![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/10/17/a20.jpg?itok=EbhM3vdo)
எத்தனையோ தொடர்கள் பிரசித்தி பெற்று இருந்தாலும் உலகக்கிண்ணம் என்று வந்தால் அதன் மவுசே தனி. தொடர் என்றால் 2 அணிகள் மோதும். முக்கோண தொடர் என்றால் 3 அணிகள் மோதும். உலகக்கிண்ணம் 16 அணிகள் மோதுவதால் மேலும் சுவாரஷ்யமாக உள்ளது.ஒவ்வொரு அணி ரசிகர்களும் தங்கள் அணியை இரசிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு ஆதரவளிப்பர்.
முதல் 20க்கு20 உலகக்கிண்ணம் 2007 இல் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றது. அந்த வருடம் இந்தியா எம்.எஸ் தோனியின் தலைமையில் சம்பியன் மகுடம் சூடியது.. இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து கன்னி ரி 20 கிண்ணத்தை வென்றது. இந்த போட்டி இறுதி ஓவரில் ஜோஹிந்தர் சர்மா வீசிய அபாரமான பந்துவீச்சால் இந்தியா பக்கம் வசமானது கிண்ணம். இதன் பின்னரே தோனியின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது..
2009 ஆம் ஆண்டு 2 வது உலகக்கிண்ண தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோதின. அப்ரிடியின் சகலதுறை ஆட்டத்தால் பாகிஸ்தான் வசமானது வெற்றிக் கிண்ணம். அமீர் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இந்த தொடரிலே இனம் காணப்பட்டனர். இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் முழு ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
2010இல் மேற்கிந்திய தீவில் 3 வது உலகக்கிண்ண தொடர் ஆரம்பமானது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதும் போட்டிகளுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. கீஸ்வெட்டர் மற்றும் கெவின் பீட்டர்சனின் அதிரடி துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து கன்னி உலகக் கிண்ணத்தை சுவைத்தது. இந்த தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் பீட்டர்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
2012 இல் 4 வது உலக கிண்ண தொடர் இலங்கையில் இடம்பெற்றது. இறுதிப் போட்டிற்கு இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் தகுதி பெற்றன. கடைசிவரை யிலும் போட்டி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது. நரேனின் மாயாஜால பந்துவீச்சாலும் சாமுவேல்ஸின் துடுபாட்டத்தாலும் மேற்கிந்திய அணி வசமானது உலகக்கிண்ணம். இலங்கை அணியின் போராட்டம் இந்த தொடரிலும் கனவாகவே போனது.
2014 இல் 5வது தொடர் பங்களாதேஷில் இடம்பெற்றது. இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. மலிங்க மற்றும் குலசேகரவின் துல்லிய பந்துவீச்சாலும் குமார் சங்கக்காரவின் நிதானம் கலந்த துடுப்பாட்டத்தாலும் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை போராடி தோல்வியை தழுவிய இலங்கை அணி கிண்ணம் வென்றது. இந்த தொடர் முழுவதும் இலங்கை வீரர்கள் அணியாக செயற்பட்டனர்.
2016இல் 6 வது உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் இடம்பெற்றது. வெற்றி பெற முடியுமா என்று நினைத்த பலம் பொருந்திய இந்திய அணியை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மேற்கிந்தியதீவு அணி. இறுதிபோட்டிக்கு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகள் தகுதி பெற்றன. இதுவரை நடைபெற்ற ரி 20 தொடர்களில் இந்த போட்டியே எல்லா கால போட்டிகளிலும் சிறப்பான போட்டியாகும். கைநழுவிப்போன போட்டியை கார்லோஸ் ப்ரத்வெயிட் தனது அதிரடி ஆட்டம் மூலம் மே. இந்திய அணிக்கு 2 வது கிண்ணம் வாங்கி கொடுத்தார். 1 ஓவரில் 19 தேவைப்பட்ட வேளை முதல் 4 பந்துகளையும் ஆறாக மாற்றி வான வேடிக்கை நிகழ்த்தியிருந்தார். இந்த போட்டியை கிரிக்கெட் இரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
7ஆவது தொடர் 2020 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த வேளை கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக காணப்பட்டதால் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அனுமதியுடன் அந்த நாடுகளில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அத்துடன் 2022ம் ஆண்டுக்கான போட்டி அவுஸ்திரேலியாவில் இடம்பெறுகிறது. இன்று 17ஆம் திகதி உலகக் கிண்ணம் தொடங்குகிறது. தகுதிகாண் போட்டிகள் இன்று முதல் 22 வரையிலும் இம்மாதம் 23 தொடக்கம் நவம்பர் 8 வரை சூப்பர் 12 லீக் போட்டிகள் இடம்பெறும். இறுதிப்போட்டி 14 ஆம் திகதி இடம்பெறுகிறது.
ஒவ்வொரு அணியும் இந்த வருடம் கிண்ணம் வெல்வதை தீவிரம் காட்டி வருகிறது. திறமையுடன் நடைபெறும் இடத்தையும் காலநிலையும் சரியாக கணித்து அதற்கேற்றால் போல் விளையாடும் அணி கிண்ணத்தை வெல்லும் என்பதில் ஐயமில்லை.
கிரிக்கெட் திருவிழாவில் இரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அனைத்து அணிகளும் சிறப்பாக செயற்பட்டு இந்த சிறப்பாக இடம்பெற வாழ்த்துவோம்.