![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/04/q3.jpg?itok=72nteniw)
மலையக மக்கள் ஏனைய சமூகத்தினரை விட சளைத்தவர்கள் அல்லர். வறுமை என்பது அவர்களை முன்னுக்கு வருவதற்கு தடையாக இருந்து வந்த போதும் அதனையும் தாண்டி அனைத்து துறைகளிலும் சாதித்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலர் சாதித்துவிட்டு அவர்களுக்கான உரிய அங்கிகாரமும் கனவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல போதிய உதவிகளும் வழிகாட்டல்களும் இல்லாமல் முடங்கிகிடக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவரான மலையகத்தில் முதல் முதலில் பதக்கம் வென்ற மெய்யப்பன் மனோகரனை அவரது வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. இதன் போது மனோகரனிடம் உங்களது சாதனை தொடர்பில் கருத்து கூறுமாறு கேட்ட போது.அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதன் விபரம் வருமாறு:
மெய்யப்பன் மனோகராகிய நான் நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்லியனாட் தோட்டத்தில் 1970.05.10இல் பிறந்தேன். எனது தந்தை மெய்யப்பன் எனது தாய் அழகாய் ஆவார். பிறந்து நான்கு வயதில் எனது கால் போலியோ போன்று ஏற்பட்டு இடது கால் ஊனமாகியிருந்தது.
ஒரு வருடமாக இவ்வாறு ஏற்பட்டு இருந்தது. அதன் பின் சென்வியனாட்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தேன். அப் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதோடு இல்லத் தலைவராகவும் செயற்பட்டேன். அதன் பின்னர் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வி கற்கச் சென்றேன். அங்கும் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து மரதன் மற்றும் 3000மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமையை காட்டி வந்தேன். தொடர்ந்தும் பாடசாலையை விட்டு விலகி விளையாட்டு கழகத்தில் இணைந்து நான் 1989இல் நுவரெலியா வலப்பனை மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கு பற்றினேன். அவ்வருடமே தேசிய மட்டப் போட்டிக்கு போய் 100போட்டியாளர்களுடன் ஓடி 34ம் இடத்தில் வந்து முடிந்தேன்.
அவ்வருடமே குடும்ப சூழ்நிலை காரணமாக தோட்டத்தில் பெயர் பதிந்து தோட்டத்தொழிலாளியாக சகல வேலைகளையும் செய்தேன். அப்போதும் 1500மீற்றர், 5000மீற்றர், 10000மீற்றர் ஆகியவற்றில் கலந்து கொண்டு வந்தேன். எனது அப்பா மணல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டு வந்தார் அப்போது அவருக்கு உதவும் முகமாக ஓடி ஓடி உதவி செய்வேன் அதுவே என்னை ஒரு ஓட்ட வீரராக மாற்றியது.
1993ம் ஆண்டு இராகலை இளைஞர் கழகத்தை வளர்க்கும் நோக்கத்தில் அவ்வாண்டு நடைபெற்ற தேசிய மரதன் ஓட்டப் போட்டியில் ஓடி 2ம் இடம் பெற்றதோடு 10000மீற்றர் போட்டியில் முதலிடம் பெற்றேன். தொடர்ந்து மத்திய மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் பங்கு பற்றி 3முறை மரதன் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதோடு 5000மீற்றர், 10000மீற்றர் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். எனது சுயமான முயற்சி ஆர்வம் என்பவற்றின் மூலமே இதுவரை காலமும் பங்குபற்றி வெற்றி பெற்று வந்தேன். எந்த விதமான ஊக்குவிப்போ பயிற்சிகளோ கிடைக்கவில்லை.
தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஒட்டப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றுக் கொண்டேன்.
எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தான் எனக்கு ஆரியரட்ண என்பவர் பயிற்றுவிப்பாளராக கிடைத்தார்.