ஐக்கிய அமெரிக்காவின் அரசியலில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய விடயமாக ஜோர்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் இரண்டாவது தடவைக்கான ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு ஜோர்ஜ் பிளாய்ட்யின் கொலையும் ஒரு காரணமாகும். அது ஒருவகையில் அமெரிக்க கறுப்பருக்கெதிரான வெள்ளையர்களின் இனவெறி தாக்குதலின் அடையாளம் என்றே அமெரிக்காவில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் உரையாடப்பட்டுவருகிறது. அமெரிக்கா முழுவதும் ஜோர்ஜ் பிளாய்ட்டின் கொலைக்கெதிரான போராட்டங்கள் இனவெறியின் அடிப்படையையும் அதன் உண்மைத்தன்மையையும் அம்பலப்படுத்தியிருந்தது. இக்கட்டுரை மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸில் பணிபுரிந்த ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக்கு காரணமான டெரிக் சாவின் மீதான தீர்ப்பையும் அது எழுப்பியிருக்கும் கேள்விகளையும் தேடுவதாக உள்ளது.
2020 மே 25 ஆம் திகதி மினசோட்டா மாகாணத்தின் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி 20 டொலர் கள்ளநோட்டினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் இனவெறி பாரம்பரியத்தின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டியது. உலக அரசியல் வரலாற்றில் 15ம் நூற்றாண்டில் அடிமை வாணிபம் ஆரம்பித்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது. அதிலும் ஆபிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக்கி அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு சென்ற வெள்ளை இனத்தவரின் வரலாறாக அமெரிக்க வரலாறு எழுதப்படுகின்றது. இக்காலப்பகுதியில் அமெரிக்க கண்டம் நோக்கி 15 பில்லியனுக்கு மேற்பட்ட அடிமைகள், அமெரிக்க கண்டத்தை நோக்கி கொண்டுசெல்லப்பட்டதாகவும், அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் ஐந்து ஆபிரிக்க கறுப்பர்களில் ஒருவர் இறந்து போகும் துயரத்தையும் இந்த வரலாறு சொல்லிச்செல்கின்றது. 1860 வட, தென் மாநிலங்களுக்கிடையில் ஏற்பட்ட யுத்தம் அடிமைகளை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்க காரணமாகியது.. அன்றைய ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் 1865யில் அடிமை ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்ததன் மூலம் அடிமைகளுக்கு விடுதலை வழங்கும் வரலாற்றை தொடக்கி வைத்தார். ஆனாலும் அடிமை முறை சட்டத்தில் நீக்கப்பட்ட போதும் பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் இனவெறியும் அமெரிக்கா முழுவதும் புரையோடி இருந்தது.
அமெரிக்க மாநிலங்களில் மிசிசிப்பியே அதிக கறுப்பினத்தவர்களை கொண்ட மாநிலமாக விளங்குகின்றது. ஏறக்குறைய முழு மக்கட்தொகையில் 38.7 சதவீதம் கறுப்பர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கறுப்பர்கள் அடிமைகளாகவும் பின்பு விடுதலை பெற்ற மனிதர்களாகவும் வாழுகின்றனர். அவர்கள் அமெரிக்காவின் உருவாக்கத்திற்கும் அதன் பொருளாதார செழிப்புக்கும், இராணுவம், விளையாட்டு போன்ற துறைகளில் அமெரிக்கா பிராகாசிப்பதற்கும் மூல காரணமாக விளங்கி வருகின்றனர். அத்தகைய கறுப்பர்களின் முக்கியம் பெற்றாலும் அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகம் அதிகம் உச்சரிக்கப்படும் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் 18 வீதமானவர்களும், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் காலத்தில் 11வீதமானவர்களும், கிளின்டன் காலத்தில் 27 வீதமானவர்களுமே உறுப்பினர்களாக இருந்தனர் கறுப்பின ஜனாதிபதியாக பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் பாரபட்சமும் பகைமையும் இனவெறியும் வெள்ளையின அமெரிக்கர்களிடம் இருந்து விடுபடவில்லை என்பதை ஜோர்ஜ் பிளாய்ட் படுகொலை உறுதிப்படுத்துகின்றது.
வெள்ளையின அமெரிக்க பொலிஸாரினால் கொல்லப்பட்ட அமெரிக்க கறுப்பர்களின் எண்ணிக்கை 2021இன் நடந்து முடிந்த மூன்று மாதங்களில், 31பேர் என பதிவுச்செய்யப்பட்டுள்ளது. 2020 இல் 432 ஆகவும், 2019 ஆம் ஆண்டு 320 ஆகவும், 2018 இல் 399 ஆகவும், 2017 இல் 457 ஆகவும் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.. இத்தகைய புள்ளிவிபரம் கறுப்பின அமெரிக்கர் மீதான அரச இயந்திரத்தின் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதனை அவதானிக்கின்றபொழுது ஆட்சியாளர்களும் அரசாங்கமும் அந்த நாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டங்களும் அவற்றின் பிரயோகங்களும் எவ்வகையான கலாசாரத்தை கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படுத்துகின்றன. ஆபிரகாம் லிங்கனாலும் மார்டின் லூதர் கிங்கினாலும் உருவாக்கப்பட்ட கறுப்பினத்தவர் உரிமைக்கான அங்கீகாரம் எழுத்துகளிலும் சட்ட வரைபுகளிலும் மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது. அவை எதுவும் நடைமுறைகளில் இல்லை என்பது மட்டுமன்றி அவை பாரபட்சத்தையும் இனவெறியின் அடிப்படைகளையே வெளிப்படுத்துகின்றது. டெரிக் சாவின் மீதான விசாரணை அமெரிக்க கறுப்பின மக்களாலும் வெள்ளையின மக்களாலும் அவர்களது போராட்டங்களாலும் சாத்தியப்பட்டதேயன்றி அரசாங்கத்தால் அல்ல என்பது அரச இயந்திரத்தின் போக்கினை காட்டுகிறது. அப்போதைய அரசாங்கம் மட்டுமல்ல தற்போதைய ஆட்சியாளர்களும் ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை முதன்மைப்படுத்தவோ நியாயம் கேட்கவோ முன்வரவில்லை. மாறாக மக்களின் ஆர்ப்பாட்டங்கள் உலக நாடுகளின் எழுந்த எதிர்ப்புக்குரல்களும், டெரிக் சாவின் மீதான விசாரணையை துரிதப்படுத்தியது. அவர் குற்றவாளி என்பதனை ஆதாரங்களை வெளிப்படையாக அடையாளம் கண்டபோதும் ஜோர்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் மற்றும் சகோதரர்களின் முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் உறவினர்கள் நீதி வந்ததாக குறிப்பிட்டாலும் அமெரிக்க அரசியலில் இனவெறிக்கான நீதி என்றும் அடையமுடியாத அம்சமாவே நீடிக்கின்றது. அதன் அடிப்படையில் டெரிக் சாவை குற்றவாளி என்று அடையாளம் கண்ட அமெரிக்க நீதித்துறை நடவடிக்கையை கடந்து அமெரிக்க ஆட்சித்துறை மீதும் அதன் அரசியல் கலாசாரம் மீதும் அதிக கேள்விகள் எழுப்புவது தவிர்க்கமுடியாது.
ஒன்று, சட்ட ஒழுங்கை பேணுகின்ற பொலிஸ் அதிகாரியான டெரிக் சாவின் நடவடிக்கை அமெரிக்க ஆட்சிதுறையினால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பது பிரதான விடயமாகும். காரணம் அமெரிக்க ஆட்சித்துறையே இன பாரபட்சத்தின் அடிப்படையில் 1865 இல் இருந்து இதுவரை தீர்த்துக்கொள்ளவில்லை எனில் நிறவேறுபாட்டையும், பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வையும், கொண்டிருக்கும் சாதாரண அமெரிக்க குடிமக்கள் எவ்வாறு அத்தகைய பாரபட்சத்தில் இருந்து விடுபடுவார்கள். இவ்வாறு எத்தனை டெரிக் சாவின்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
இரண்டு, டெரிக் சாவின் குற்றசெயல் ஜோ பைடனின் ஆட்சிகாலப்பகுதியில் முதன்மைப்படுத்தப்படுகின்ற அதேவேளை அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் அமெரிக்க கறுப்பர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதோடு நடந்து முடிந்த மூன்று மாதங்கள் 31 கறுப்பின அமெரிக்கர்கள் வேறு வேறு காரணத்திற்காக வெள்ளையின பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுள்ளனர். எனவேதான் ஜோர்ஜ் பிளாய்ட்டின் படுகொலையை வாக்கு தேடும் அரசியலாக ஜோ பைடன் மட்டுமன்றி அவருக்கு சார்பான ஊடகங்களும் வெள்ளையர்களும் பயன்படுத்தினார்களா? என்ற சந்தேகம் வலுவாகின்றது.
மூன்று, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் ஆற்றிய முதல் உரையே இனவெறியும் பாரபட்சத்தையும் நீக்குவேன் என்றும் பிரிந்திருக்கும் அமெரிக்காவை ஒன்றிணைப்பேன் என்பதும் தான்.
ஆனால் நடைமுறையில் அதனை முடிவுக்கு கொண்டுவருகின்ற சூழலோ அல்லது அதற்கான முயற்சிகளையோ மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகின்றது. இது ஒரு அரசியல் உரையாடலாக மட்டுமே அமைந்திருப்பதாக தோன்றுகின்றது. கொவிட் தொற்றுக்குள்ளும் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் அதிக மக்கள் வாக்களிப்பில் கவனம் செலுத்தியதற்கு கறுப்பின மக்களும் ஒரு காரணமாகும். அத்தகைய கறுப்பின அமெரிக்கர் ஜோ பைடனையே அதிகம் ஆதரித்தனர். ஆனால் ஜோ பைடனின் அமைச்சரவையில் கறுப்பரின் பிரதிபலிப்பு வெறும் 17வீதமாகவே உள்ளது. இதனை அவதானிக்கின்ற போது ஜோ பைடன் அரசாங்கம் பாரபட்சத்தையும் இனவெறியையும் முடிவுக்கு கொண்டுவருவதை விடுத்து அதனை ஒரு அரசியலாக பிரயோகப்படுத்தி வருகிறது. டொனல்ட் ட்ரம்ப்பின் ஆதரவை வீழச்சியடைய செய்வதற்கு ஜோர்ஜ் பிளாய்ட் படுகொலையை ஒரு அரசியல் கருவியாக ஜோன் பைடன் கருதியதாகவே தெரிகிறது.
நான்கு ஜோர்ஜ் பிளாய்ட் படுகொலை இருபது டொலருக்கானதாக பார்க்கப்படுகின்றது. 1860களில் ஓர் ஆபிரிக்க ஆண் அடிமையின் விலையினை விட இது ஒன்பது மடங்கு குறைவானது. இருபது டொலருக்கானதாக கொலை பார்க்கப்படுவதை விட இனவெறியின் அடையாளமாகவே படுகொலை அமைந்துள்ளமை தெரிகிறது. அத்தகைய பண்பாடு ஆதிக்கம் செய்வதும் பிற சமூகங்களை கட்டுப்படுத்துவதும் அதன் வளர்ச்சியை இல்லாமல் அழிப்பதும் அமெரிக்க வெள்ளையின மனோநிலையில் மாற்றப்பட முடியாத ஒன்றாக விளங்குகின்றது. அமெரிக்கர்களின் உலகளாவிய ஆதிக்கமும் அத்தகைய பொறிமுறைக்குள்ளாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது. அது எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றதோ அப்போதே அவர்களின் இன, நிற ஆதிக்க வெறி முடிவுக்கு வருகின்ற நிலை ஏற்படும் , அலெக்ஸ் ஹெலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” என்ற நூலில் ஒரு ஆழமான பதிவை விட்டுச்சென்றார். அந்த பதிவு வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும், கறுப்பர்கள் வாங்குபவர்களாகவும் இருக்கும் வரலாறு முடிவுக்கு வந்து வெள்ளையர்களும் கறுப்பர்கள் கொடுக்கவும் வாங்கவுமான நிலை வரலாற்றில் எப்போது தோன்றுகின்றதோ அப்போது இனவெறியில் கட்டமைப்பு முடிவுக்கு வரும் என்றார்.
ஐந்து, அமெரிக்க அரசியலமைப்பானது வெள்ளையினர்களின் ஆதிக்கத்திற்கான சரத்துக்களையும், அத்தியாயங்களையும், விதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது.
எனவே அமெரிக்க அரசியல் கலாசாரம் பிற இனங்கள் மீதும் பண்பாட்டின் மீதும் ஆதிக்கத்தை கொண்ட அரசியல் யாப்பாக உள்ளது. அது ஒருபோதும் சமத்துவத்தையோ பாரபட்சமற்ற அமெரிக்காவையோ உருவாக்காது மாறாக வெள்ளையின அமெரிக்கர்களின் இருப்பையும் ஆதிக்கத்தையும் அரசியலாய் கொண்டு செயற்பட முனையும் ஆசியா, ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்க அதிக்கத்தின் இருப்பும் சுரண்டலும் அமெரிக்க அரசியல் யாப்பின் அடிப்படையில் இருந்து எழுந்ததாகும்
எனவே ஜோர்ஜ் பிளாய்ட் மீதான படுகொலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டை இனவெறிக்கான நியாதிக்கம் என்று குறிப்பிடுவதை விட வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கத்தின் இன்னொரு அடையாளம் என குறிப்பிடுவது பொருத்தமாகும். டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுக்கு 40 வருட சிறைத்தண்டனை என நீதிமன்றிற்கு வெளியே உரையாடப்படுகின்றது.
அத்தகைய காலப்பகுதிக்கூட வெள்ளையின அமெரிக்கர்களின் அரசியல் கலாசாரத்தை மாற்றிவிட போவதில்லை , அதே நேரம் கறுப்பர்களின் அணுகுமுறைகளும் அவர்களின் நியாயப்பாடும் அவர்கள் சார்ந்த அரசியல் சமூக பொருளாதார காரணிகளால் தீர்மானிக்க கூடியது. அத்தகைய தீர்மானத்தை நோக்கி அமெரிக்க கறுப்பர்கள் பயணிப்பதே நியாதிக்கமான சமூக பரப்பை சாத்தியப்படுத்தும்.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்