சீனா பற்றிய புரிதல் | தினகரன் வாரமஞ்சரி

சீனா பற்றிய புரிதல்

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

ஓர் ஆங்கில பரீட்சைத் தாள். அதிலொரு கேள்வி. ஒரிஜினல் என்பதன் எதிர்ப்பதம் என்னவென கேட்டிருந்தார்கள். சைனீஸ் என்று பதில் அளிக்கிறார், மாணவியொருவர்.

பெரும்பாலும் மேற்குலக ஊடகங்கள் என்ற சாளரத்தின் வழியாக சீனாவை பார்த்த எவருக்கும் இந்தப் பதில் வியப்பைத் தரப் போவதில்லை.

சீன இறக்குமதிகள் முதற்கொண்டு சீனாவின் சனத்தொகை வரை சகல விடயங்களையும் எதிர்மறையாக சித்தரிக்கும் ஒரு சூழ்நிலை.

இந்த சூழ்நிலை மனத்திரையில் சீனா பற்றிய அழிக்க முடியாத சித்திரத்தை தீட்டிய பின்புலத்தில் எனது சீனப் பயணம் நிகழ்ந்தது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகளாகின்றன.

இதனை முன்னிட்டு, சீனா பற்றி இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் எமக்கு சீனாவிற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழியில் பணியாற்றக்கூடிய செய்தியாளர்கள் 14 பேர் சீனா சென்றோம்.

கடந்த ஜூன் 29ஆம் திகதி தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரையில் சீனாவில் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நாட்களில் சீனாவின் பன்முகப் பரிமாணங்களைக் காணக் கிடைத்தது. சீனா பற்றிய அழுக்கான மனச்சித்திரம் மறைந்தது. வியப்பு மேலீட்டால் புதிய சித்திரம் உருவானது.

எமது பயணம் பிரதானமாக மூன்று நகரங்களை உள்ளடக்கியிருந்தது. அவை ஷங்ஹாய், பெய்ஜிங், ஷ்வென்டோ ஆகியவையாகும்.

நகரங்களின் அபிரிமிதமான அபிவிருத்தி

ஷங்ஹாய் நகரம்; வளர்ந்து வரும் சீனாவின் சர்வதேச முகம் எனலாம். இந்நகரின் புறத்தோற்றமும், வாழ்க்கையும் எதிர்கால சீனாவின் வளர்ச்சிக்கு கட்டியம் கூறின.

கட்டடக் கலை வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள். சிறப்பான வீதிப் போக்குவரத்துக் கட்டமைப்பு.

கேத்திர கணிதத்தில் நாம் அறிந்த வடிவங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கட்டடங்கள். இரவு நேரங்களில் இவற்றின் சுவர்கள் எல்ஈடி திரைகளாக மாறி வர்ணஜாலம் காட்டும்.

ஒரு பாம்புக் குவியலை விரித்துப் போட்டாற்போல வீதிக் கட்டமைப்பு. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காய் வளைந்து செல்லும் வீதிகள்.

இந்த வீதிகளில் போர்ஷெ, வொக்ஸ்வோகன், மெர்சிடிஸ் பென்ஸ் முதலான பெறுமதி மிக்க கார்கள் அதிகம். அதிர்ஷ்டமிருந்தால் சீன, கொரிய தயாரிப்புகளைக் காணலாம்.

ஷங்ஹாய் நகரின் வாழ்க்கையை விபரித்த வழிகாட்டி, Eat Chinese, Marry Japanese and Live American என்றார்.

சீன உணவை உண்டு, ஜப்பானியப் பெண்ணை மணந்து, அமெரிக்கராக வாழும் வாழ்க்கை என்பது விளக்கம்.

ஷங்ஹாய் நகரில் பல நாடுகளைச் சேர்ந்த மக்களும் பன்முக கலாசாரங்களையும் சேர்ந்த மக்களும் வாழ்ந்ததைக் கண்டோம்.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தனித்தனி பிரதேசங்களில் வாழ்கிறார்கள். அந்தப் பிரதேசங்களில் அந்நாடுகளுக்குரிய தூதரங்கள் முதலான கட்டடங்கள் இயங்குகின்றன.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது எதிர்கால இலட்சிய நகரங்களின் கனவாக இருக்குமாயின், அது ஷங்ஹாயில் நனவாகியிருக்கிறது எனலாம்.

ஆறாயிரத்து சொச்சம் சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணமான நிலப்பரப்பிற்குள் இரண்டரை கோடியை எட்டும் சனத்தொகையைக் கொண்ட நகரம்.

இங்கு சட்டமும் ஒழுங்கும் பேணப்படும் விதம் அலாதியானது. சட்டமும் ஒழுங்கும் ஒரு புறமிருக்க அவற்றை சிறப்பாக மதித்து நடக்கும் நகரவாசிகளின் அர்ப்பணிப்பு சிறப்பு.

பரந்து அகன்ற வீதிகளில் தொலைதூரம் வரிசையாக நிற்கும் கார்கள். அவற்றுக்கு இடையில் அளந்து வைத்தாற்போல சமமான இடைவெளி.

ஷங்ஹாய் நகர வீதிகளில் இரண்டு நாட்கள் வாகனத்தில் பயணம் செய்தபோதிலும், ஒரு தடவையேனும் வாகன சமிக்ஞை ஒலியைக் கேட்க முடியவில்லை.

இந்தக் கட்டுக்கோப்பை பேணுவதற்கு சீனாவின் மத்திய அரசாங்கம் ஷங்ஹாயை நேரடியாக நிர்வகித்து, கடுமையான விதிமுறைகளை அனுசரிக்கிறது.

கார்கள் என்ற விடயத்தைக் கூறினால், ஷங்ஹாயில் 80,000 யுவானுக்கு நல்லதொரு SUV ரக காரை வாங்கி விடலாம்.

இருந்தபோதிலும், இந்தக் காருக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற 85,000 யுவானை விடவும் அதிகமான தொகை செலுத்த வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்படுவதால் அனுமதிப் பத்திரம் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

யாரேனும் நகரவாசியொருவர் தமது அனுமதிப் பத்திரத்தை விற்பாராயின் அதனை வாங்க பலர் இருப்பார்கள். அவர்கள் ஏலம் போன்று பத்திரத்திற்கு விலை பேச வேண்டும்.

வீதியோரங்களில் துவிச்சக்கர வண்டிகள் உண்டு. அவற்றுக்கு உரிமையாளர்கள் என்று எவரும் கிடையாது.

துவிச்சக்கர வண்டியை பயன்படுத்த விரும்பும் எவரும் அதற்கருகில் ஸ்மார்ட்போனை கொண்டு சென்று செயலியின் மூலம் பூட்டைத் திறக்க வேண்டும்.

பூட்டைத் திறந்தவர் சைக்களின் தற்காலிக உரிமையாளர்.

அவரது பயன்பாட்டுக்கு ஏற்ப ஒரு யுவானை விட சிறிய தொகை அறவிடப்படும்.

கொளுத்தும் வெளியில் சைக்கிளின் பூட்டைத் திறந்த இளைஞரிடம் ஆங்கிலத்தில் கேட்டோம். இது அசௌகரியமாக இருக்காதா?

இது தாய்நாட்டில் வாகன நெரிசலையும், சுற்றாடல் மாசடைதலையும் குறைக்க உதவுமாயின் அசௌகர்யம் பற்றி கவலைப்பட போவதில்லை என்றார். (தொடரும்)

Comments