இந்தோ - பசுபிக் தந்திரோபாயத்தை முறியடிக்கும் ஈரோசியன் | தினகரன் வாரமஞ்சரி

இந்தோ - பசுபிக் தந்திரோபாயத்தை முறியடிக்கும் ஈரோசியன்

அண்மைய காலத்தில் பிராந்திய ரீதியில் அணிகளும் தந்திரோபாயங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன அமெரிக்கா தலைமையில் ஓரணியும் சீனா, ரஷ்யா தலைமையில் இன்னோர் அணியும் மாறி மாறி தமது அணிகளின் தந்திரோபாயங்களை வகுத்து வருகின்றன. இத்தகைய உபாயத்திற்குள் பெரிய அரசுகள் மட்டுமல்ல சிறிய அரசுகளும் ஒன்றிணைந்து கொள்வது தவிர்க்க முடியாத அரசியலாகியுள்ளது.  

அதிலும் இலங்கை போன்ற தந்திரோபாய நிலங்கள் மற்றும் தீவுகள் முக்கியமான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகும். அந்த வகையில் சீனா –ரஷ்யா அண்மையில் செய்து கொண்ட ஈரோசியன் உடன்படிக்கையும் அதனால் ஏற்பட்டுள்ள அரசியலையும் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும். 

ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ஈரோசியன் தந்திரோபாயம் ஒன்றினை வரைந்துள்ளன. கடந்த யூன் 5இலிருந்து இருநாடுகளும் இந்தியாவுடன் இணைந்து செய்து கொண்ட இவ்வுடன்படிக்கை உலகளாவிய அரசியலில் அதிக முக்கியத்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளது. 

இரு நாடுகளும் ஏற்பத்தியுள்ள உடன்படிக்கையானது, பிராந்தியத்தின் மத்தியில் அதிக அரசியல் முக்கியத்துவத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மத்திய ஆசியா கொரியப்பகுதி, கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களில் பாரிய அரசி-யல் தாக்கத்தினை ஏற்பத்தும் என்ற விமர்சனம் நிலவுகிறது. குறிப்பாக அரசியல் பொருளாதாரத்தின் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் அதற்கான உறவு நிலையும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சீனா – ரஷ்யா ஆகிய நாடுகள் மத்திய ஆசியாவிலும் கிழக்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தென்னாசியாவிலும் ஆதிக்கம் பெறும் நிலை உருவாகியுள்ளது என சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இது அமெரிக்க அரசியல் பொருளாதார தந்திரோபாயத்தினை முறியடிப்பதாக அமைவதுடன், இப்பிராந்தியத்தில் காணப்படும் தந்திரோபாய நிலங்கள் மற்றும் கடல் பகுதிகள் அவ்வரசுகளின் செல்வாக்குப் பிராந்தியமாக அமையவுள்ளமை கவனிக்கத்தக்கது. அதிக பொருளாதார வளங்களைக் கொணடுள்ளதுடன் மனித வளத்தை அதிகம் பிரதிபலிக்கின்றதும் சுறுசுறுப்பும் இயங்கு திறனுடையதுமான பிராந்தியம் அமெரிக்க தரப்பிடமிருந்து பறிபோகிறது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக பாதிக்கும் விடயமாக இந்தோ – -பசுபிக் தந்திரோபாயம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஈரோசியன் அணியில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இணைந்திருப்பதே அதிக சிக்கலுக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்துள்ள அமெரிக்கத் தரப்பு காஷ்மீர் விடயத்தை முதன்மைப்படுத்தி வருவதுடன் இந்தியாவை வழிக்கு கொண்வரும் நடைமுறையை அண்மையில் ஆரம்பித்துள்ளது. உண்மையில் காஷ்மீர் விடயம் தீவிரம் அடைவதற்கு ஈரோசியன் உடன்படிக்கையில் இந்தியா இணைந்து கொண்டதும் ஒரு பிரதான காரணமாகும்  

