்தில்) பிரச்சினைகள் இருப்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். போட்டி ஏற்பாடுகள் பற்றி கண்காணிக்க இங்கே எத்தனையோ தடவை நாம் வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை பிரச்சினையை நாங்கள் கூறும்போதும் அதிகாரிகள் சரியாகிவிடும் என்று தான் பதில் அளிப்பார்கள். ஆனால் ஒன்றுமே சரியாகவில்லை' என்கிறார் இலங்கை ஒலிம்பிக் சங்க செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா. இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உட்பட வசதிகளுக்கு 73மில்லியன் ரூபாவை நேபாள ஒலிப்பிக் குழுவுக்கு வழங்கியபோதும் எந்த வசதிகளையும் அவர்கள் தரவில்லை என்கிறார் விளையாட்டு அபிவிருத்திப் பணிப்பாளர் தம்மிக்க முத்துகல. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீர, வீராங்களைகள் அதிக திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தடகளப் போட்டிகளில் இந்தியாவை விஞ்சும் அளவுக்கு இலங்கை வீரர்கள் தங்கங்களை அள்ளியுள்ளனர். நீச்சல் போட்டிகளில் மத்தியு அபேசிங்க வழக்கம் போல் தங்கங்களை அள்ளுகிறார். கால்பந்தில் பலம் மிக்க நேபாளம், மாலைதீவு அணிகளுடனான போட்டிகளை சமன் செய்த இலங்கை எதிர்பார்த்ததை விடவும் திறமையை வெளிப்படுத்தி உள்ளது. ஏனைய விளையாட்டுகளிலும் இலங்கை வீர, வீராங்கனைகள் சோபித்து வருகின்றனர். என்றாலும் அவர்கள் பெறும் பதக்கங்களுக்கு பின்னால் இருக்கும் சிக்கல்கள், சிரமங்களை யாரும் குறைத்துக் கூற முடியாது.
நேபாளத்திலிருந்து
எம்.எஸ்.எம்.பிர்தௌஸ்