தங்கத்தமிழ்ச் செல்வனையும் இணைத்து வாலியாக பலம் பெற்றுவரும் தி.மு.க | தினகரன் வாரமஞ்சரி

தங்கத்தமிழ்ச் செல்வனையும் இணைத்து வாலியாக பலம் பெற்றுவரும் தி.மு.க

தமிழக அரசியலில் இன்று புயல் கிளப்பி பேசு பொருளாகியிருக்கிறார் நன்றாகவே பேசத் தெரிந்த தங்கத் தமிழ்ச் செல்வன். சசிகலா விசுவாசியான இவர் தினகரன் அ.தி.மு.கவில் இருந்து புரிந்து வந்தபோது அவருடன் வந்தவர்களில் தங்கத் தமிழ்ச் செல்வன் முக்கியமானவர். இவர்கள் தினகரன் பக்கம் சாய்ந்ததால் அ.தி.மு.க கொறடாவின் கட்டளையை ‘மீறிய’ குற்றத்துக்காக 18தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களில் தங்கத் தமிழ்ச் செல்வனும் ஒருவர். விவகாரம் நீதிமன்றம் சென்றதில், தீர்ப்பு தினகரன் அணியினருக்கு பாதகமாகவே வந்தது. இதனால் தி.மு.க கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற கழுத்துக்கு வந்த கத்தியில் இருந்து பன்னீர் – எடப்பாடி அரசு தப்பிப் பிழைத்தது. 

எனினும் தினகரன் அணி ஒற்றுமை காத்தது. இதற்கு, ஆர்.கே.நகர் ‘அம்மா தொகுதி’யில் தினகரன்பெற்ற வெற்றி உரமாக அமைந்திருந்தது. அங்கு, அதி.மு.கவையும் தி.மு.க வையும் பின்னுக்குத் தள்ளியதோடு தி.மு.க வேட்பாளர் தன் கட்டுப் பணத்தையும் இழந்தார். எனவே, அ.தி.மு.க என்றால் அது தினகரன் அணிதான் என வாக்காளர்கள் தீர்மானித்து விட்டார்கள் என தினகரன் அணி முடிவு செய்தது. தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் தினகரன் அணி அசைந்து கொடுக்கவில்லை. செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் தினகரனுக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த மூவரும் தினகரனின் நண்பர்களாகவே செயற்பட்டனர். இந்த நிலையில்தான் தமிழக சட்ட சபையில் காலியான 23இடங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் வந்தது. எடப்பாடி அரசுக்கும் அதிமுகவுக்கும் நல்லதொரு பாடத்தை படிப்பிப்பதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என தினகரனின் அ.ம.மு.க உற்சாகத்துடன் களமிறங்கியது.  

இதுதான் திட்டம். 23சட்ட மன்ற ஆசனங்களை தி.மு.க அ.ம.மு.க கட்சிகள் இரண்டும் பங்கு போட்டுக் கொள்வது. பின்னர் சட்ட சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி அரசைக் கவிழ்ப்பது என்பது தினகரனின் திட்டமாக இருந்தது. அடுத்ததாக, ஆட்சியை தி.மு.க கைப்பற்றுவதில் தினகரனுக்கு பிரச்சினை இருக்கவில்லை. தன்னையும் சின்னம்மாவையும் கவிழ்த்த துரோகிகளான எடப்பாடியையும் பன்னீரையும் வீட்டுக்கு அனுப்பினால் போதும் என்ற மனநிலையிலேயே தினகரன் அணி இருந்தது. அதற்காக சட்ட சபையில் தி.மு.கவுடன் இணைந்து வாக்களிக்கவும் ஒத்துழைக்கவும் அ.ம.மு.க தயாராகவே இருந்தது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பனாகவே தினகரன் கருதினார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க முன்னணி வகிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும் தமக்கும் குறைந்தது ஐந்து ஆசனங்களாவது கிடைக்கலாம் என்று கணக்கு போட்டு அ.ம.மு.க வேலை செய்தது. இரண்டு இடங்களில் வென்றாலும் அக்கட்சிக்கு அது பெரிய விஷயம் தான். ஆனால் தேர்தல் முடிவுகளோ தினகரன் அணியினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அது மிக மோசமான தோல்வி, அ.ம.மு.கவை மக்கள் கணக்கிலேயே கொள்ளவில்லை என்பதை வாக்குகள் காட்டின. சட்ட மன்ற இடைத் தேர்தலில் விழுந்த வாக்குகளை எடுத்துக் கொண்டாலும் அது தினகரன் அணிக்கு கேவலமான தோல்வியாக அமைந்தது. 

இத்தோல்விக்கு, ஏதேனும் சதிவேலை காரணமாக இருந்திருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தை டி.டி.வி. தினகரன் முன்வைத்தார். ஏனெனில் சில தேர்தல் சாவடிகளில் அ.ம.மு.க சின்னத்துக்கு ஒரு வாக்கேனும் விழுந்திருக்கவில்லை. இச் சாவடிகளில் அ.ம.மு.க பிரதிநிதிகள் கடமையில் இருந்தனர். கேள்வி என்னவென்றால், இப் பிரதிநிதிகள் கூட அ.ம.மு.க வேட்பாளருக்கு வாக்களிக்க வில்லையா? என்பதுதான். அளிக்கப்பட்ட வாக்குகளைக் கூட பதிவில் இருந்து அழித்துவிட்டார்கள் என்பது தினகரனின் குற்றச்சாட்டு, அக் குற்றச் சாட்டை தினகரன் அணியினரே ஏற்கவில்லை. தினகரன் என்ற தனி நபருக்கோ அவரது சின்னம்மாவுக்கோ அல்லது அ.ம.மு.கவுக்கோ வாக்காளர் மத்தியில் ஆதரவு இல்லை என்பதைத்தான் இவ்விரண்டு தேர்தல்களும் துலாம்பரமாக நிரூபித்துள்ளன என்பதே தினகரன் ஆதரவாளர்களின் கருத்தாக மாறவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கூடாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது. 

அக் கட்சியை விட்டு சில அமைப்பாளர்கள் வெளியேறி விட்டார்கள். மூழ்கும் கப்பலில்யார் தான் இருக்க விரும்புவார்கள்? ஏற்கனவே செந்தில் பாலாஜி தி.மு.கவில் சேர்ந்து தன் தொகுதியில் வெற்றியீட்டியிருக்கிறார். இந் நிலையில்தான் சென்னை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தங்கத் தமிழ்ச் செல்வன் தன் ‘டிரேட் மார்க்’ புன்னகையுடன் பேசினாலும் தான் கடுமையான ஏமாற்றத்துக்கு ஆட்பட்டிருப்பதை அவரது கூற்றுகள் வெளிப்படுத்தின. மக்கள் நிராகரித்து விட்டார்கள்; இத் தோல்வி கொஞ்சமும் எதிர்பாராதது; நாங்கள் கடுமையாக உழைத்தோம். வெற்றிபெறுவோம் என்றுதான் எதிர்பார்த்தோம் என்று தன் போட்டியில் கூறிய அவர். அடுத்ததாக என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் ஆனால் அரசியலில்தான் நீடிக்க வேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். 

அப் பேட்டியைப் பார்த்தவர்களுக்கு, தங்கத் தமிழ்ச் செல்வன் குழப்பத்தில் இருப்பது நன்றாகவே தெரிந்தது. அனேகமாக இப் பேட்டியை அடுத்தே இவர் இங்கிருந்து எங்கே தாவப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. 

“நாங்கள் நிறையவே இழந்திருக்கிறோம். சட்ட மன்ற ஆசனத்தை இழந்து இரண்டு வருடங்களாகிறது. இதனால் தொகுதிக்கு எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. எல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் வசதி படைத்தவர்கள் அல்ல. இது மிக மோசமான நிலை” என்று தங்தத் தமிழ்ச் செல்வன் ஒரு கட்டத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய தினகரனே குழப்பத்தில் இருக்கும்போது கடுமையான இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் அவரது அணியினரின் நிலை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம் தான். 

எனவே ஊடகங்கள் ஹேஷ்யத்தில் இறங்கின. தங்கத்தமிழ்ச் செல்வன் எங்கே தாவப் போகிறார் என்பது பற்றி பேச ஆரம்பித்தன. 

தங்கத்தமிழ்ச் செல்வனின் முதலாவது தெரிவு அ.தி.மு.க வாகவே இருக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் கட்சி இரண்டாக, ஒ.பி.எஸ். எனவும் இ.பி.எஸ். எனவும் பிரிந்து கிடக்கிறது. பன்னீர் செல்வம் தன் மகனை தேனீ நாடாளுமன்ற உறுப்பினராக்கிக் கொண்டதை பெரிய வெற்றியாகக் கருதுவதோடு மத்திய அரசில் மகனுக்கு ஒரு அமைச்சர் பதவியொன்றை பெற்று கொள்வதற்காக தற்போது பெரு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

ஏற்கனவே பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக ஒரு செய்தி வெளியாகி விவாதப் பொருளாகியிருந்தது. அது அடங்குவதற்குள் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு பன்னீர் டெல்லி செல்வதும் மோடியவர்களின் ஆசி எனவும் பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் கொடி கட்டியதும் பன்னீர் எடப்பாடி மோதல் வலுத்து வருவதாக மீண்டும் செய்திகள் பரவின. 