அதன் இரண்டாவது காரணம் ஜப்பானிய சமாதான தூதுவர், இலங்கைக்கு  வருகை தந்தமை அமைந்துள்ளது. அவரது விஜயம் அதிகம் அரசியல் பெறுமானம் உடையது. ஒரு பூகோள அரசியலுக்கான களத்தை மீளத் திறந்துவிட்டுள்ளது. இந்தோ-, பசுபிக் தந்திரோபாயத்திலிருந்து இந்தியா வெளியேறும் நிலை ஏற்பட்டால் அதனால் அமெரிக்கா, ஜப்பான், இலங்கையுடன் நேரடி உறவை தக்கவைக்க விரும்புவதுடன், தமது பிராந்திய பாதுகாப்புக்கு அது இலாபகரமாக அமையும் என்ற நிலை ஏற்படுள்ளதை அவரது இலங்கை விஜயம் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை அத்தகைய தந்திரோபாயத்துக்குள் அகப்பட்டிருப்பதை உணரக் கூடியதாக உள்ளது அத்தகைய நிலையில் இலங்கை அமெரிக்க, ஜப்பான் உறவை உடைக்குமாக அமைந்தால் பிராந்திய ரீதியில் அவ்வணி அதிக இழப்பினை எதிர்கொள்ளும் மேலும்,சீனா வகுத்துள்ள ஒரே சுற்று ஒரே பாதையும் தோற்கடிக்க முடியாததாகிவிடும். இதனை நோக்கியே அமெரிக்கா, ஜப்பான் தரப்பு செயல்பட முனைகின்றன, இலங்கையுடன் மட்டுமல்ல பிராந்திய ரீதியில் அனைத்து நட்பு நாடுகளையும் அமெரிக்கா அணுகிவருகிறது.

அத்துடன், நடுத்தர அணுவாயுத ஏவுகணையை பரிசோதித்து விட்டு, சீனாவின் நடவடிக்கைக்கு பதிலானது எனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். இது ஒரு சீன -அமெரிக்கப் போட்டியின் பிரதிபலிப்பாகும். வர்த்தகப் போட்டியில் சீனாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத சூழலில் அதன் போக்கினைத் தடுக்க போடப்பட்ட உபாயமாகவே, அமெரிக்கத் தரப்பின் நகர்வுகள் அமைந்துள்ளன. இவ்வாறே பிறிக்ஸிட் விடயத்தில் பிரித்தானியாவின் வெளியேற்றத்தை ஆதரித்த அமெரிக்கா பிரித்தானியாவை அமெரிக்காவுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கிறதை காணமுடிகிறது. 

சீனாவுடனான வர்த்தகப் போட்டியில் கடந்த மூன்று மாதங்களில் அதிக இழப்பினை சந்தித்த அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனை தீர்வற்ற அமைப்பாக கையாண்டு வருகிறது இதன் விளைவே பிரிட்டனின் புதிய பிரதமர் பொறிஸ் ஜெல்சனின் வருகை எனக் கருதப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், பிரிட்டனின் பலவீனம் மட்டுமல்ல,  ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் பலவீனமாக மாறிக் கொண்டிருகிறது. இது ஆயுதப் போட்டியையே ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்டுகிறது. அதில் ரஷ்யா, அமெரிக்கா என்பன அத்தகைய நடவடிக்கைக்கு முன் கூட்டியே கட்டியம் கூறியுள்ளன.  

எனவே, ஈரோசியன் தந்திரோபாயம் கண்டங்களைக் கடந்து, கடல் பிராந்தியங்களை சிறிய நாடுகளையும் போட்டிக்குள் ஈடுபடுத்தி வருகின்றன. அதனால் இலங்கையிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் அதிக போட்டிக்குரிய, இழுபறிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப் போகின்றன.

இதனால் 2020 இலங்கையில் நிகழவுள்ள ஜனாதிபதி தேர்தலும் அதிக போட்டிக்களமாக மாறவுள்ளது கவனிக்கத்தக்கது. இது ஒரு பூகோளப் போட்டியை உருவாக்கியுள்ளது. அத்தகைய பூகோளப் போட்டிக்கான வாய்ப்புக்கள் பிராந்திய சர்வதேச அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாக அமையவுள்ளது. ஈரோசியன் எதிர்,  இந்தோ- - பசுபிக் என்ற நிலை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை மேலும் சூடுபிடிக்க வைக்கப்போகிறது அதனை அகாஷி தொடக்கியுள்ளார்.  

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments