உலக அரசியலில் அமெரிக்க தனித்துவம் என்பது முடிவுக்கு வந்து பலதுருவ ஒழுங்குக்கான போக்கொன்றை கொவிட்-19தொற்றின் காலம் வரை காண முடிகிறது. அத்தகைய உலக ஒழுங்கும் கொவிட்-19தொற்றுக்கு பின்னர் குழப்பமடைந்ததோடு மட்டுமன்றி அமெரிக்கா எதிர் சீனா போட்டி என்பது குழப்பகரமான சூழலுக்குள்ளால் நகர்வதை அவதானிக்க முடிகிறது. அதாவது உல ஒழுங்கு தெளிவானதொரு வடிவத்தை உறுதிப்படுத்த முடியாத குழப்பகரமான சூழலுக்குள் அகப்பட்டுள்ளது. இத்தகை குழப்பம் குறிப்பிட்ட காலப்பகுதி உலக அரசியலில் நிலைத்திருப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால், அத்தகைய போட்டியில் அமெரிக்கா முழுமையாக பின்வாங்காதமையையும் சீனா முழுமையாக முன்னிலைப்படாத சூழலையும் கண்டுகொள்ள முடிகிறது. இக்கட்டுரையும் ஜோ பைடன் தலைமைக்கு பின்னரான அமெரிக்காவின் சமகாலத்தில் நிகழும் போட்டிக்கான முனைப்புக்களை தேடுவதாக உள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பர் 9-, 10 (2021)ஆம் திகதிகளில் மெய்நிகர் வழியில் ஜனநாயகம் தொடர்பிலான மாநாடொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளார். அம் மாநாட்டில் சீன மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுவதோடு அமெரிக்காவின் நெருங்கிய நட்புறவில் உள்ள அநேகமான நாடுகள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, நேட்டோவில் அங்கத்தும் வகிக்கும் நாடான துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் விலக்கழிக்கப்பட்டதோடு மேற்காசியாவில் இஸ்ரேல் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா சர்வதேச அரசியல் பரப்பில் ஒரு புதிய வியூகத்தை வகுப்பதாக தெரிகின்றது. குறிப்பாக, வன் அதிகாரத்தை முதன்மைப்படுத்திய அமெரிக்கா, சீனாவின் பாணியில் மென் அதிகார தளத்தை முதன்மைப்படுத்த திட்டமிடுகிறது. மனித உரிமைகளை முன்னிறுத்தி வெளியுறவுக்கொள்கையை வகைப்படுத்த முயலும் அமெரிக்கா பொருளாதார ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் உட்கட்டமைப்பு விருத்தியினையும் செய்வதன் மூலம் உலக நாடுகளோடு நெருக்கமான ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடுகின்றது. சீனாவின் Win Win உபாயமும், பட்டி மற்றும் சாலை முன்முயற்சியும் உலக நாடுகளை ஈர்த்துக்கொள்ளவே வெற்றிகரமாக செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. எனவே இதனை முறியடிக்க அமெரிக்கா பைடன் நிர்வாகத்திற்கு குழப்பமான சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவை நிலைநிறுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
போரும் படையெடுப்பு அச்சுறுத்தலும் கொண்ட உலகம் முடிவுக்கு வந்த போதிலும், அமெரிக்கா மென் அதிகாரத்தையும் வன் அதிகாரத்ரைதயும் இணைத்த Smart Power என்று அழைக்கப்பட்ட ஒரு உபாயத்தின் மூலம் பனிப்போர் காலத்தை எதிர்கொண்டது. ஆனால் சீனாவின் வீரியமான பாய்ச்சலும் விவேகமான நகர்வும், அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளை நெருக்கடிக்கு தள்ளியதோடு தவிர்க்க முடியாது மென் அதிகாரம் நோக்கி செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் தள்ளியது. எனவே, அமெரிக்க நிர்வாகம் உலகளாவிய போரியல் முறைகளையும் படைக் குறைப்பையும் வன்அதிகாரமற்ற சூழலையும் உருவாக்கும் நடவடிக்கைகளை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜின் பிங்கை 16 -நவம்பர்(2021) மெய்நிகர்வழியில் சந்தித்து உரையாடிய உரையாடல்களும் சீனாவுடன் ஓர் இராஜதந்திர ரீதியிலான நகர்வை முன்னெடுப்பதற்கு தயாராவதை காணமுடிந்தது. அதனையே அம்மாநாட்டில் இரு தலைவர்களும் அடைய முயன்றதாகவும், அதில் அமெரிக்காவின் பங்கு அதிக எதிர்பார்க்கை உடையது என்றும் கருதப்படுகிறது.
ஆனால், தைவான் விவகாரம் இருநாட்டுக்குமான புரிதலை பலவீனப்படுத்தியதோடு சீனாவின் எச்சரிக்கையை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தையும் இது ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஜின்பிங்கின் எத்தனம் அமெரிக்காவின் உலக அரசியலை நிலைநிறுத்துவதோடு போர் அற்ற உலக ஒழுங்குக்கான நிபந்தனைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. அத்தகைய முயற்சியில் சீனாவிடம் அமெரிக்கா தோற்றாலும், உலக அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமாறு காலத்தை அமெரிக்காவிற்கு இயைபாக்குவதில் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தோ -பசுபிக் உபாயத்தினூடாக குவாட் கட்டமைப்பையும், தெற்கு குவாட் கட்டமைப்பையும் விருத்தி செய்ததோடு ஆக்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் அண்மைக் காலங்களில் அமெரிக்கா முதன்மைப்படுத்தியுள்ளது. சீனாவோடு அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள விரிசலை தணிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஜோ பைடன் செயற்பட்டு வருகிறார்.
இதனூடாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான போரை தவிர்ப்பதுவும், போருக்கான எத்தனங்களை முடிவுக்கு கொண்டு வருவதும், இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் அதனூடாக தைவான், ஹொங்கொங் போன்ற விவகாரங்களை அமெரிக்கா சீனாவுடன் அணுக திட்டமிடுகிறது. இவை அனைத்தும் போரற்ற நகர்வாகவே காணப்படுகிறது.
மேற்குறித்த அணுகுமுறையை ரஷ்யாவுடன் பின்பற்ற முயலும் பைடன் ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் உரையாடலை மேற்கொள்வதற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இத்தகைய உரையாடலின் உள்நோக்கங்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக உக்ரைனை மையப்படுத்தி ரஷ்யாவின் படைக்குவிப்பும், ஆயுதங்களின் பரிசோதனையும், இராணுவங்களின் நடமாட்டமும் பாரிய யுத்தமொன்றுக்கு ரஷ்யா தயாராகுவதை கோடிட்டு காட்டுகிறது. அதுமட்டுமன்றி முடிந்த ஆண்டிலிருந்து ஹைப்பர்சொனிக் விமானங்களையும் ஏவுகணைகளையும் பாரிய அளவில் பரிசோதித்து வருகிறது. அத்தோடு அணுவாயுதத்தின் பிந்திய வளர்ச்சியையும் போரியல் ஆயுதங்களின் தொழில்நுட்ப ரீதியிலான உருவாக்கங்களையும் ரஷ்யா அதிகரித்து வருவதுடன் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனைகளையும் அண்மைக்காலத்தில் மேற்கொண்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பா முதல் மேற்கு ஆசியா வரை ரஷ்யாவின் போக்கு என்பது அதீத அச்சுறுத்தலை இராணுவ ரீதியில் அமெரிக்காவிற்கு ஏற்படுத்தி வருகிறது. குழம்பி இருக்கும் உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கு எதிரான இராணுவ உபாயங்களை அதிகம் பிரயோகிக்கும் நாடாக ரஷ்யாவே விளங்குகின்றது. புடினுடனான ஜெனிவா சந்திப்பிலும் அதன் பின்னரான காலப்பகுதியிவும் ரஷ்யாவை அமெரிக்கா இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு முயலுகிறது.
எனவே இத்தகைய செயல்முறையில், அமெரிக்காவையும் புடினையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கான உரையாடல் களமாகவும் போரற்ற முனைப்புக்களை ஏற்படுத்துவதற்கான எண்ணமாகவும் பைடனுடைய இரஜதந்திர உரையாடல் அழைப்பும் காணப்படுகிறது.
இதேநேரம், புடினது அணுகுமுறை சீனாவோடு மட்டுமன்றி இந்தியாவோடும் முதன்மைப்படுத்தப்படுகிறது. எஸ்-400ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய உடன்பட்டிருப்பது அமெரிக்கா-இந்திய உறவை நெருக்கடியாகவும், சீன-, ரஷ்ய உறவின் முரண்பாட்டுக்கான பின்புலமாகவும் அமைய வாய்ப்புள்ளதென மேற்குலக ஊடகங்கள் கருதுகின்றன. எதிர்வரும் வாரங்களில் புடினது இந்திய விஜயம் அத்தகைய சூழலை மேலும் பலப்படுத்த வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குழம்பி இருக்கும் உலக ஒழுங்கில் சீனா பொருளாதார ரீதியாக அமெரிக்காவையும் மேற்கையும் கையாள, ரஷ்யா இராணுவ ரீதியாக அமெரிக்காவையும் மேற்கையும் கையாள முயலுகிறது. இத்தகைய அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளுடனேயே அமெரிக்க ஜனாதிபதி பைடன் சீன, ரஷ்ய ஜனாதிபதிகளுடனான சந்திப்பு, ஜனநாயகத்துக்கான மாநாடு மற்றும் காலநிலை மாநாட்டு பிரதிபலிப்புக்களை ஒரே கோட்டில் அமெரிக்க நலனுக்குள் நெறிப்படுத்த திட்டமிடுகிறார்.
எனினும் அவ்வகை திட்டங்கள் ஒவ்வொன்றையும் ரஷ்யாவும், சீனாவும் இணைந்தும் தனித்தும் முறியடித்து வருகின்றன. அமெரிக்காவை பொறுத்தவரை போரற்ற சூழல் ஒன்றுக்கான உலகை உருவாக்குவதே பிரதான நோக்கமாக உள்ளது. அதற்கு பின்னால் அமெரிக்கா ஒரு போரை எதிர்கொள்ள தயாரில்லை என்பதுவும், அவ்வாறானதொரு போர் ஏற்படுமாக இருந்தால் அத்தகைய போரை நிகழ்த்தும் சக்திகள் உலக ஒழுங்கின் சக்திகளாக மாறுவார்கள் என்ற மதிப்பீடும் அமெரிக்காவிற்கு உண்டு.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்