இப் பின்னணியில் எடப்பாடி தன்னை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக தங்கத்தமிழ்ச் செல்வனை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் என ஊகங்கள் கடந்த வாரம் கொடி கட்டின. அவரைத் தேனீயில் அ.தி.மு.க அமைப்பாளராக்கி ஒரு பதவியையும் வழங்கினால் பன்னீர் செல்வத்துக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் எடப்பாடி தங்கத்தமிழ் செல்வனை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ஊகங்கள் வெளியாகின. அதில் சில நியாயங்கள் இருக்கவும் செய்தன. எனவே தங்கத்தமிழ்ச் செல்வன் எடப்பாடியுடன் இணைவார் என்றும் அதையடுத்து பன்னீர் செல்வம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவார் என்றும் கருதப்பட்டது.

பன்னீர் செல்வம் தற்போது தான் மோடிக்கு நெருக்கமானவன் எனக் காட்டிக் கொள்ள முயல்வதை எடப்பாடி ரசிக்கவில்லை. 

செய்திகள் இவ்வாறு வெளியாகிக் கொண்டிருக்கும் போதுதான் தங்கத்தமிழ்ச் செல்வனின் ஓடியோ வெளியானது. ஒரு மாவட்ட நிர்வாகியோடு பேசும் போது அவர், நான் விஸ்வரூபமெடுத்தால் நீங்கள் எல்லாம் ஒழிந்து போவீர்கள் என்று கூறியிருந்ததோடு தினகரனையும் விமர்சித்திருந்தார். இது வெளியானதும் திகைத்துப்போனார் தினகரன்!  

உடனடியாகவே கட்சியில் இருந்து தங்கத் தமிழ்ச் செல்வனை நீக்கப் போவதாக தினகரன் அறிவிக்க, ஒரு பயங்கரவாத அமைப்பைப்போல தினகரன் கட்சி நடத்துகிறார் என தங்கத்தமிழ்ச் செல்வன் பதில் விமர்சனம் செய்ய, அ.ம.மு.கவில் இருந்து அவர் நீங்குவது உறுதியானது. 

இந் நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை தங்கத் தமிழ்ச் செல்வன் அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை – போர்த்திய தங்கத்தமிழ்ச் செல்வன் தி.மு.க.வில் இணைந்து கொண்டதாக அறிவிக்கவும் செய்தார். 

தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு இன்று தேவையாக இருப்பது ஒரு தேர்தல் வெற்றியும் சட்ட சபையில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வதுதான். அதை தி.மு.க. செய்து தரும். பதிலாக தேனீ மாவட்டத்தில் தி.மு.க வை பலப்படுத்தும் வேலைகளில் அவர் ஈடுபடுவார். மேலும் அவர் தி.மு.க தனக்கு எம்.பி பதவியைத் தர வேண்டும் என்றும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. 

இது இப்படி இருக்க, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப் பிரரேரணையைக் கொண்டு வரவிருந்த தி.மு.க அதைத் தற்போது வாபஸ் பெற்றிருக்கிறது. சபாநாயகரை பதவி நீக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதைவிட எடப்பாடி அரசை நீக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கடிதம் வாபஸ் பெறப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மோடியவர்களின் ஆசி பெற்ற எடப்பாடி அரசை கவிழ்ப்பது சாத்தியமாகுமா என்பது பற்றி ஸ்டாலின் குறிப்பிடவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்தத் தேர்தலில் வெற்றிபெறப் போகிற குதிரை தி.மு.க.வே என்பது சர்வ நிச்சயம்.

வற்றிக் கொண்டிருக்கும் குளத்தின் நீர்ப் பறவைகள் அலைபாயும் குளத்தை நோக்கித்தானே பறக்கும்? என்ற வாழும் தத்துவத்தின் அடிப்படையில் பார்ப்போமானால் தங்கத்தமிழ்த் செல்வனைத் தொடர்ந்து மேலும் சில அ.ம.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. அதிருப்தியாளர் சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.வுக்கு பறந்து வரலாம்.

அருள் சத்தியநாதன்
[email protected]

Comments